games

img

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து....

நாகர்கோவில்:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள 11 தமிழ்நாட்டு வீரர்கள் உள்ளிட்டஇந்திய விளையாட்டு வீரர்களுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
நாகர்கோவிலில் சனிக்கிழமை (ஜுலை 10)செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன்மேலும் கூறியதாவது: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இம்மாதம் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் உட்பட இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகள்.

‘பிரதமரே பொறுப்பு’
கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய மத்தியசுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உண்மையில் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் பிரதமர் மோடிதான். கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதல்அலை வந்தபோது தெரியாது என்று கூறலாம்;ஆனால் இரண்டாவது அலை குறித்து முன்னதாகவே வல்லுநர்களும் மருத்துவர்களும் எச்சரித்த பிறகும்கூட ஒன்றிய அரசு சரியாக நடவடிக்கை எடுக்காததுதான் தொற்றும் மரணமும்அதிகரிக்க காரணம். இதுவரை 3 கோடிப்பேருக்குமேல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 லட்சத்து 7 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இதுவே குறைவான மதிப்பீடுதான். உண்மையான பாதிப்பு இதைவிட 2 முதல் 3 மடங்கு வரைஇருக்கலாம்.  நாட்டில் கொரோனா முதலாவது அலையின் போது ‘கோ கொரோனா’ என்று கூறியும் கைதட்டியும் விளக்கு ஏற்றியும் பெருந்தொற்றை விரட்டி விடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, கொரோனாவை வெற்றி கொண்டு உலகை காப்பாற்றிவிட்டதாக மோடி பேசினார். எனவே, சுகாதார அமைச்சர் மட்டுமல்ல பிரதமரே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பதவி விலக வேண்டும்.

பொருளாதாரம் கடும் வீழ்ச்சி
கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளிலேயே இந்திய பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2020-21 இல் மைனஸ் 7.3 சதவிகிதமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2021-22 நிதியாண்டிலும் குறைய வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றின் போதுமக்களை பாதுகாக்க முன்வராத மோடி அரசால்பொருளாதார வீழ்ச்சியையும் தடுக்க முடியவில்லை. சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள்வேலை இழந்து வருவாய் இழந்து தவிக்கும்பின்னணியில் அவர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரித்தால்தான் வாங்கும் சக்தி அதிகமாகும்.பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதற்குமாறாக சங்கிலித் தொடர்போல் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது மோடி அரசு. இந்த சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வருமான வரி வரம்புக்குள் வராத மக்களுக்கு மாதம் ரூ.7500 நிவாரணமாக இந்த ஆண்டுமுழுவதும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுதான் உதவி செய்யும் என கூறினால் ஒன்றிய அரசு ஏற்கவில்லை. கடுமையான நிர்ப்பந்தத்துக்கு பிறகுதான் உணவு தானியங்கள் வழங்க ஒத்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு. உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்க முன்வந்திருக்கிறது ஒன்றிய அரசு.

அமித்ஷா மீது நடவடிக்கை தேவை
என்ஐஏ என்கிற தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்பொறுப்பு வகிக்கிறார். அந்த அமைப்புதான் பீமாகோரேகான் வழக்கில் புகழ்பெற்ற 16 சமூக ஆர்வலர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக 30ஆண்டுகளுக்கு மேல் உழைத்த ஸ்டான் சுவாமியை மருத்துவ காரணங்களுக்காககூட ஜாமீன் அனுமதிக்காமல் சிறையில் உயிரிழக்கச் செய்திருக்கிறார்கள். சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழக்க காரணமான காவல்துறையினர் மீது வழக்குபதிவு செய்ததோடு கைது செய்யப்பட்டார்கள். அதுபோல் என்ஐஏ அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். என்ஐஏவுக்கு நேரடியாக பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கே தமிழ்?
தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. ஒன்றிய அரசு நேரடியாகநடத்தும் பள்ளிகள் இவை. அண்மையில் மனதின் குரல் நிகழ்வில் பேசிய பிரதமர் தமிழ்மீதுஎன்னுடைய அன்பு ஒருபோதும் குறையாது என்று கூறினார். இது உண்மையென்றால் 49 கேந்திரியா வித்யாலயங்களிலும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும் ஏன் தமிழை பாடமொழியாக கூட வைக்கவில்லை. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தில்லியில் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து இந்த பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக வைக்க வேண்டும் எனசரியாகவே வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசுஇந்த பள்ளிகளில் தமிழை பாட மொழியாகவேனும் அறிவிக்க வேண்டும்.

கோயில் வளாகங்களில் ஆர்எஸ்எஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுக்கான அதிகாரி அன்புமணி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்மீது உறுதியான நடவடிக்கை தொடர வேண்டும். ஆலய முறைகேடுகள் குறித்து அண்மையில் திருக்கோவில் பணியாளர்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு புகார் மனு அளித்திருக்கிறார்கள். அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். திருக்கோவில்களில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் நடத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு வழிபாட்டு இடத்தை எந்த ஒரு அமைப்பும் தங்களுடைய நோக்கத்துக்காக பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் கோயில் வளாகங்களில் இத்தகைய முகாம்கள் நடத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது  குமரி மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ரேசன் கடைகளில் தரமான அரிசிவழங்க வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன்  கூறினார். 

;