games

img

தேசத்தின் பெருமை நிக்ஹத் ஜரீன்! - சி. ஸ்ரீராமுலு

“இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். ஆம்!அது உண்மைதான் என்பதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார் 25 வயதாகும் இளம் குத்துச்சண்டை வீராங்கனை நிக்ஹத் ஜரீன்”. மதச்சார்பின்மைக்கு அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நிஜாமாபாத் நகரின் தெற்கில் உள்ள நிஜாம்பாத் கோட்டையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் நிக்ஹத் ஜரீன்.‌ குத்துச்சண்டை விளையாட்டு பாரம்பரியமும் கொண்டது அவரது குடும்பம். சிறு வியாபாரம் செய்து வருகிறார் இவரது தந்தை முகமது ஜமீல் அகமது. அம்மா பர்வீன் சுல்தானா. இவர்களுக்கு 4 குழந்தைகள். அதில் மூன்றாவது மகள் நிக்ஹத் ஜரீன். 

பயிற்சியும் களமும்...

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் முகமது  ஹுசாமுதீனும் நிஜாம்பாத் நகரைச் சேர்ந்தவர். அதுமட்டுமின்றி, மிக நெருங்கிய உறவினர். அவரது பயிற்சியை பார்த்து வளர்ந்ததால் குத்துச் சண்டையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்‌ ஜரீன். நிஜாமாபாத்தில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து ஹைதராபாத் ஏவி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தாலும்  குத்துச்சண்டையில் ஆர்வமாக இருந்திருக்கிறார் . இதை பார்த்த அவரது தந்தை தானே ஓராண்டுகாலம் பயிற்சி கொடுத்து ஊக்கம் தந்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே குத்துச்சண்டை விளையாட்டில் சிறந்த வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என்பது தந்தையின் விருப்பம்.  இந்த லட்சியத்துடன் 15 வயதில் விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு பயிற்சி கொடுத்து வந்த துரோணாச்சார்யா விருது பெற்ற ஐ.வி.ராவிடம் முறைப்படி பயிற்சியை துவக்கினார். பயிற்சியில் சேர்ந்து ஓராண்டில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட நிக்ஹத் ஜரீனுக்கு‌ 2010ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த தேசியப் போட்டியில் ‘மிகச் சிறந்த இளம் வீராங்கனை’ விருதும்  அங்கீகாரமும் கிடைத்தது.

வெற்றியும்-பதக்கமும்..

ஆண்டு துருக்கி நாட்டில் நடந்த பெண்கள் ஜூனியர் மற்றும்  இளைஞர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஃபிளை வெயிட் பிரிவில் வரிசைகட்டி நின்ற சாம்பியன்கள், ஜாம்பவான்களோடு கோதாவில் இறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  துருக்கி வீரரோடு கடுமையாக போராடி மூன்று சுற்றுகளுக்கு பிறகு வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். இதுவே அவரது முதல் தங்கப்பதக்கமாகும். மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு சிரியா நாட்டில் நடந்த சர்வதேச போட்டியில் மீண்டும் பங்கேற்றார். 51 கிலோ எடைப்பிரிவு சாம்பியன்ஷிப் போட்டி அது. பல்வேறு நாடுகளில் முன்னணி வீரர்களை எதிர்கொண்ட போதிலும் சளைக்கவில்லை. குத்துக்களை சரமாரியாக தொடுத்தார். இறுதியாக’கோல்ட் மெடல்’ அடித்தார். அப்போது அவருக்கு வயது 18. அதே ஆண்டில் பல்கேரியாவில் நடந்த இளைஞர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்  போட்டியில் ஐரோப்பியாவின் ஜாம்பவான்களுடன் முட்டி மோதி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். எப்படியும் தங்கத்தை தட்டுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ரஷ்யா எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் தோல்வியுற்றதால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 2016ஆம் ஆண்டு அசாமில் நடந்த சீனியர் தேசிய  சாம்பியன் குத்துச்சண்டை விளையாட்டில் சொந்த மண்ணில் தங்கப் பதக்கத்தை உச்சி முகர்ந்தார். 2017ஆம் ஆண்டில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும், 2019 ஆம் ஆண்டு பாங்காங்கில்  தாய்லாந்து ஓபன், பல்கேரியாவில் ஸ்ட்ரான்ராஜா நினைவு குத்துச்சண்டை போட்டி என்று வரிசையாக பங்கேற்பு அனைத்தையும் தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களையும் அடுத்தடுத்து நிலைகுலைய செய்து தங்கம், வெள்ளிப் பதக்கங்களை தட்டி வந்தார்.  அதன் பிறகு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தையும் வென்றார் ‌

சோதனைக் களம்...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப்போட்டிகளுக்கு ஏற்பாடுகள் தடாலடியாக நடைபெற்றது. பெரிய சாதனையாளர் யாராக இருந்தாலும் சலுகைகள் வழங்கக் கூடாது. அவரையும் தகுதிப் போட்டியில் விளையாட அனுமதித்து சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். அத்தகைய போட்டியாளர்களுடன் மோதவும் தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார் நிக்ஹத் ஜரீன். மேலும்,  அன்றைய ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பினர். இது விளையாட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. சக விளையாட்டு வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் பதற்றம் அடைந்தனர்.  சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசியதுடன் நெருப்பை மூட்டி அந்தத் தீயில் எண்ணெய்யை ஊற்றாமல் வறுத்து எடுத்தனர். ஒரு படி மேலே சென்ற நட்சத்திர வீராங்கனை மேரி கோம், யார் இந்த நிக்ஹத் ஜரீன் என்று கிண்டலடித்தார். எதைப்பற்றியும் கவலைப்படாத அந்த இளம் கன்று, தான் முன்வைத்த காலை பின் வைப்பதில்லை என்று முடிவெடுத்தது. தகுதிச் சுற்றுப் போட்டியில் தம்மை எதிர்கொண்ட மேரி கோமிடம் விழுந்ததால் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த நிக்ஹத் ஜரீனின் குத்துச்சண்டை வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டது என்று பலர் ஏளனம் செய்தனர். ஆனால் அவர் மனம் தளரவில்லை. கண் சோர்ந்து போகவில்லை.

அடுத்த இரண்டு ஆண்டு காலம் ஆட்டத்தின் நுணுக்கங்களில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தினர். போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. எந்த இடத்தில் தடுமாறினார் என்பதை அறிந்து அதற்கு மாற்று நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மேலும் மேலும் தன்னை தகுதிப்படுத்திக்  கொண்டார். விளையாட்டு உலகம், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசின. அந்த துன்பமான காலகட்டத்தில் அவருக்கு ஆதரவாய் பெற்றோர் இருந்ததால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டார். அதன் விளைவுதான், உலக குத்துச்சண்டை போட்டியின் தொடக்கச் சுற்று முதல் இறுதியாட்டம் வரைக்கும் சந்தித்த மெக்சிக்கோ, இங்கிலாந்து, பிரேசில், தாய்லாந்து வீரர்களை வரிசையாக தோற்கடித்தது மட்டுமின்றி ஒரு சுற்றையும் ஒரு செட்டையும் கூட விட்டுக் கொடுக்காமல் 5-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். குத்துச்சண்டை போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோம், சரிதா தேவி, லேகா, ஜென்னி ஆகியோர் வரிசையில் ஐந்தாவது வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார். எதிர்காலத்தில் மேரி கோம் போன்று நிக்ஹத் ஜரீனும்பிரபலமாக பேசப்படுவார் என்று அன்று கூறியதை இன்று நிரூபித்தும் காட்டியிருக்கும் இந்த இளம் வீராங்கனையின் ஒலிம்பிக் லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்.


 

 

;