உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா
ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவுக்கான தகுதிச் சுற்று செவ்வாயன்று மதியம் நடைபெற்றது. 15 பேர் பங்கேற்ற “குரூப் ஏ” பிரிவில் ஜூலியன் (87.76 மீ - ஜெர்மனி), ஜூலியஸ் (85.97 மீ - கென்யா), வாட்லிஜ் (85.63 மீ - செக்குடியரசு), டோனி (85.27 மீ - பின்லாந்து) உள்ளிட்ட 6 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா இடம்பிடித்த “குரூப் பி” பிரிவிற்கான தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது.
15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்ற “குரூப் பி” பிரிவிற்கான தகுதிச் சுற்றின் முதல் முயற்சியிலேயே இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.34 மீ தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். அதன்பிறகு 3 சுற்றிலும் 15 நாடுகளின் வீரர்கள் கடுமையாக போராடியும் நீரஜ் சோப்ரா எறிந்த தூரத்தை யாரும் நெருங்க முடியவில்லை. இறுதியில் நீரஜ் சோப்ரா முதலிட அந்தஸ்துடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கிரேனடா வீரர் பீட்டர் (88.63 மீ) 2ஆவது இடத்துடனும், பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நீதீம் (86.59 மீ) 3ஆவது இடத்துடனும், 4ஆவது இடத்தைபிடித்த பிரேசில் வீரர் டி சில்வாவும் (85.91 மீ), 5ஆவது இடத்தை பிடித்த மால்டோவா வீரர் ஆன்டிரியன் (84.13 மீ) ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 12 பேர் பங்கேற்கும் இறுதிச் சுற்று ஆகஸ்ட் 8 அன்று நடைபெறுகிறது.
ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய வினேஷ் போகத்
மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவின் நாக் அவுட் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசய் யுய்-யை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் சுசய் யுய்-யை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உக்ரைனை சேர்ந்த ஒக்ஸானா லிவாச் என்பவரை எதிர்கொண்டார் வினேஷ் போகத். நாக் அவுட் சுற்றைப்போலவே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத் 5-7 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதிக பதக்கம் வென்றவர்களின் பட்டியலில் சீன வீராங்கனை முதலிடம்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தனிநபர் பிரிவில் அதிக பதக்கம் வென்றவர்களின் பட்டியலில் சீன வீராங்கனை முதலிடம் பிடித்துள்ளார். நீச்சல் பிரிவு வீராங்கனையான ஜெங் யுபெய் 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளார். பிரான்ஸ் நீச்சல் வீரர் மார்ச்சன்ட் லியோன் 4 தங்கம், 1 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், அமெரிக்க வீரர் டோரி ஹுசேக் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். தனிநபராக அதிக பதக்கம் வென்றவர்களின் பட்டியலில் முதல் 7 இடங்களில் நீச்சல் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.