இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாக எல்எல்சி போட்டியின் ஆணையராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்தாக லெஜண்டஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்எல்சி போட்டியின் ஆணையராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். எல்எல்சி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள். அதனைதொடர்ந்து இந்தியா, ஆசியா, இதர நாடுகள் என அணிகள் மூன்றாகப் பிரிக்கப்படும். இந்த போட்டி அடுத்த வருட ஜனவரி மாதம் வளைகுடாப் பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு பற்றி ரவி சாஸ்திரி கூறுகையில், முன்னாள் வீரர்களுக்கு ரசிகர்களிடம் நல்ல மதிப்பு உள்ளது. அவர்களின் தீவிரமான மற்றும் பொதுப்போக்கான கிரிக்கெட் ஆட்டங்களை நாம் காணப் போகிறோம். லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி நிர்வாகத்தில் நானும் இடம்பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது புதிய முயற்சி. இதற்கு நல்ல எதிர்காலம் உண்டு என தெரிவித்துள்ளார்.