facebook-round

img

நாட் அவுட் பேட்ஸ்மேன் தான் மக்கா! நீங்களும் பந்துவீசிப் பார்க்கிறீர்களா?

அவன் மைதானத்தில் இறங்கும் வரை

கடவுள் பந்துகளே உலகெங்கும்

களத்தில் பவுன்சர்களாக எகிறின!

அவன் தான் கடவுள் மனிதனை

ஒருபோதும் படைக்கவில்லை - மாறாக

மனிதனே கடவுளைப் படைத்தான் என

மிட் விக்கெட் திசையில் ஒரு

அற்புத சிக்ஸர் அடித்தான்.

மதம் ஓர் அபின் என அடுத்த பந்தில்

அட்டகாசமான பவுண்டரி அடித்தான்!

அவனுக்கு முன் ஆதாம், ஏவாள்கள்

கருத்து பரம கருத்துகள் என

விதவிதமான ஹூக்ளிகள் மிரட்டின

அவன் தான் கருத்து முதல்வாதத்தை

பொருள்முதல்வாதம் எனும் சிக்ஸராக

லாங் ஆன் திசையில் விளாசினான்!

அவனுக்கு முன் மாறாநிலைவாதம்

புல்டாஸ் பந்துகள் இம்சித்தன...

பாலே நடனத்தில் பேக் புட்டில் விலகி

மாற்றம் என்ற சொல்லைத் தவிர

மாறாதது எதுவுமில்லை என்று

பாயிண்ட் திசையில் சிக்ஸர் தூக்கினான் கார்ல் மார்க்ஸ்!

அதுவரை எதிரணி பவுலர்கள்

விதி வலியது என்ற மூலதனத்தை

யார்க்கர் பந்துகளாக வீசினார்கள்...

அவன் வந்து தான் முன்னால்

ஒரு எட்டுவைத்து லாங்ஆப் திசையில்

உபரியே மூலதனத் திரட்சி என்றொரு

இமாலய சிக்சரை விளாசினான்.

எதிரணி பவுலர்கள் இந்த பூதத்தை

அவுட்டாக்க முடியாமல் தவித்தார்கள்!

ஜெர்மானியன் என ஓர் அகலப்பந்து

யூதன் என்று ஓர் நோபால் பந்து

நாடுநாடாய் வெளியேற்றி அகதிப் பந்து

வறுமை வடிவிலே அதிவேகப் பந்து

அவனோர் முரட்டு மூரென கேரம் பந்து

தலைக்கவசம் உரசிப் போகும் பந்து

விதவிதமாய் வேகவேகமாய்

பந்துகளை வீசிக்கொண்டிருந்தார்கள்

நங்கூரமிட்டபடி கம்யூனிஸ்ட் அறிக்கை

மூலதனம், அரசியல் பொருளாதரத்திற்கு ஓர் விமர்சனம் என

இந்த உலக மைதானத்தின் எட்டுத் திசைகளிலும் அந்தப்பந்துகளை

சிக்சர்களாக்கி பறக்கவிட்டவன் மார்க்ஸ்

அவன் இப்போதும் ஏன் எப்போதும்

நாட் அவுட் பேட்ஸ்மேன் தான் மக்கா!

நீங்களும் பந்துவீசிப் பார்க்கிறீர்களா?

- சூர்யா, சென்னை.

;