election2021

img

குழப்பத்தில் பிறந்த கூட்டணிதான் அதிமுக-பாஜக... மன்னார்குடி பிரச்சாரத்தில் கரு.பழனியப்பன் பேச்சு...

மன்னார்குடி:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கொள்கையின் அடிப்படையில் உருவான கூட்டணி. அதிமுக-பாஜக கூட்டணி குழப்பத்தில் பிறந்த கூட்டணி என்று திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசினார். 

மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பெருந்திரள் பிரச்சாரக் கூட்டத்தில்  அவர் மேலும் பேசியதாவது:இந்தப் பக்கம் திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இயக்கங்கள்-விடுதலை சிறுத்தைகள் கட்சி. இவர்கள்எல்லோரும் ஓரணியாக கொள்கை வழி நின்று மக்கள் பிரச்சனைகளுக்காக  தொடர்ந்து போராடி வருகின்றனர். அதுபிரதமர் மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டமாக இருந்தாலும், வேளாண் விரோதச் சட்டங்களாக இருந்தாலும் சரி. அனைத்திலும் ஓரணியாகஒன்று சேர்ந்து போராடி வந்துள்ளனர்.அந்தப் பக்கம் அதிமுக-பாஜக அணியில், ஆரம்பத்திலிருந்து யார் எந்தப் பக்கம் சேருவது என்பதில் இழுபறியாகவே இருந்து வந்துள்ளது. பாஜக துவக்கத்தில் கழகங்கள் இல்லாத தமிழகம் என்று ஆரம்பித்தார்கள். ரஜினிகாந்த் வீட்டின் வாசலில் நின்று,‘அரசியலுக்கு வாருங்கள் வாருங்கள்’ என்று கெஞ்சினார்கள். ஆனால் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் வெளியேறிக் கொண்டார். அடுத்து வேறு ஆள் இல்லாத நிலையில் சசிகலாவை போய் பார்த்தார்கள். 

துக்ளக் குருமூர்த்தி ஜன.15 அன்று துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் எப்படியாவது  சசிகலாவை பயன்படுத்தி அவர் தலைமையில் அதிமுகவை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என முயற்சித்தார். சசிகலாவும் வராத நிலையில் நரேந்திரமோடி சென்னைக்கு வந்தார். ‘ஊழலை நாடு முழுவதும் ஒழிப்போம்’ என்றுவலதுபுறத்தில் ஊழலில் தலைமகனாக எடப்பாடியாரையும், இடப்புறத்தில் ஊழலில் அவரது தம்பியான ‘ஓ.பன்னீர்செல்வம்’ என இரண்டு ஊழல்வாதிகளையும் வைத்துக் கொண்டு இந்த கூட்டணியை வலுப்படுத்திவிட்டு செல்வதாக நினைத்தது பாஜக.இப்படியாக அதிமுக தோளில் ஏறி சவாரி செய்து கொண்டே எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடவேண்டும் என்று பாஜக முடிவு செய்தது. ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி ஒரு கொள்கையின் அடிப்படையில் இணைந்து வலுவான கூட்டணியாக நிற்பதால், அதை எதிர்க்கும் அரசியல் சக்தியற்று இன்று களத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நிற்கிறது. 
தேர்தல் பிரச்சாரத்திற்காக யோகி ஆதித்யநாத் கோவைக்கு வந்தார். அதற்கு மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் போனார்கள். எல்லா கடைகளையும் 3 மணிக்கே அடைக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள். இதற்கு பெயர்தான் பிரச்சாரமா? இல்லை... இதற்குப் பெயர் கலவரம் செய்வதாகும். தமிழகத்தில் ஒரு அதிகார பதவி கூட இல்லாத நிலையிலேயே ஒரு நாளிலே இப்படி ஒரு கலவரத்தை செய்பவர்கள்நாளை பதவி கிடைத்தால் தமிழகத்தில் என்னென்ன செய்வார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். 

இந்தியா முழுவதும் கலவரம் செய்பவர்கள்தான்  இவர்கள். எங்கேயாவதுகலவரம் செய்யாமல் இவர்கள் இருந்திருக்கிறார்களா என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே   மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். மன்னார்குடியில் நண்பர் டிஆர்பி ராஜாவை மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறச்செய்ய வேண்டும். எதிர்த்து நிற்பவர்களை நோட்டாவிற்கு கீழே கொண்டுவர வேண்டும். இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.

;