பா.ம.கவில் முக்கிய நிர்வாகியாகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் மறைந்தபோது, பா.ம.க தலைவர் ராமதாஸ் மீது காடுவெட்டி குருவின் குடும்பத்தார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, “எனது அப்பா வளரக்கூடாது என எப்படியாவது அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இருந்திருக்கிறார். எங்க அப்பா வளர்ந்தால் அவருடைய மகன் அன்புமணி வளர முடியாது என்பதனால், அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருந்திருக்கிறார்” என காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்திருந்தார். மேலும் பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வந்தவாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை வந்தவாசி தேரடியில் பிரச்சாரம் செய்தார். பின்னர் இங்கிருந்து பஜார் வீதிக்கு சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த பா.ம.கவை சேர்ந்தவர்கள் விருதாம்பிகை, தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமார் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் பா.ம.கவினரை அழைத்துச் சென்றனர். இதையடுத்து , காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.