ஒலிம்பிக் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி தொடக்க சுற்று ஆட்டங்களில் சொதப்பலாக விளையாடி தொடர் தோல்வியை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு 49 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. அரையிறுதியில் பலம்வாய்ந்த அர்ஜெண்டினா அணியிடம் 2-1 என்ற கணக்கில் வீழ்ந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் அரையிறுதியில் தோல்விகண்ட இந்திய அணி வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன்அணியை எதிர்கொண்டது. வெள்ளியன்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதினர்.இதனால் ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. 2-வது கால் பகுதி வரை இந்திய அணி 3-2 என்ற கோல்கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால்இந்திய அணி வெண்கலம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 2 கால்பகுதி ஆட்டங்களில் பிரிட்டன் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். அடுத்தடுத்து 2 கோல்களை அடித்த பிரிட்டன் அணி, இறுதியில்4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக பதக்கம் வெல்லும் அரிதான வாய்ப்பை இழந்தது. இறுதி வரை நாட்டின் வெற்றிக்காக போராடிய இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்த விரக்தியில் மைதானத்திலேயே கதறி அழுதனர். உடனடியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு தொலைபேசியின் மூலம் ஆறுதல் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதலுடன் வாழ்த்து தெரிவித்தனர்.