games

img

BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டைப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் 

BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஶ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கமும், லக்‌ஷயா சென் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

2021 உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூர் வீரர் லோக் கீன் யூவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். 43 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், முதல் கேமை 21-15 என சிங்கப்பூர் வீரர் கைப்பற்றினார். இரண்டாவது கேமில், ஒருகட்டத்தில் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். எனினும் சிங்கப்பூர் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22-20 எனத் தொடரைக் கைப்பற்றித் தங்கப்பதக்கம் வென்றார்.

இறுதிப்போட்டி வரை முன்னேறிய கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், ஆடவர் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். மேலும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் மூன்றாவது இந்தியர் என்னும் பெருமையை ஶ்ரீகாந்த் பெற்றுள்ளார். இதற்கு முன் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வெள்ளி வென்றிருக்கின்றனர். பி.வி சிந்து 2019 ஆம் ஆண்டு தங்கம் பதக்கமும் வென்றார். 

மற்றொரு பக்கம் இந்த போட்டியின் அரையிறுதியில் லக்சயா சென் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்தைப் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பி. வி.சிந்துவிற்குப் பிறகு அறிமுகத் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் லக்சயா சென் பெற்றுள்ளார். 

;