games

img

டென்னிஸ் உலகின் “ஸ்டைலிஷ் மேன்” கண்ணீருடன் விடை பெற்றார்

டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது 26 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கைக்கு கண்ணீருடன் ஓய்வு கொடுத்து விடைபெற்றார். தனது கடைசி டென்னிஸ் போட்டியான லேவர் கோப்பை தொடரில் ஐரோப்பிய அணி சார்பாக களமிறங்கிய ரோஜர் பெடரர், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் இணைந்து, உலக அணி சார்பில் களமிறங்கிய அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக் சாக் ஜோடியிடம்  6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தோல்வியுடன் கண்ணீர் மல்க விடைபெற்றார்.

பெடரர் வென்ற பட்டங்கள்

  1.  மொத்தம் - 103
  2.  கிராண்ட்ஸ்லாம்  - 20
  3.  ஆஸ்திரேலியா - 6 (2004,2006,2007,2010,2018)
  4.  பிரெஞ்சு - 1(2009)
  5.  விம்பிள்டன் - 8 (2003,2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017)
  6.  அமெரிக்கா -5 (2004,2005,2006,2007,2008)
  7.  இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லவில்லை
  8.  ஒலிம்பிக் : 2 பதக்கம் (பெய்ஜிங் 2018 - தங்கம்), (லண்டன் 2012 - வெள்ளி)
  9.  உலக தரவைரிசையில் 310 வாரம் முதலிட சிம்மாசனத்தில் அமர்ந்து வரலாறு படைத்தார்.
  10.  டென்னிஸ் விளையாட்டில் ரோஜர் வென்ற பரிசுத்தொகை : ரூ.1,061 கோடி

பெடரருக்காக  அழுத நடால்

டென்னிஸ் உலகில் கிட்டத்தட்ட 10 வருடங்க ளுக்கு மேல் உலகில் எலியும், பூனை யுமாக இருந்தவர்கள் பெடரர் - நடால். அதிரடி, ஆக்ரோஷம், வாக்குவாதம் என அனைத்திலும் எதிர் எதிராக தான் இருப்பார்கள். முகம் கொடுத்து பேசிக்  கொள்ள மாட்டார்கள். ஆனால் லேவர் கடைசி போட்டியில்  உடன்பிறந்த சகோதரர் போன்று விளையாடி, பெடரரின் ஓய்வை பொறுத்துக் கொள்ள முடியாமல் நடால் கண்ணீர் விட்டுக் கத றினார். இதனை கண்ட ரசிகர்களும் மைதானத் தில் கண்ணீர் வடித்தனர்.

“ஸ்டைலிஷ் மேன்”  -  ஷார்ட்ஸ் 

  1.  வெற்றி, தோல்வி இரண்டையும் பெடரர் ஒரே மனநிலையில் எடுத்துக் கொள்வார். 
  2.  மைதானத்தில் அதிகம் கோபப்பட மாட்டார். 
  3.  சர்ச்சைகளுக்கும் பெடரருக்கும் நெருக்கம் கிடையாது. 
  4.  வலது கை பழக்கம் கொண்ட வீரரான பெடரர் யாரும் செய்ய முடியாத லெக் பக்கம் பந்தை திருப்பும்          வித்தியாசமான திறன் கொண்டவர். 
  5.  விம்பிள்டன் தொடரை விரும்பி விளையாடுவார். 
  6.  களிமண் தரையிலான பிரெஞ்ச் ஓபன் ஆகவே ஆகாது. இந்த தொடரில் ஒரே ஒரு பட்டம் மட்டுமே         வென்றுள்ளார். 
  7.  பெடரர் விளையாடும் களத்தில் பால் பாய்ஸ்களுக்கு வேலையே கிடையாது. அவரே பந்தை பால்         பாய்ஸ்களுக்கு திருப்பி விடுவார்.

பால் பாய் டூ மிரட்டல் நாயகன்

​​​​​​​
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி ராபர்ட் - லைநெட் ஜோடிக்கு மகனாக பிறந்த ரோஜர் பெடரர் (1993-94) ஓராண்டு காலம் பால் பாயாக (டென்னிஸ் பந்து எடுத்துப் போடுதல்) இருந்தார். அதன் பின்பு சுவிஸ் குடிமக்களின் கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பி, சிவில் பாதுகாப்புப் படையில் பணியாற்றினார். 1996-ஆம் ஆண்டு டென்னிஸ் மட்டையை நிரந்தரமாக கையில் எடுத்த ரோஜர் பெடரர், 2 ஆண்டு கால கடுமையான போராட்டத்திற்கு பிறகு 1998-ஆம் ஆண்டு விம்பிள்டன் (ஜூனியர் - ஒற்றையர், இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும்) முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். அதே ஆண்டில் (1998) ஏடிபி சர்வதேச போட்டிகளில் காலடி எடுத்து வைத்த ரோஜர், ஸ்விஸ் ஓபனில் களமிறங்கி முதல் சுற்றிலேயே வெளியேறினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மிக குறுகிய காலத்தில் 1998  செப்டம்பர் 20-ஆம் தேதி டென்னிஸ் தரவரிசையில் முதல் 100 இடங்களை பிடித்து அசத்தினார்.

தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்ட ரோஜர் 2001-ஆம் ஆண்டு ஹோப்மேன் டீம் தொடரில் பட்டம் வென்று அசத்தினார். இதுதான் பெடரரின் முதல் சர்வதேச பட்டமாகும். பல்வேறு சிக்கல், போராட்டத்திற்கு இடையே 2003-ஆம் ஆண்டு அதிக பரிசுத்தொகை கொண்ட கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டனில் பட்டம் வென்று வரலாறு படைத்தார். தொடர்ந்து வேகம் காட்டிய பெடரர் 2010-ஆம் ஆண்டு வரை அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸில் அபாயகரமான வீரரானார்.  2003 முதல் 2012-ஆம் ஆண்டு வரை 9 வருடங்களில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று பிரம்மாண்ட வரலாறுச் சாதனை படைத்தார். அதன் பிறகு காயம், பார்ம் பிரச்சனை என சற்று பிரேக் எடுத்தார். இந்த பிரச்சனையில் இருந்து மீள்வார் என டெனிஸ் உலகம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. காரணம் அந்த காலத்தில் ஜோகோவிச், நடால் இணைந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். மனதளவில் திடீர் உத்வேகம் பெற்று மிரட்டல் பார்முடன் 2017-ஆம் ஆண்டு மீண்டும் களமிறங்கிய பெடரர், 2017 (ஆஸ்திரேலியா, விம்பிள்டன்), 2018-ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் தொடரை கைப்பற்றி மிரட்டினார். அதன் பிறகு கொரோனா கொஞ்சம் விளையாட, ஓய்வில் இருந்த பெடரர் மீண்டும் பார்ம் பிரச்சனையுடன் 2021-ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரின் காலிறுதி வரை போராடி காயத்தால் வெளியேறினார். இதுதான் பெடரரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடராகும். அதன் பிறகு டென்னிஸ் உலகில் இருந்து விலகி இருந்த நிலையில், 2022 செப்., 2-வது வாரத்தில் ஓய்வை அறிவித்து லேவர் கோப்பையோடு கண்ணீருடன் விடைபெற்றார். ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து 2 டென்னிஸ் ஜாம்பவன்கள் (செரீனா வில்லியம்ஸ்) விடைபெற்றுள்ளதால் டென்னிஸ் உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 


 

;