32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 5வது நாளான இன்று, அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் மனு பாகெர் - சௌரப் சௌத்ரி, அபிஷேக் வெர்மா - யாஷஸ்வினி என இரண்டு இணை பங்கேற்றிருந்தது. இதில், அபிஷேக் - யாஷஸ்வினி இணை முதல் சுற்றுடனேயே வெளியேறிவிட்டது. மனு - சௌரப் இணை முதல் சுற்றில் முதலிடம் பிடித்திருந்த நிலையில், இரண்டாவது சுற்றில் ஏமாற்றமளிக்கும் வகையில் ஏழாம் இடமே பிடித்தது வெளியேறியது.
10 மீ ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், இளவேனில் வாலறிவன்-திவ்யான்ஷ், தீபக் குமார்-அஞ்சும் மோக்டில் என இரண்டு இந்திய இணைகள் பங்கேற்றனர். இரண்டு இணையுமே முதல் சுற்றோடு வெளியேறியது. வாலறிவன்- திவ்யான்ஷ் இணை 12வது இடத்தையும், தீபக் குமார்-அஞ்சும் இணை 18வது இடத்தையுமே பிடித்து வெளியேறியது.
டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சரத் கமல் சீனாவைச் சேர்ந்த மா லிங்குடன் தோல்வியடைந்தார்.
பேட்மிண்டனில் சிராக்-சாத்விக் ஜோடி பிரிட்டனுக்கு எதிரான போட்டியை ஜெயித்திருந்தாலும், புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் அடுத்தச்சுற்றுக்கு தகுதிப்பெற முடியாமல் போனது.
இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் ரூபிந்தர் சிங் பால் 2 கோல்களையும் சிம்ரன்ஜித் சிங் ஒரு கோலையும் அடித்திருந்தனர்.
ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் ஜெர்மனியின் அபட்ஸ்ஸை 3-2 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் களம் கண்டிருந்த இந்தியாவின் சுமித் நாகல், 2 ஆவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவிடம் 6-2, 6-1 என்ற செட்களில் வென்றார்.
ஏற்கெனவே மகளிர் இரட்டையரில் சானியா மிர்ஸா, அங்கிதா ரெய்னா ஜோடி வெளியேறிவிட்ட நிலையில், தற்போது ஆடவர் ஒற்றையரில் நாகலும் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி ஜப்பான் 10 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், சீனா 9 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 3வது இடத்திலும் உள்ளது.