கம்யூனிஸ்டுகள் வர்க்க கோரிக்கைகளோடு சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கோரிக்கைகளையும் உள்ளடக்கிய போராட்டங்களையும் வலுவாக முன்னெடுத்து வந்தனர்.
1928 ல் பம்பாயில் நூற்பாலைகளில் துணி நெய்யும் பிரிவில் தலித் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து அவர்களையும் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்தனர். ஏனெனில் நூல்
சுற்றும் கருவியை இயக்கும் போது தொழிலாளர்கள் எச்சிலை தொட்டு ஈரப்படுத்த வேண்டும் என்பதால் அப்பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்படாத பாரபட்சம் இருந்தது. இத்தகைய கோரிக்கைகளால் தலித் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தால் கவரப்பட்டனர்.
டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய சகாவான ஆர்.பி.மோரே
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பி.டி.ரணதிவே மாணவராக இருந்த காலத்திலேயே ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கி அளித்து அவர்களை ஊக்குவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் ஆதிக்க சாதி மாணவர்கள் கற்களை அவர் மீது எறிந்தனர். ஆனாலும் அவர் அதை உறுதியோடு எதிர்கொண்டு அதை தொடர்ந்து கொண்டிருந்தார். அன்றைய நிலையில் சங்க அலுவலகங்களில் குடிநீருக்காக என தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த இரண்டு பானைகள் எனும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, அப்படி பாரபட்சம் பார்ப்பவர்கள் வேறெங்காவது சென்று தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள் என கண்டித்தார்.
தோழர் ஈ.எம்.எஸ் அவர்கள் கேரளாவில் இருந்த சாதிய ஆதிக்கத்தின் மோசமான நடைமுறைகளை கண்டித்து போராடியதற்காக சிறை சென்றதால் அவரது குடும்பத்தாரால் விலக்கி வைக்கப்பட்டார். ஏனெனில் அன்றைக்கு ஒரு சில சாதிகளில் சிறை சென்றால் குடும்ப விலக்கம், சாதி விலக்கம் செய்யும் பழக்கங்களும் சமூகத்தில் இருந்தன. அவரது அண்ணன் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனாலும் ஈ.எம்.எஸ் அவர்கள் தனது பாதையில் உறுதியோடு இருந்தார். தோழர் பி.சுந்தரய்யா தனது வீட்டில் கடைபிடிக்கப்பட்ட தீண்டாமையை கண்டு வெகுண்டெழுந்து தங்கள் குடும்ப நிலங்களிலும், வீட்டிலும் தலித் தொழிலாளிகளின் பால் காட்டப்படும் பாரபட்சங்களை உடைத்தெறிந்ததோடு, பல்வேறு இடங்களிலும் இத்தகைய பாரபட்சங்களுக்கு எதிரான உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தார்.
தோழர்கள் எம்.பசவ பொன்னையா, ஏ.கே.கோபாலன், பி.கிருஷ்ணபிள்ளை பி.ராமமூர்த்தி, பி.ஜீவானந்தம், பி.சீனிவாசராவ் ஆகிய தலைவர்கள் பல்வேறு ஆலய நுழைவு போராட்டங்களுக்கு தலைமையேற்றதோடு, அன்றைக்கு நிலவி வந்த சாதீய ஒடுக்குமுறைகள், பழமைவாத போக்குகள் உள்ளிட்ட பல மோசமான அணுகுமுறைகளுக்கு எதிராக கலகங்களை மேற்கொண்டனர்.
வர்க்க சுரண்டல் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டுமென்கிற
தனது இலக்கில் உறுதியோடும்
ஊசலாட்டமின்றியும் பயணத்தை
தொடர்கிறது கம்யூனிஸ்ட் இயக்கம்..