election2021

img

2011, 2016 வாக்குறுதிகள் என்னாச்சு? பழனிசாமி பதில் சொல்லத் தயாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி...

ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

செய்ய முடியாத காரியங்களை - வாய்க்கு வந்த படியெல்லாம் - பொத்தாம் பொதுவாக பல உறுதி மொழிகளை சொல்லி இருக்கிறார். அதில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும்.இப்போது இந்த சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறீர்களே… நீங்கள் ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு – 2016-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது சொல்லியிருக்கும் உறுதிமொழிகள் என்ன நிலையில் இப்போது இருக்கின்றன என்பதை பழனிசாமி அவர்கள் சொல்வதற்குத் தயாராக இருக்கிறாரா?

உதாரணமாக, அனைவருக்கும் செல்போன் இலவசமாக கொடுப்போம் என்று சொன்னார்கள். அதை இப்போதும் சொல்லி இருக்கிறார்கள். இங்கு இருக்கும் யாருக்காவது அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக செல்போன் கொடுத்து இருக்கிறார்களா?
அதேபோல, கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்கு குறைப்போம் என்று ஒரு உறுதிமொழி கொடுத்தார்கள். குறைத்திருக்கிறார்களா?

பொது இடங்களில் வை-ஃபை வசதி செய்து கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்திருக்கிறார்களா?

10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். எவ்வளவு லட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது?

திருச்சி, மதுரை, கோவையில் மோனோ ரயில் விடப்போகிறோம் என்று சொன்னார்கள். அது வெறும் பேப்பரில் தான் இருக்கிறது.

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். அது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு தருவோம் என்று சொன்னார்கள். இப்போது 60 ரூபாய்.அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீட் தேர்வை நாங்கள் உள்ளே விட மாட்டோம் என்று சொன்னார்கள். இதுவரையில் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதா? இதுவரையில் சகோதரி அனிதா தொடங்கி பல பேர் அந்த நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.
பொங்கலுக்கு முதல் நாள் - மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பேசிய போது, “ஏற்கனவே கலைஞர் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அதேபோல, தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்வோம்” என்று நான் அறிவித்தேன்.

நான் எப்போதும் என்ன சொல்வேன் என்று பார்த்துக்கொண்டே இருப்பார் பழனிசாமி. எனவே அடுத்த நாளே, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்று அவர் அறிவித்தார்.நான்கு ஆண்டுகளாக நீங்கள் தான் முதலமைச்சராக ஆட்சியில் இருக்கிறீர்கள். நான்கு ஆண்டுகளாக விவசாயப் பெருங்குடி மக்கள் இதை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவில்லை.அது மட்டுமல்ல சென்னை நீதிமன்றத்திற்கு சென்று வழக்குப் போட்டார்கள். அதை விசாரித்த நீதிமன்றம், “அரசு உடனடியாக அந்தக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று உத்தரவு போட்டது. அப்போது, ‘அதை ரத்து செய்ய முடியாது’ என்று சொல்லி உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கிய ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.எனவே மக்களை ஏமாற்றுவதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல, 14,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் வெறும் 5,000 கோடிதான் செய்திருக்கிறார்கள். மீதமிருக்கும் அந்தக் கடனை நாம் ஆட்சிக்கு வந்துதான் தள்ளுபடி செய்யப் போகிறோம்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு இருக்கும் நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நான் சொன்னேன். இதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் சொன்னேன். அதை மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அப்போது விமர்சித்தார். இப்போது அறிவித்திருக்கிறீர்களே, நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றப் போகிறீர்களா?

                               *************  

மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்

தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் தோல்வி பயத்தின் காரணமாக இப்போது ஏதேதோ உளர ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் சமீபத்தில், வாரிசு அரசியலை ஒழிக்கும் தேர்தல்தான் இந்த தேர்தல் என்று பேசியிருக்கிறார். அவர் ஓ.பன்னீர்செல்வத்தையும் – அவரது மகனையும் மனதில் வைத்துக்கொண்டு அப்படிப் பேசியிருக்கிறார். வாரிசு அரசியலைப் பற்றி பழனிசாமி பேசுவதற்கு – அ.தி.மு.க. பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?

அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, சசிகலாவின் கால் நோக்கி ஊர்ந்து சென்று முதலமைச்சராக ஆனவர் முதலமைச்சர் பழனிசாமி. ஜெயலலிதா அறிவிக்கும் வரை ஓ.பன்னீர்செல்வம் யாரென்று நாட்டுக்கு தெரியாது. ஜெயலலிதா அடையாளம் காட்டும் வரை பழனிசாமி யார் என்பது நாட்டுக்கு தெரியாது. ஆனால், 2 பேரும் அம்மையார் ஜெயலலிதாவிற்கு எந்த அளவிற்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும்.அம்மையார் ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்ற விவரம் இதுவரையில் தெரியவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரையில் உண்மை வெளிவரவில்லை.

இந்த லட்சணத்தில் பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் மறைவிற்கு கலைஞரும் ஸ்டாலினும்தான் காரணம் என்று பேசியிருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறு இருந்தால் நான்கு வருடமாக விசாரித்துக் கொண்டிருக்கும் ஆறுமுகசாமி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரா? ஓ.பி.எஸ்.க்குத்தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.இந்த உண்மை கூடத் தெரியாமல் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் இன்றைக்கு மக்களைத் திசை திருப்புகிறார்.
அதனால் தான் நம் தேர்தல் அறிக்கையில், நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். எனவே முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடித்து நாட்டுக்கு சொல்வது இந்த ஸ்டாலினுடைய கடமை. இன்னொரு இடத்தில் பழனிசாமி, என்னை கடவுள் தண்டிப்பார் என்று சொல்லியிருக்கிறார். மாண்புமிகு பழனிசாமி அவர்களே… முதலமைச்சர் பழனிசாமி அவர்களே… நான் எந்த பாவமும் செய்யவில்லை. என்னைக் கடவுள் தண்டிக்க வேண்டிய அவசியமில்லை.

பாவங்கள் செய்து இருப்பவர் நீங்கள். உங்களைக் கடவுள் தண்டிக்கப் போகிறாரோ இல்லையோ மக்கள் தண்டிக்கப்போகிறார்கள். அது உறுதி.சொந்தப் பங்காளிகள் படுகொலை விவரம் சேலத்தில் - எடப்பாடியில் விசாரித்தால் தெரியும். சொந்த பங்காளிகளுக்குள் நடந்த கொலை. அதனால் தலைமறைவாக இருந்தவர் யார் என்பது அவருக்கும் - எனக்கும் - நாட்டுக்கும் தெரியும்.இந்த அரசியல் வாழ்க்கையை உங்களுக்கு கொடுத்த ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல உங்களுக்கு பதவி கொடுத்த சசிகலாவிற்கு துரோகம் செய்து இருக்கிறீர்கள்.சாத்தான்குளத்தில் அப்பாவையும் - மகனையும் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொன்றிருக்கிறார்கள். அவர்கள் இயற்கையாக இறந்திருக்கிறார்கள் - ஏற்கனவே அவர்களுக்கு பல வியாதிகள் இருந்து இருக்கிறது. அதனால் இறந்திருக்கிறார்கள் என்று சொன்னீர்களே?

அதேபோல பொள்ளாச்சி என்று சொல்வதற்கு இப்போது நாக்கு கூசுகிறது. ஏறக்குறைய 250 பெண்களைக் கடத்தி, பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ பதிவு செய்து, வலைதளங்களில் போடுவோம் என்று அச்சுறுத்தி, பணம் பறித்து, பல கொடுமைகளை செய்திருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் அதன் சுற்று வட்டாரத்தில் பாதிப்புகள் - புற்றுநோய் வருகிறது. அதனால் அதை திறக்கக்கூடாது என்று அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். 100 நாட்களாக போராட்டத்தை நடத்தியவர்களை, பயிற்சி பெற்ற காவல்துறையை பயன்படுத்தி காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளி இருக்கிறார்கள். அதில் 13 பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல கொடநாடு எஸ்டேட்டில் எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன.
இதற்கெல்லாம் கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, இந்தத் தேர்தலில் மக்கள் உங்களை நிச்சயமாகத் தண்டிப்பார்கள்.

                               *************  

‘குட்கா பாஸ்கர்’ ‘குவாரி பாஸ்கர்’

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எவ்வளவு பெருமை இருந்தாலும் ஒரு அவமானச் சின்னம் இருக்கிறது. அது என்னவென்று புதுக்கோட்டையில் இருக்கும் உங்களுக்கு நன்றாக தெரியும். ‘குட்கா பாஸ்கர்‘ – ‘குவாரி பாஸ்கர்‘ – ‘சி.பி.ஐ. விசாரணைப் புகழ் பாஸ்கர்‘ – ‘ஐ.டி. புகழ் பாஸ்கர்‘ – ‘ஊழல் புகார் புகழ் பாஸ்கர்‘ இதெல்லாம் அவருக்கு கிடைத்த பட்டப்பெயர். அவர் யார்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர்.குட்கா என்பது எவ்வளவு பெரிய கொடிய நோயை உருவாக்கக் கூடியது என்பது உங்களுக்கு தெரியும். அது தடை செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்துபவர்களுக்கு உயிரை காப்பாற்ற முடியாத கேன்சர் வரும். அப்படிப்பட்ட அந்தக் குட்காவை விற்பதற்கு துணைநின்ற அமைச்சர் தான் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர்.

மக்கள் நல்ல நலத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் நல்வாழ்வு துறை உருவாக்கப்பட்டது. அதற்கென்று இருக்கும் அமைச்சரே இந்த குட்காவை பயன்படுத்தி கேன்சரில் சாக காரணமான அதற்கு பேரம் பேசி, அதில் கமிஷன் வாங்கியிருக்கிறார்.மக்கள் நலத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரே இதற்கு உடந்தையாக இருக்கிறார். இதைவிட கொடுமை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளுக்கும் இதில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் கமிஷன் நிறுத்தியது. அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டது என்று ஒரு பட்டியல் கிடைத்தது. அதில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கிறது. அது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, 2017இல் அவர் வைத்திருக்கும் கம்பெனிகளில் சோதனை நடந்து பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் குவாரி தொடர்பாக சிக்கிய ஆவணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர் குடும்பமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது என்பது நாடறிந்த உண்மை.இதெல்லாம் போதாதென்று, கொரோனாவிலும் கொள்ளை அடித்து இருக்கிறார். கொரோனா கிட் வாங்கியதில், மாஸ்க் வாங்கியதில், மருந்து தெளிப்பான் வாங்கியதில், ப்ளீச்சிங் பவுடரில் என அனைத்திலும் கொள்ளையடித்த ஆட்சிதான் இந்த ஆட்சி.

படக்குறிப்பு : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் 18 வியாழனன்று  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் ஆகியோரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியிலும்;சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.குணசேகரன், மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி, காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஆகியோரை ஆதரித்து திருப்பத்தூரிலும்;புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் முத்துராஜா, திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி, ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன், விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி. ராமச்சந்திரன், கந்தர்வக்கோட்டை  தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை ஆகியோரை ஆதரித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய உரைகளிலிருந்து...

;