“கால்பந்து உலகக்கோப்பை” என்றால் கத்தார் நடத்திய உலகக்கோப்பைதான் சிறந்தது என்று “கால்பந்து உலகம்” பெருமையாக கூறும் அளவிற்கு, நாம் நடத்தும் உலகக்கோப்பை தொடர் இருக்க வேண்டும் என 12 ஆண்டுகளாக கடுமையாக போராடி பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் முழுமூச்சில் ஏற்பாடுகளை நிறைவு செய்து போட்டியை நடத்த தயாராக உள்ளது கத்தார் நாடு. இத்தாலிக்கு அடுத்த படியாக போட்டிகளை நடத்தும் நாடு தனது முதல் உலகக்கோப்பைப் போட்டியில் களமிறங்குகிறது என்ற பெருமையை கத்தார் பெருகிறது. 1934ஆம் ஆண்டு இத்தாலி முதன் முதலில் இந்தப் பெருமையைப் பெற்றிருந்தது. நவம்பர் 20 அன்று ஈகுவடார் அணியை எதிர்த்துக் களமிறங்கும் கத்தாருக்கு கால்பந்து வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கத்தார் நாட்டின் கால்பந்திற்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான பெலிக்ஸ் சாஞ்சஸ் 2006-ஆம் ஆண்டு முதல் அங்கு மையம் கொண்டுள்ளார். முறைப்படி 2017 முதல் கத்தார் அணியின் பயிற்சியாளரான பெலிக்ஸ் சாஞ்சஸ் பயிற்சியின்கீழ்தான் உலகக்கோப்பையில் களமிறங்கும் பெரும்பாலான வீரர்கள் தங்களது விளை யாட்டு வாழ்வைத் துவக்கியவர்களாவார்கள். சர்வதேச அரங்கில் பெரியளவு அனுபவம் இல்லை என்றாலும் தேசிய அணிக்காக 163 போட்டிகளில் களமிறங்கி 33 கோல்களை அடித்துள்ள ஹசன் ஹைதோஸ் தலைமை யின் கீழ் களமிறங்கும் கத்தார் அணியில், அல் முஈஸ் அலி, அபீபி போன்ற மிரட்டலான நட்சத்திர வீரர்களும் அணியில் உள்ளனர். இந்த ஆண்டு பல்கேரியா, கானா ஆகிய அணிகளுடன் நடைபெற்ற நட்புறவு ஆட்டங்களில் வென்றது கத்தார் அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
கத்தார் - உலகத்தரவரிசை 50
முதல் உலகக்கோப்பை ஆட்டம் : நவம்பர் 20 - (ஈகு வடார் நாட்டை எதிர்கொள்கிறது). இதுதான் 22-வது சீசன் உலகக்கோப்பை தொடரின் துவக்க ஆட்டமும் கூட. அடுத்து நவம்பர் 25-ஆம் தேதி செனகல் அணியையும், நவம்பர் 29-ஆம் தேதி மிகவும் பலமான நெதர்லாந்து அணியையும் எதிர்கொள்கிறது கத்தார் நாடு.