games

img

இந்தியாவுக்கு முதல் தங்கம்.... ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அசத்தல் வெற்றி...

ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட 12 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்ற இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. 6 பகுதிகளை கொண்ட இறுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2 ஆவது  பகுதியில் 87.58 மீ தூரம் ஈட்டியை எறிந்து அசத்தினார். அதன்பின் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 6 பகுதி வரை கடுமையாக போராடியும் நீரஜ் சோப்ரா வீசிய அதிக தூரத்தை தாண்டி ஈட்டியை வீச முடியவில்லை. 

இறுதியில் அதிக தூரம் வீசிய நீரஜ் சோப்ரா (87.58 மீ) தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். செக்குடியரசு வீரர்கள் ஜேக்குப் (86.67 மீ), வெஸ்லே (85.44 மீ) முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.ஒட்டுமொத்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு இது 10-வது தங்கப்பதக்கமாகும். இதுவரை ஹாக்கியில் 8 தங்கம் வென்றுள்ளது. தனிநபர் பிரிவில் இந்தியாவிற்கு இது இரண்டாவது பதக்கமாகும்.ஏற்கெனவே துப்பாக்கிச்சூடுதல் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றுள்ளார்.  

நீரஜ் சோப்ராவின் தங்கப்பதக்கம் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 20 இடங்கள் முன்னேறி 47 இடத்தை பிடித்துள்ளது. இதுமட்டுமின்றி ஒலிம்பிக் தொடரில் இந்தியா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை இந்தியா ஒலிம்பிக் தொடரில் அதிகபட்சமாக 6 பதக்கங்கள் (லண்டன் - 2012) வென்றதே அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 7 பதக்கங்கள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. பதக்கம் வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி, மார்க்சிஸ்ட் கட்சியின்  அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.