games

img

விளையாட்டு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு?
இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

டெஸ்ட் தொடரின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) 2019 முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை இணைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. 2019 முதல் 2021 வரை நடைபெற்ற முதல் சீசனில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.  இந்நிலையில், 2-வது சீசனில் (2021 முதல் 2023) இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இறுதிக்கு முன்னேறிய நிலையில், இறுதி ஆட்டம் புதனன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொடங்குகிறது. சமீபகாலமாக இரு அணிகளும் எலியும், பூனையுமாக இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா
(நாள் : ஜூன் 7 முதல் 11 வரை)
நேரம் : மதியம் 3:00 மணி 
இடம் : லண்டன் ஓவல் மைதானம், இங்கிலாந்து
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்

யாருக்கு வாய்ப்பு?

இரு அணிகளும் சரிசம அளவில் பலமாக இருப்பதால் யாருக்கு கோப்பை என திடமாக ஆருடம் கூட கூற முடியாது. எனினும் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வெல்ல சற்று கூடுதல் சாதகம்  உள்ளது. காரணம் ஆஷஸ் மற்றும் இங்கிலாந்து மண்ணில் மிக அதிகளவிலான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய அனுபவம் கொண்டுள்ளதாலும், இங்கிலாந்து மண்ணின் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களும் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற 65% வாய்ப்பு உள்ளது. இந்திய அணி பலமாக இருந்தாலும் பார்ம் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் வீரர்கள் பலர் ஆடும் லெவன் தரத்தில் உள்ளனர். பார்ம் பிரச்சனையை சரி செய்தாலே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை எளிதாக வென்றுவிடும்.

மைதானம் எப்படி?

இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமானது ஆகும். முக்கியமாக பேட்டர்களுக்கு இந்த மைதானம்  ஒத்துழைக்காது. காரணம் மைதானத்தின் தன்மை ஒரே நிலையில் இருக்காது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மைதானம் அடிக்கடி மாறுவதால் பந்து தாறுமாறாக எகிறும். ஆஸ்திரேலிய வீரர்கள் லண்டன் ஓவல்  போன்ற உயிரோட்டமான ஆடுகளங்களில் அதிகம் விளையாடி பழக்கமுடையவர்கள். ஆனால் இந்தியர்களில் கோலி, ரோஹித், ரஹானே ஆகியோர் மட்டுமே உயிரோட்டமான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் உடையவர்கள். மற்ற வீரர்களுக்கு போதிய அளவு அனுபவம் கிடையாது என்பதால் இந்திய வீரர்கள் கவனமாக விளையாடினால் கோப்பையை வெல்ல முடியும்.

மிரட்டும் மழை

இங்கிலாந்து நாட்டில் தற்போது மழை சீசன் என்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மொத்தம் 5 நாட்களில் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்படலாம் என்பதால்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சுவாரஸ்யத்தை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நடைபெறும் லண்டன் நகரின் 5 நாட்களின் வானிலை நிலவரம்

07.06.2023 (புதன்)  மழைக்கு வாய்ப்பில்லை
08.06.2023 (வியாழன்)  லேசான அளவில் மழைக்கு வாய்ப்பு
09.06.2023 (வெள்ளி) 50% மழைக்கு வாய்ப்புள்ளது
10.06.2023 (சனி) 60% மழைக்கு வாய்ப்புள்ளது
11.06.2023 (ஞாயிறு) 65% மழைக்கு வாய்ப்புள்ளது


 

;