மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இலங்கை - இந்தியா அணிகள் மோதின. திங்களன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்., இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. 120 பந்துகளுக்கு 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலக்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சுகளை சமாளிக்கமுடியாமல் திணறியது. விக்கெட் இருந்தாலும் போதுமான அளவில் பந்துகள் இல்லாததால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கப்பதக்கம் வென்றது. இலங்கை அணி வெளிப்பதக்கமும், வங்கதேச அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.
இந்தியாவுக்கு முதல் தங்கம்
ஆடவர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் தோமர், பன்வர், பாட்டில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1893.7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. 1890.1 புள்ளிகளுடன் தென் கொரியா அணி வெள்ளிப்பதக்கமும், 1888.2 புள்ளிகளுடன் சீன அணி வெண்கலப்பதக்கமும் வென்றது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்திய இணை உலக சாதனை வரலாற்றுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாய்ச்சல் வேகத்தில் சீனா
19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கத்தை வென்ற கையோடு ஜெட் வேகத்தில் பதக்கங்களை குவித்து வருகிறது போட்டியை நடத்தும் சீனா. 2ஆம் நாளில் 32 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலம் என 52 பதக்கங்களுடன் முதலிடத்தில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு பாய்ச்சல் வேகத்தில் முன்னே சென்று கொண்டு இருக்கிறது சீனா. 2ஆவது இடத்தில் உள்ள தென் கொரியா 6 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் உள்ளது. ஜப்பான் 5 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 26 பதக்கங் களுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் 4 வெண்கலம்
துப்பாக்கிச்சுடுதல் : ஆடவர் 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அத்ராஷ், அனிஷ், சித்து ஆகியோர் அடங்கிய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. துப்பாக்கிச்சுடுதல் : ஆடவர் 10 மீ ஏர் ரைபிள் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் தோமர் வெண்கலப்பதக்கம் வென்றார். துடுப்பு படகு : 4 பேர் கொண்ட துடுப்பு படகுப் போட்டியில் இந்திய வீரர்கள் ஜஸ்விந்தர், பீம், புனித், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. துடுப்பு படகு : 4 பேர் கொண்ட மற்றொரு துடுப்பு படகுப் பிரிவில் இந்திய வீரர்கள் சத்னம், பர்மிந்தர், ஜகர், சுக்மீத் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
பதக்கப் பட்டியல்
த வெ வெ மொ
1.சீனா 32 14 6 52
2.தென்கொரியா 6 8 10 24
3.ஜப்பான் 5 12 9 26
5.இந்தியா 2 3 6 11
டென்னிஸ் : இந்தியா அவுட்
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா/ யுகி பாம்பரி ஜோடி, உஸ்பெஸ்கிஸ்தானின் செர்கே போமின் மற்றும் குமோயுன் சுல்தானோவ் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் ஆதிக்கம் செலுத்திய உஸ்பெஸ்கிஸ்தான் ஜோடி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் இந்தியா ஜோடியை வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியது.