games

img

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் நாடு திரும்ப அர்ஜுன ரணதுங்க அழைப்பு 

ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும், தங்களது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு தாயகம் திரும்பி ஆதரவு அளிக்குமாறு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.  இந்நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்கள் சிலர் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசவில்லை. அரசுக்கு எதிராக பேசுவதற்கு இந்த கிரிக்கெட் வீரர்கள் பயப்படுகிறார்கள். மேலும் அமைச்சகத்தின் கீழ் உள்ள கிரிக்கெட் வாரியத்திலும் இந்த கிரிக்கெட் வீரர்கள் பணிபுரிவதால், தங்களது வேலையை பாதுகாத்துகொள்ளவே முயற்சிக்கின்றனர்.

எனினும், சில இளம் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அந்த வீரர்கள் ஒரு வாரத்திற்கு, தங்களது ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இலங்கை வீரர்கள் வனிந்து ஹசரங்கா, பானுகா ராஜபக்சே, முன்னாள் வீரர்களான சங்ககாரா, மகேல ஜெயவர்த்தன ஆகியோர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முன்னாள் வீரர்களான சங்ககாரா, லசித் மலிங்கா ஆகியோர் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக உள்ள நிலையில், ஹசரங்கா, சமீரா உள்பட பல வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பல அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.