திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

தேச வளர்ச்சியின் ஒரே நம்பிக்கை விவசாயமே...

நாடு விடுதலை பெற்றது முதல் கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மிக மிக மோசமான அளவிற்குசுருங்கியிருப்பது இப்போதுதான் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020-21ஆம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7சதவீதம் சுருங்கி மிகக்கடுமையான விளைவுகளைஏற்படுத்தியுள்ளது. இதை இந்தியாவின் தேசியபுள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள முதன்மை மதிப்பீட்டு அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஐஎம்எப், உலகவங்கி, ஆசியவளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிதி அமைப்புகளும், இதைவிட இன்னும் கூடுதலாகவே இந்தியப் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் 4.2சதவீதம் அளவிற்கு சுருங்கியிருந்த இந்தியப் பொருளாதாரம் இப்போது 7.7சதவீதம் என்ற அளவிற்கு மிகமோசமாக சுருங்கியிருப்பது 1951-52க்குப் பிறகு முதல்முறையாக நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பு 1979-80ல் 5.2சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. ஆனால் முதல்முறையாக மிக அதிகஅளவு பொருளாதார வீழ்ச்சி இப்போதுதான் பதிவாகியிருக்கிறது. இதுதான் நரேந்திர மோடி அரசின் சாதனை. இந்தியாவின் மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பு நீக்கம், ஜிடிபி அமலாக்கம் ஆகிய இருபெரும் கொடிய காரணங்கள்அடிப்படையானவை. இவற்றுடன் கொரோனா ஊரடங்கு முற்றிலும் திட்டமிடல் இன்றி அமலாக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் அனைத்துத் துறைகளும் வரலாறு காணாத வீழ்ச்சியையும் பாதிப்பையும் சந்தித்துள்ளன. அதன் நேரடி மற்றும் மறைமுக விளைவுகள் ஒவ்வொரு நாளும் கோடானுகோடி மக்களை சொல்லொண்ணாத் துயரத்திற்குள் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றன.

மறுபுறம் இத்தனை பெரிய வீழ்ச்சியிலும் ஒரே ஒரு துறை மட்டும்தான் நம்பிக்கை அளிக்கக்கூடிய வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது என்றுதேசிய புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அந்தத் துறை வேறு எதுவும் அல்ல, இந்திய நாட்டின் மாபெரும் விவசாயத்துறைதான். அதனால்தான் வேறு எந்தத் தொழிலையும் விட இந்திய விவசாயத்தை, அதன் உற்பத்தியை, ஒட்டுமொத்த நிலங்களை கபளீகரம் செய்துகொள்ளை லாபத்தை மேலும் மேலும் குவித்திட வேண்டும் என்ற வேட்கையோடு அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் வாய்பிளந்து காத்திருக்கின்றன. இவர்களுக்கு சேவகம் செய்வதைத் தவிர வேறு எதுவும் அறியாத மோடி அரசு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலங்களை பறிக்கவும், உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் மற்றும்  விற்பனை சந்தையை முற்றாக மேற்கண்ட மோடி அரசின் கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவும்தான் மூன்று கொடிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தனது கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகளுக்கு மட்டும் ரூ.10லட்சத்து 10ஆயிரத்து 553 கோடி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. மறுபுறம் தேச வளர்ச்சியின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் விவ சாயத்தை அழித்தொழிக்கிறது. நமது பேரெழுச்சியின் அடிப்படைக் காரணம் இதுதான்.

;