ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தனர்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியின் முதல் செட்டை 6க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களையும் 4 க்கு 6, 9 க்கு 11 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இறுதியில் ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.