ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வெல்லப்போவது யார்?
ஸ்பெயின் - இங்கிலாந்து இன்று மோதல்
கால்பந்து உலகின் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கோப்பை தொடரின் 17ஆவது சீசன் ஜெர்மனி நாட்டில் ஜூன் 14 அன்று தொடங்கியது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் காலிறுதி முடிவில் ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி முடிவில் ஸ்பெயின் அணி பிரான்ஸ் அணியையும், நெதர்லாந்து அணியை இங்கிலாந்து அணியும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், சனியன்று நள்ளிரவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 4ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் ஸ்பெயின் அணியும், முதல்முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் - 10%
ஆனால் எந்த அணி கோப்பையை வெல்லும் என உறுதியாக எதுவும் கூற முடியாது. காரணம் இரு அணிகளும் சரிசமமான அளவில் பலம், பலவீனங்களை பெற்றுள்ளதால் இறுதி ஆட்டத்தில் எந்த அணி கோப்பையை வெல்லும் என திடமாக கருத்துக் கூற முடியாது. எனினும் இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ள ஸ்பெயின் அணி ஆக்ரோஷமாக விளையாடி வருவதால் அந்த அணிக்கு கோப்பை வெல்ல 10% கூடுதலான வாய்ப்புகள் உள்ளன.
பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும்
அணிக்கு - ரூ. 72 கோடி
(மொத்த பரிசுத்தொகை - ரூ.255
கோடிக்கு மேல் இருக்கும்)
இரண்டாம் இடம் பிடிக்கும்
அணிக்கு - ரூ. 45 கோடி
(மொத்த பரிசுத்தொகை - ரூ.70
கோடிக்கு மேல் இருக்கும்)
ஸ்பெயின் - இங்கிலாந்து
நேரம் : ஞாயிறன்று நள்ளிரவு 12:30 மணி
இடம் : பெர்லின், ஜெர்மனி
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ் டென்,
சோனி லைவ் (ஒடிடி)
கோபா அமெரிக்கா - 2024
நாளை இறுதி ஆட்டம்...
48ஆவது சீசன் கோபா அமெரிக்கா தொடர், அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை 15 அன்று அதிகாலை இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதுகின்றன.
16ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் அர்ஜெண்டினா அணியும், 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் கொலம்பியா அணியும் என இரு அணிகளும் கோப்பை மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உலக சாம்பியனான அர்ஜெண்டினா சூப்பர் பார்மில் இருப்பதால் அந்த அணி எளிதாக வெற்றி பெற்று 16ஆவது முறையாக கோப்பையை கைப் பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பார்க்க முடியாது...
ஐரோப்பிய கால்பந்து தொடரைப் போலவே கோபா அமெரிக்கா தொடரும் பிரபலமானது தான் என்றாலும், இந்த தொடரை இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்ய எந்த தொலைக்காட்சி நிறுவனங்களும் முன்வர வில்லை. இதனால் கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்தை இந்தியாவில் காண முடியாது.
இடம்: மியாமி, அமெரிக்கா
அர்ஜெண்டினா - கொலம்பியா
நேரம் :
திங்களன்று அதிகாலை 5:30 மணி
சேனல் :
பிபா ஆன்லைன்