facebook-round

img

பாசிசம் அறிவோம்1 :”எல்லோரும் சமம் என்றால், ஒருவருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் அந்தஸ்து?"- மாதவராஜ்

”சரியோ, தவறோ மோடி முடிவுகள் எடுக்கிறார். அவரது இந்த துணிச்சல் பாராட்டத் தகுந்தது. இத்தனை காலம் இந்தியாவின் பெரும் தலைவலியாக இருந்த காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முடிவு எடுத்திருக்கிறாரே..” என்று நண்பர் ஒருவர் சொன்னார். காஷ்மீர் குறித்து அவரிடம் விளக்கமாக பேசிக்கொண்டு இருந்த போது, அவர் சொன்ன வார்த்தைகள் இவை.

ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிற வாதத்தைத்தான் நண்பரும் முன்வைத்துக் கொண்டிருந்தார். “காஷ்மீர் இந்தியாவுக்குள் இருக்கிறது. அதற்கு மட்டும் என்ன அப்படி ஸ்பெஷல் அந்தஸ்து? அதை ரத்து செய்வதில் என்ன தவறு?” என்று தொடை தட்டி பேசினார்.

”இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா என்றொரு நிலை வந்த போது, இந்தியாவுடன் என்று நிலைபாட்டை எடுத்து, தங்கள் சுயேச்சைத் தன்மையை நிலை நிறுத்தும் பொருட்டு சில சலுகைகளை கேட்டது. அதை அன்றைய சுதந்திர இந்தியா ஏற்றுக் கொண்டது. அதுதான் ஸ்பெஷல் அந்தஸ்து. ஒப்புக்கொண்ட அந்த நிபந்தனைகளை இன்று மீறுவது சரியா? அது ஏமாற்றுவது ஆகாதா? என்று வரலாற்றை மீள் வாசிக்கும்போது நண்பருக்கு அது புதிதாக இருந்தது.

ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “அன்றைக்கு அது சரி. இன்று ஒரே நாடான பின்னர், அது குறித்து மறு பரீசிலனை செய்வதில் என்ன தப்பு?” என தன் புத்திசாலித்தனத்தைக் காட்டினார்.

“அப்படியென்றால் அது போன்ற ஸ்பெஷல் அந்தஸ்து கொண்ட எல்லாவற்றையும் ரத்து செய்வதுதானே? இன்றைக்கும் குஜராத்தில், மும்பையில் என பல்வேறு இடங்களில் இது போன்ற ஸ்பெஷல் அந்தஸ்து இருக்கத்தானே செய்கிறது? அது பற்றி யாரும் பேசக் காணோம்?’” என்றதும் அவர் விக்கித்துப் போனது அப்பட்டமாகத் தெரிந்தது. அதை ஒப்புக் கொள்ளாமல், மோடி ஒரு துணிச்சல்காரர் என்று அபிப்பிராயத்தில் போய் தன் தலையை மூழ்க வைத்துக் கொண்டார்.

ஒரு பிரச்சினையை, ஒரு முக்கிய நிகழ்வை மேலோட்டமாக அறியச் செய்து, அது குறித்த கேள்வி எழுப்பி, ‘’yes’ or ‘No’ என்ற பதிலை மட்டும் கேட்டு, அதிலிருந்து முடிவெடுக்கிற, கருத்துக்கணிப்பு செய்கிற இந்த வடிவமைப்பு ஒரு பெரும் மோசடி. மொத்த சமூகத்தையும் தன் உள்ளங்கையில் வைத்து தீர்மானிக்கிற அதிகார அயோக்கியத்தனம்.

பெரும் மக்கள் திரளான சமூகம் இதற்கு இரையாகிறது. அதற்கு மக்களை நாம் குறை சொல்ல முடியாது. ”எல்லோரும் சமம் என்றால், ஒருவருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் அந்தஸ்து?’ என்ற கேள்விக்கான பதிலை சமூகமும், மக்கள் திரளும் சரியாகத்தான் ‘கூடாது’ என்று சொல்கிறது. அவர்கள் தங்கள் கண்ணேதிரே முன்வைக்கப்பட்ட காட்சிக்கு சரியான பதிலைத்தான் தந்திருக்கிறார்கள். இங்கே அவர்கள் முன்வைக்கப்பட்ட காட்சி பிழையானது. அதற்கு மக்களை நாம் குறை சொல்லக் கூடாது, முடியாது.

ஒன்றின் பன்முகத் தன்மைகளையும், பரிமாணங்களையும் பாசிசம் மறைக்கிறது. தட்டையாகப் பார்க்க வைத்து, ‘ஆம்’ , ‘இல்லை’ என மக்களை எதிரெதிரே நிறுத்துகிறது.

பிரச்சினைகளின் நிரந்தரத் தீர்வு குறித்து மக்களை சிந்திக்க விடாமல் வாளை உயர்த்தி உடனடியாக இரண்டில் ஒன்றைபார்த்து விட வேண்டும் என மக்களைத் தூண்டுகிறது.

பாசிசத்தின் போக்குகளை நாம் அறிவதும், அது மக்கள் மனங்களை எப்படி கவர்கிறது என்பதை ஆராய்வதும் இன்றைய மிக அவசிய நடவடிக்கையாகும்.

தொடர்ந்து அறிவோம்…. ஆராய்வோம்….

-Mathavaraj