வரலாற்றில் முதன்முறை வெற்றி பெற்றும் கோப்பை இல்லாமல் கொண்டாடிய இந்தியா
17ஆவது சீசன் ஆசியக்கோப்பை இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி, 9ஆவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஷின் நக்வி ஆசியக் கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பதால் அவர் கோப்பையை கொடுக்க மேடைக்கு வந்தார். ஆனால் இந்திய அணி நிர்வாகம், ஆசியக்கோப்பை மற்றும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை மொஷின் நக்வியிடம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் நேரப்படி ஆட்டம் 10.30 மணிக்கே முடிவடைந்த போதும், நள்ளிரவு வரை பரிசளிப்பு நிகழ்ச்சி தாமதமானது. தாமதமாக தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் (runners-up) பிடித்த அணிக்கான காசோலை யை பெற்றுக்கொண்டார். இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளவில்லை. கோப்பை இல்லாமலேயே கொண்டாடினர். அதே போல ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் பெற்றுக்கொண்டனர். இந்திய அணியினர் விருது பெறும்போது மொஷின் நக்வியை தவிர்த்து மற்ற அனை வரும் கை தட்டினர். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி யில் வெற்றி பெற்ற அணி (இந்தியா) கோப்பை இல்லா மல் கொண்டாடிய அபூர்வ சம்பவம் நிகழ்ந்துள்ளது விளையாட்டு உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன்ஸ் வாய்ஸ்
சூர்யகுமார் (இந்தியா)
இந்திய கேப்டன் சூர்யகுமார், “நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள். மொஷின் நக்வி நடந்துகொண்ட விதம் குறித்து நவம்பரில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முறையிட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்படியாக, சர்ச்சையுடன் தொடங்கிய ஆசியக்கோப்பை, எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காணப்படாமல் மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையுடனே முடிந்திருக்கிறது” என அவர் கூறினார்.
சல்மான் அகா (பாகிஸ்தான்)
இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா,”ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல; அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ், கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்தார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி, அவர் அப்படி நடந்துகொண்டார்” என குற்றம்சாட்டினார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி
53 ஆண்டுகால பழமை யான டென்னிஸ் தொட ர்களில் ஒன்றான ஜப்பான் ஓபன் செப்., 22ஆம் தேதி தொடங்கியது. ஆடவருக்கு மட்டும் நடைபெற்று வரும் இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்களன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஜப்பானின் டகேரு ஜோடி, அமெரிக்காவின் ஹாரி ஸன் - கிங் ஜோடியை எதிர்கொண்டது. இரண்டு ஜோடிகளின் அதிரடி ஆட்டத்தால் தொடக்கம் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 18-16 என்ற செட் கணக்கில் கடுமை யான போராட்டத்துடன் போபண்ணா - டகேரு ஜோடி அபார வெற்றி பெற்றது. செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத போபண்ணா - டகேரு ஜோடி, தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள பிரான்சின் வெஸ்லின் - மோனாகோ நாட்டின் நீஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது. டென்னிஸ் டிவியில் (ஓடிடி - வகை) இந்த ஆட்டத்தை காணலாம்.
