சென்னை
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி சென்னையில் சனியன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸில் தமிழக வீரர் அஸ்வினின் (5) சுழலில் சிக்கி 134 ரன்களுக்குள் சுருண்டது. 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அசத்திய அதே அஸ்வினின் (106 ரன்கள்) அதிரடி சதத்தின் உதவியால் இங்கிலாந்துக்கு 482 ரன்கள் என்ற மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நோக்கி பயணித்த இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் (நேற்று - திங்கள்) ஆட்டநேர முடிவில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், செவ்வாயன்று தொடங்கிய 4-ஆம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் ஆதிக்கமே நீடித்தது. அஸ்வின் - அக்சர் படேல் கூட்டணியின் சுழலை சமாளிக்க முடியாமல் 54.2 ஓவர்கள் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்து 317 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதை விட சற்று அதிக ரன் எண்ணிக்கை வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடியுடன் தொடரை 1- 1 என்ற கணக்கில் (4 போட்டிகள்) சமனில் நிறுத்தியது. ஆட்டநாயனாக தமிழக வீரர் அஸ்வின் தரவு செய்யப்பட்டார்.
3-ஆம் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.