சையத் முஷ்டாக் அலி கோப்பையில் தமிழக அணி கடைசியில் வெற்றி பெரும் போது சாய் கிஷோர், ஷாருக் கான் ஆடுகளத்திலிருந்தது பொருத்தமானது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. சாய் கிஷோர் 4 ஓவர்களில் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய பந்துகளில் கர்நாடக பேட்டர்களால் ஒரு பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடியவில்லை. இறுதியில் தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியும் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய ஷாருக்கான், தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் ஷாருக் கானும் சஞ்சய் யாதவும் 19 ரன்கள் எடுத்தார்கள். கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இந்நிலையில், தமிழக அணி கடந்த வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் இந்த வெற்றி குறித்து கூறுகையில், இறுதிச்சுற்று இரு தமிழக வீரர்களுக்கு உரித்தானது. பந்தில் சாய் கிஷோர், பேட்டிங்கில் ஷாருக் கான். தமிழக அணி கடைசியில் ஜெயிக்கும்போது இரு வீரர்களுக்கும் ஆடுகளத்தில் இருந்தது பொருத்தமானது. இந்திய அணியின் கதவை இருவரும் பலமாகத் தட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழக அணியின் இந்த வெற்றிக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் எனப் பிரபல வர்ணனையாளர் ஒருவர் அஸ்வினிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அஸ்வின், தமிழக வீரர்கள் டீஎன்பிஎல் போட்டியில் நெருக்கடியான ஆட்டங்களில் அதிகமாக விளையாடிய அனுபவம் உள்ளதுதான் இந்த வெற்றிகளுக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.