facebook-round

img

முத்தமிழ் அறிஞர் கலைஞர் - ஆர்.பாலகிருஷ்ணன்

நிகழ்வு 7

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

2010 ஆம் ஆண்டு ஜனவரி / பிப்ரவரி என்று நினைக்கிறேன். அப்போது நான் டில்லியில் வேதி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தேன். அடித்துத் துவைத்துக் கொடியில் காயப்போட்டது போல களைப்பாக இருந்தது உடம்பும் மனசும்...

அப்போது ஒரு நாள் சென்னையிலிருந்து தொலைபேசியில் அழைத்தார் நண்பர் முனைவர் ‌மா. ராஜேந்திரன்.

கோவை செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு "சிந்துவெளி நாகரிகம்" பற்றி உரையாற்ற வேண்டும் என்றார். இது ஐராவதம் மகாதேவனின் விருப்பமும்- என்றார்.
டில்லி வரும் போது நேரில் சந்திப்பதாகவும் சொன்னார்.

அதன்படி ஒரு நாள் டில்லியில் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். எங்கள் இருவருக்கும் 'கணையாழி' மூலமான நெடுநாள் நட்பு உண்டு.

சிந்துவெளி அமர்விற்கு அஸ்கோ பர்போலா தலைமை வகிப்பார்; எனது வழிகாட்டியான ஐராவதம் மகாதேவன் முன்னிலையில்.
எப்படிப்பட்ட வாய்ப்பு. வியப்பாக இருந்தது. "ஐராவதம் மகாதேவன் உங்களை அழைக்க வேண்டும் என்று விரும்பினார். சிந்துவெளி போன்ற முக்கிய அமர்வுகளின் ஆய்வுரையாளர் பட்டியல் முதல்வர் வரை சென்று அவரது அளவில் இறுதி செய்யப்பட்டது" என்றார் மா.ரா. மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

அப்போது நான் உடலளவில் மிக பலவீனமாக இருந்தேன். எதையும் சாப்பிடவும் பிடிக்காது.

ஜுன் மாதம். கோவை மாநாட்டிற்கு என்னுடன் எனது மனைவி வந்திருந்தார். நோய்த்தொற்று பற்றிய அச்சம் இருந்ததால் கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்க்கும் மருத்துவ ரீதியான தேவை இருந்தது. எனவே ஆய்வரங்கத்திற்கு மட்டும் செல்வதாகத் திட்டம்.

தமிழக காவல் துறையில் பெரிய பொறுப்பில் இருந்த நண்பர் ஒருவர் கோவையில் உள்ள முக்கியமான விடுதி ஒன்றில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே விடுதியில் தான் தமிழக முதல்வரும் முக்கிய அமைச்சர்களும் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.

கோவை செம்மொழி மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக எனது நண்பர் கே.ஏ.அலாவுதீன் பொறுப்பு வகித்தார்.

அந்த கோவைப் பயணம் என்னால் மறக்க முடியாத நிகழ்வு. எத்தனை ஆண்டுகளின் தேடுதலின் பயன் அது. "அவசரப்பட்டு எழுதிவிடக்கூடாது" என்ற அக்கறையுடன் எத்தனை ஆண்டுகள் அடைகாத்து யோசித்து சரி பார்த்து சேமித்த தரவுகள் அவை.

தமிழ் நெடுஞ்சாலையில் நான் செய்த செய்கிற பயணத்தின் விசையும் திசையும் தெளிவுமான இந்தத் தரவுகள் எனக்கு மிக முக்கியமானவை. இடையில் 2007 இல் உத்திரப்பிரதேச தேர்தலின் போது நான் பயணம் செய்த ஹெலிகாப்டர் கோடை காலத்து திடீர் சூறாவளி மழையில் அந்தரத்தில் அங்கும் இங்குமாக அரை மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட போது எனது குடும்பம் நினைவுக்கு வந்த அதே நொடியில் நான் பல ஆண்டுகளாக வெளியிடாமல் எனது மடிக்கணினியில் வைத்திருந்த "கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்" பற்றிய தரவுகள் அல்லவா எனது எண்ணத்தில் மின்னல் வெட்டிப் போனது.

அதற்கு பின்னாலும் காஷ்மீர் தேர்தல் ஐந்து மாநில தேர்தல்கள் பாராளுமன்ற தேர்தல் என்று இரவு பகலாக அலைந்தேனே தவிர‌ இந்த ஆய்வுகளை பொதுவெளிக்கு கொண்டுவர நேரமின்றித் தானே திரிந்தேன் தேசமெங்கும்.

2009 இல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் விட்டத்தை வெறித்துப் பார்த்து படுக்கையில் கிடந்த போது மனசெல்லாம் எவ்வளவு கழிவிரக்கம். கையறு நிலை. சிந்துவெளியில் "கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை "ஊரைக் கூட்டி உரக்கச் சொல்லவில்லையே என்ற ஆதங்கம்.

இதோ...கோவை செம்மொழி மாநாட்டில் நான்.

செம்மொழி என்றதும் எனக்கு நினைவோடையில் நிழலாடுகிறது இன்னொரு நிகழ்வு.

2004 தேர்தலுக்கு பின்னால் எனக்கு மத்திய அமைச்சர் திரு. தயாநிதி மாறனின் அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "அமைச்சர் பேசுவார்" என்றார்கள். தமிழ் செம்மொழி அறிவிப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை விவாதத்திற்கு பின்புலச் செய்தியாக "தமிழ் ஏன் செம்மொழி" என்பதை தர்க்கபூர்வமாக விளக்கும் "ஆங்கில வரைவு" ஒன்று அவசரமாக தேவைப்படுகிறது என்றார். அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் எனது அலுவல் தொடர்பாக ஒரு கலந்தாய்வு கூட்டம் இருந்தது. அப்போது திரு. மாறனைச் சந்தித்தேன்.

அதைத் தொடர்ந்து புவனேஸ்வரம் திரும்பியதும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து ஏற்கனவே உள்ள செய்திகளை தொகுத்து புதிய தரவுகள் சேர்த்து ஒரு வரைவு தயாரித்து அமைச்சருக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.

தமிழ் மொழியைச் செம்மொழி என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்த போது நான் திருச்சியில் இருந்தேன். எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அமைச்சர் மாறனின் செயலரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பேசினார். அவர் மூலமாகத் தான் அமைச்சர் எனது தமிழ் இலக்கியப் பின்புலம் பற்றி அறிந்து ஆங்கில வரைவிற்காக என்னைத் தொடர்பு கொண்டிருந்தார்.

" உங்களுக்கு ஒரு நற்செய்தி- தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது" என்றார் அந்த அதிகாரி. மகிழ்ச்சி பொங்க " எப்போது" என்று கேட்டேன். "ஒரு பத்து நிமிடம் இருக்கும்" என்றார் சிரித்துக் கொண்டே. "இப்போது தான் கூட்டம் முடிந்தது. அமைச்சர் அவரது காரில் ஏறுகிறார். நான் எனது காரில் ஏறுகிறேன். உங்களிடம் தொலைபேசியில் தெரிவிக்கச் சொன்னார்" என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.

இதோ உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய்வரங்கம். சிந்துவெளியில் "கொற்கை வஞ்சி தொண்டியை" அறிவிக்க இதை விடச் சிறந்த களம் வேறு எதுவாக இருக்க ‌முடியும்?

"அறிஞர் அவையில் இதை வரைபடமாகக் காட்டுங்கள்" என்று கலைஞர் 2007 இல் சென்னையில் சொன்னது கோவையில் நடந்தது. எனது உரையையும் வரைபடத்தையும் தரவுகளையும் குறுநூலாக "கிழக்கு பதிப்பகம்" திரு. பத்ரி சேஷாத்ரியின் உதவியுடன் அச்சடித்து எடுத்துச் சென்றிருந்தேன்.

நான் தங்கியிருந்த விடுதியில் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் இருந்தார்கள். அப்போது மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி‌ திரு. தேவராஜை உணவுக் கூடத்தில் சந்தித்தேன். அவரை நான் அறிவேன். ஆய்வுரை பற்றியும் உடல் நலம் பற்றியும் விசாரித்த அவரிடம் குறுநூலின் இரண்டு பிரதிகளை அளித்தேன். "முதல்வரை சந்தித்து நீங்களே கொடுக்கிறார்களா?" என்றார்.

எனது உடல் நிலை கருதியும் செம்மொழி மாநாட்டில் முதல்வர் எப்படி முழுக்க ஈடுபட்டிருப்பார் என்பதையும் மனதில் கருதி " நீங்களே கொடுத்து விடுங்கள்" என்றேன்.

களைப்பாகத் தான் இருந்தது. 
ஆனால் களிப்பாகவும் இருந்தது.

( தொடரும்)

 

Balakrishnan R