கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து உலக சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர்ஸ் யுனைட்டட் அணிக்காக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை(மார்ச் 12) அன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டத்தில் அசத்தலான ஹாட்ரிக் கோல் மூலம் கால்பந்து வரலாற்றில் தனது பெயரை பதித்தார். தனது முதல் 2 கோல்களுடன், ஜோசப் பிகானின் சாதனையை முறியடித்து விளையாட்டு வரலாற்றில் முன்னணி கோல் அடித்தவர் ஆனார்.
ரொனால்டோ 1956 ஆம் ஆண்டு முதல் சாதனை படைத்த பிகானை முறியடித்தார். அவரது புகழ்பெற்ற 25 ஆண்டுகால வாழ்க்கையில் விளையாடிய 530 ஆட்டங்களில் பிகான் 805 கோல்களை அடித்தார். அதில் 395 கோல்கள் ஸ்லாவியா ப்ராக் அணிக்காக 217 போட்டிகளில் அடிக்கப்பட்டன. பிகான் தனது வாழ்க்கையில் 1500 கோல்களுக்கு மேல் அடித்ததாக கூறப்பட்டாலும், அதில் 805 கோல்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஓல்ட் ட்ராஃபோர்டில் ரொனால்டோவின் 12ஆவது நிமிட தொடக்க கோல் தூரத்திலிருந்து அடிக்கப்பட்ட ஒரு சிறந்த ஸ்ட்ரைக், இந்த கோல் அவருக்கு சாதனையை சமன் செய்ய உதவியது. அதாவது 805 கோல்கள் சாதனையை சமன் செய்தார்.
பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் வீரர் ஜேடன் சாங்கோவின் பாஸை கோலாக்கினார். இதன் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என்று முன்னிலை பெற்றது. பிறகு தலையால் முட்டி இன்னொரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்ததோடு அதிக கோல்கள் எண்ணிக்கையான 807 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.