“ஜியோ”வின் இலவசம் வேண்டாம்: “ஹாட் ஸ்டார்” வேண்டும்
கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த வெள்ளியன்று தொடங்கியது. கடந்த சீசனில் தொலைக்காட்சி, ஓடிடி ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வைத்திருந்தது. ஆனால், நடப்பாண்டு சீசனில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. ஓடிடி உரிமையை பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான அம்பானிக்கு சொந்தமான ஜியோ சினிமா ரூ. 23,758 கோடிக்கு கைப்பற்றியது.
‘தடங்கலும்’ இலவசம்!
பிபா உலகக்கோப்பையை இலவசமாக வழங்கியது போல வேறு சந்தா தொகை எதுவுமின்றி ஜியோ சினிமா ஐபிஎல் தொடரை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. ஆனால், ஓடிடி ஒளிபரப்பை இலவசமாக அறிவித்தது போல தடங்கலும் இலவசம் என்று முன்கூட்டியே அறிவிக்க தவறிவிட்டது ஜியோ நிறுவனம். காரணம் 16-வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலேயே (சென்னை - குஜராத்) ஒளிபரப்பு தடங்கல் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து சனிக்கிழமையன்று நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டது. இதனால் பொறுமையிழந்த ரசிகர்கள் ஐபிஎல் நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கத்தில் புகார் மழை பொழிந்தனர். ரசிகர்களின் புகார் டுவிட்டால் ஐபிஎல் நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கம் திணறியது.
ஜியோவின் இலவசம் வேண்டாம்: ஹாட் ஸ்டார் வேண்டும்
ஐபிஎல் நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கத்தில் புகார் அளித்த பெரும்பாலான ரசிகர்கள் எங்களுக்கு ஜியோவின் இலவசம் வேண்டாம். முதல் 2 ஆட்டங்களிலேயே இப்படி தடங்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் 70 ஆட்டங்கள் (மொத்தம்) உள்ளன. அதுவரை ‘ஜியோ சினிமா’-வின் தடங்கலைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனமே பரவாயில்லை எனவும், உடனடியாக ஜியோவை மாற்றுங்கள் எனவும் புகார் அளித்துள்ளனர்.
2-வது முறையாக அசிங்கப்பட்ட அம்பானியின் ஜியோ
கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற 22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ஓடிடி பிரிவில் அம்பானியின் ஜியோ சினிமா இந்தியாவில் இலவசமாக வழங்கியது. இலவசம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், முதல் போட்டியில் இருந்து இறுதிப்போட்டி வரை ஏறக்குறைய மொத்தமாக 80% அளவில் கடும் தடங்கலுடன் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஜியோவின் இந்த தடங்கல் ஒளிபரப்பால் கால்பந்து விளையாட்டை வெறுக்கும் அளவிற்கு கூட ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர். அன்று கத்தார் உலகக்கோப்பை, தற்போது ஐபிஎல் போட்டி என அடுத்தடுத்து திணறி வருகிறது அம்பானியின் ஜியோ நிறுவனம்.
ஆடியோ படுமோசம் : விக்கெட் அறிவிப்பு தாமதம்
ஐபிஎல் ஒளிபரப்பில் ஆடியோ தரம் மிகவும் படுமோசமாக உள்ளது. உண்மையில் ஒலி குறைவாகவே உள்ளது. இடையில் ஆடியோ விட்டு விட்டு தடையுடன் ஒலிக்கிறது. இதுபோக ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்த வீரர் களமிறங்கிய பின்பும், அதே வீரர் களத்தில் இருப்பது போலவும், விக்கெட் எண்ணிக்கையை மாற்றவும் தாமதமாகிறது. சிக்ஸர், பவுண்டரி, விக்கெட் ரீப்ளே செய்ய 2 பந்து வீசிய பின்பு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு விளம்பரம் தேடித் தந்த ஜியோ
உலகின் முக்கிய ஓடிடி சேனல்களில் ஒன்றான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஹாட் ஸ்டார் டிஸ்னி + (Hotstar Disney+) இந்திய பிரிவு கடந்த 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சந்தா தொகை அடிப்படையில் அனைத்து மொழி புதிய, பழைய திரைப்படங்கள், பாடல்கள், வெப் சீரிஸ்கள், தொலைக்காட்சி சீரியல்கள், குழந்தைகளுக்கான ஷோக்கள், கிரிக்கெட், டென்னிஸ், கபடி உட்பட ஒப்பந்தம் செய்துள்ள போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு என இந்திய ஒளிபரப்பு துறையில் ஹாட் ஸ்டார் முக்கிய இடத்தில் உள்ளது. இதுபோக தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளின் சேவையை தனித்தனியாக கையாண்டு வருவதால் சுமார் 30 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்நிலையில், ஹாட் ஸ்டாரை பின்னுக்குத்தள்ளி ஓடிடி துறையில் ஆதிக்கம் செலுத்த கத்தார் மற்றும் ஐபிஎல் தொடரில் அம்பானியின் ஜியோ நிறுவனம் இலவச சேவை மூலம் தனி விளையாட்டை ஆரம்பித்தது. ஆனால், தடங்கல் என்ற பந்தின் மூலம் ஜியோவின் பெயர் அடிமேல் அடி வாங்கியது மட்டுமல்லாமல், எங்களுக்கு ஜியோவின் இலவசம் வேண்டாம்; ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் போதும் என்ற குரல்கள் மூலம் ஸ்டார் நிறுவனத்தின் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு செலவில்லா விளம்பரமும் வாங்கி கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம்.
தமிழ்நாட்டில் இன்று ஐபிஎல் ஆட்டம்
திங்களன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 6-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
சென்னை - லக்னோ
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
சேனல் : சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா
இன்று மெட்ரோ இலவசம்:
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை கண்டுகளிக்க செல்லும் ரசிகர்களுக்கு திங்களன்று மெட்ரோ சேவை இலவசம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.