நெருக்கடி காலத்தில் தங்க ஜெர்சி தேவையா?
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஸ்பான்சர் கொடுத்து இருக்கலாமே?
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம், நார்தாம்ப்டன், லீசெஸ்டர் மற்றும் லீட்ஸ் உள்ளிட்ட நகரங்க ளில் “லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன் ஷிப்” தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் சார்பில் கிளைவ் லாயிட், கிறிஸ் கெயில், டுவெ ய்ன் பிராவோ, பொல்லார்டு உள்ளிட்ட முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளை யாடுகிறார்கள். இந்நிலையில், இந்த லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு 18 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. லோரென்ஸ் மற்றும் சேனல் 2 குரூப் கார்ப்பரேஷன் இணைந்து இந்த ஜெர்சியை வடிவமைத்துள்ளன. ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கி, ஸ்பான்சர் இல்லாமல் மேற்கு இந்தியத் தீவுகள் தேசிய அணி விளையாடி வருகி றது. நிலைமை இப்படி உள்ள நிலையில், 18 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஜெர்சி வழங்கப்படுவதற்கு பதிலாக, மேற்கு இந்தியத் தீவுகள் தேசிய அணி க்கு ஸ்பான்சர் கொடுத்து இருக்கலாமே என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்க ளில் வலுத்து வருகிறது.
அசாருதீனின் பங்களாவில் கொள்ளை
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனே வில் பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரூ.50,000 ரொக்கத்தையும், சுமார் ரூ.7,000 மதிப்புள்ள ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையும் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளர் முகமது முஜிப் கான் புகார் அளித்துள்ளார். சம்பாஜிநகரில் வசிக்கும் கான், மார்ச் 7 முதல் ஜூலை 18 வரை பங்களாவில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆய்வுக்குச் செல்கிறது ட்யூக் பந்துகள்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பயன் படுத்தப்படும் ட்யூக் பந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்து தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என அப் பந்தினை தயாரிக்கும் “பிரிட்டிஷ் கிரிக் கெட் பந்துகள்” நிறுவனத்தினர் தெரி வித்துள்ளனர். மூன்று டெஸ்ட் போட்டி களிலும் பயன்படுத்தப்பட்ட பந்துகள் விரைவில் நெகிழ்வுற்று வடிவம் குலைந்துபோவதாக வீரர்கள் குற்றம் சாட்டினர். இதனால் பெரும்பாலும் 30 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பந்து களை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்துகளை இங்கி லாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பந்தை தயாரிக்கும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். டெஸ்ட் போட்டி களை நடத்தும் நாடுகளே எவ்வகை பந்துகளை பயன்படுத்துவது என தீர்மா னிக்கின்றன. குறிப்பாக இங்கிலாந்தில் ட்யூக் பந்துகள், இந்தியாவில் எஸ்ஜி பந்துகள், ஆஸ்திரேலியாவில் குக்கபுரா பந்துகள் போட்டிகளில் பயன்படுத்தப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி உள்ளார். அவருக்கு 70 வயது ஆகிறது. பிசிசிஐயின் விதிகளின் படி 70 வயதை அடைந்தவர்கள் எந்த பதவியிலும் தொடர முடியாது என்பதால் ரோஜர் பின்னி, விரைவில் தலைவர் பொறுப்பில் இருந்து விடைபெற உள்ளார். இதனால் பிசிசிஐயின் இடைக்கால தலைவராக, தற்போதைய துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிக்கப்படலாம் என தகவல் செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜீவ் சுக்லா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.