election2021

img

அதிமுக அல்ல... பாஜகதான் போட்டியிடுகிறது... பிரச்சாரக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தாக்கு....

சென்னை:
தமிழகத்தின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு சனிக்கிழமையன்று (மார்ச் 20) திருவான்மியூரில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ.அழகிரி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:மோடியா? லேடியா? என ஜெயலலிதா சவால் விட்டார். மடியில் கனம் இருப்பதால், தற்போதைய முதலமைச்சரால் மோடியா? எடப்பாடியா? என சவால் விடமுடியவில்லை. அனைத்து அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டு, எப்ஐஆர் உள்ளது. எனவே, தமிழக நலனை விட்டுத் தருகிறார்கள். அதிமுக அணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உண்மையில் 234 தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடுகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அதிமுக கூறுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்தார்கள் என்று கூற முடியுமா? கடந்த காலத்தில் எதையும் செய்யாமல் தற்போது வாக்குறுதி தருகிறார்கள். அவற்றில் எதையும் அவர்களால் நிறைவேற்ற முடியாது.பிரதமர் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னார். நிறைவேற்றினாரா? அதேபோன்றுதான் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 6 சமையல் எரிவாயு போன்ற வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியாது. தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அரசு ஊழியர்களுக்கே சம்பளம் தர முடியாமல் திணறுகின்றனர். திமுக தலைமையிலான அணி ஆட்சிக்கு வந்து பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைப்போம். வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக பலமுனைகளில் தோல்வி அடைந்துள்ளது. எனவேதான் கொள்கை ரீதியாகவும், மக்கள் நலன் காக்கும் வகையிலும் திமுக தலைமையில் அணி அமைத்துள்ளோம். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில், கூட்டணியில் உள்ள கட்சிகள் கேள்வி கேட்போம். தமிழகத்தில் கொள்கை மாற்றத்தைக் கொண்டு வந்து பொருளாதாரத்தை பெருக்குவோம். விவசாயத்தை மேம்படுத்துவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவை விட கூடுதலாக 50 சதவீதத்தை சேர்த்து வழங்குவோம். விலைவாசியை குறைப்போம். ஜிஎஸ்டி வரிவிகிதத்தை மாற்றிஅமைப்போம்.

மதச்சார்பின்மையின் உண்மை வடிவமாக திமுகதலைமையிலான அணி உள்ளது. வேளச்சேரி தொகுதிவேட்பாளர் ஹசன் மௌலானா இஸ்லாமியர். ஆனால், பிரச்சாரத்தை நாகத்தம்மன் கோவில் வாசலில் இருந்து தொடங்குகிறார். மத நம்பிக்கை மனதிற்குள் இருக்க வேண்டும். பிறர் மீது திணிக்கக் கூடாது. வேளச்சேரி மட்டுமல்ல அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரச்சாரத்தில் திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

;