இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது நட்சத்திர கிரிக்கெட் வாழ்க்கைக்காக பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஓபிஇ விருதானது வழங்கப்பட்டிருக்கின்றது
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி, குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி விருதுகள் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு, கிரிக்கெட்டுக்கான அவரது சேவைகளுக்காக ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் விருதை பெற்றுள்ளார். 2014இல் அறிமுகமான மொயின், 2019ல் உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்தார்.
34 வயதான இவர், கடந்த ஆண்டு 64 போட்டிகளில் 195 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2914 ரன்களும் எடுத்துள்ளார்.
இவர் இதுவரை 112 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடி 2514 ரன்களை குவித்து இரண்டு வடிவங்களிலும் 120 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு முக்கியமானது. இதனால் அவருக்கு ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த கவுரவத்தை பெறுவது ஒரு பெரிய விஷயம். கிரிக்கெட் என் வாழ்க்கையில் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மேலும் இந்த சிறந்த விளையாட்டை உலகம் முழுவதும் விளையாடி ரசிக்க முடிந்ததை நான் அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் என மொயின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இந்த உயரிய விருதினை வென்றமைக்கு, தனது பெற்றோர்கள் முக்கிய காரணம் எனக் குறிப்பிட்ட மொயின் அலி அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
மொயின் அலி தனது 16 வருட கிரிக்கெட் வாழ்வில் 225 போட்டிகளில் நாட்டுக்காக விளையாடியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.