‘நீ படிச்சவ.. வசதியா வாழ்ந்துட்டே.. பேசறே!
நாங்க அப்படியில்ல... சோத்துக்கு திண்டாடுனோம்... நாலு காசு சம்பாதிக்கணும்னா சாவணும்... சம்பாதிச்ச காச வீட்டுக்கு கொண்டு வர்றதுக்குள்ள ரத்த அடிபடணும்... ஒரு நாளாவது ராத்திரி வரைக்கும் நாம் உயிரோடு இருப்போம்னு நம்பியதுண்டா?’
- என ஒரு வசனம், ‘நாயகன்’ என்கிற படத்தில்.கொண்டாடப்பட்ட வசனம் அது. அக்காட்சியில் நடித்திருந்த கமல்ஹாசனின் நடிப்பு சிலாகிக்கப்பட்டது. அப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையேவாங்கியிருந்தார் கமல்ஹாசன். அதே கமல்ஹாசன் தற்போது இன்னொரு படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார்.
பணக்கார உயர்சாதி முதியவர் ஒருவர் காலை நேரத்தில் முகக்கவசம் அணிந்து நடைபயிற்சி செய்கிறார். கமல்ஹாசன்!
எவ்வளவு எளிமையாக நடக்கிறார் என மக்கள் பார்த்து வியக்க வேண்டும் என கமல் விரும்புகிறார். நடப்பதில் என்ன எளிமை? ஆழ்வார்ப்பேட்டையில் அவர் வாழ்ந்தபோது இத்தகைய நடைபயிற்சி புகைப்படங்கள் சமூக தளங்களை நிரப்பியதில்லை. ஆழ்வார்ப்பேட்டையில் அவர் நடக்கவில்லையோ என்னவோ? அழகிய நீல வண்ண ட்ராக் சூட்.. என்ன விலை எனத்தெரியவில்லை. பேருந்தில் செல்கிறார். பிறகு ஒருஆட்டோவில் செல்கிறார். ஓட்டுநரின் அருகே அமர்ந்துகொண்டு, ஆட்டோவில் அமர்ந்திருக்கும் கமலுடன் வெளியிலிருந்து பேசுபவர்களின் முகங்களும் தெரிய வேண்டுமென்ற பிரயத்தனத்துடன் சரியாக வேலை செய்கிறார் ஒளிப்பதிவு கலைஞர்.
பல பத்தாண்டுகளுக்கு திரையில் கோலோச்சிக் கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு திடுமென அரசியலில் நாட்டம் வந்தது. பொதுவாக கமலுக்கு ரஜினிகாந்த்திடம் தொழில்ரீதியான போட்டியும் அவரை விஞ்ச முடியவில்லையே என்கிற ஆற்றாமையும் இருக்கும். அரசியலுக்கு வருவதாக பூச்சாண்டி கதை சொல்லிக் கொண்டிருந்த ரஜினிக்கு, தமிழகத்தில் பி டீம் தொடங்கி மக்களை குழப்பும் வாய்ப்பு ஒன்று வந்தது. கட்டாயப்படுத்தப்பட்டார். ஒருவழியாக அரசியலில் பிரவேசிக்கும் முடிவை ரஜினி எட்டினார். ரஜினியை விஞ்சும் வேட்கையிலிருந்த கமல் உடனே அரசியல் விருப்பத்தை தெரிவித்தார். ரஜினிக்கும் முன்பாகவே கட்சியை தொடங்கினார். வேகவேகமாக பி டீமுக்கு தேவைப்படும் நடிப்பை வழங்கத் தொடங்கினார் கமல். ஒரு கட்டத்தில் ரஜினி அரசியலிலிருந்து விலகினார். கமல் ‘கப்’பென பி டீமானார். ஏ டீம் வேட்பாளர் கோவைதெற்கில் வெற்றி பெறுவதற்கான வேலையை செய்து கொடுக்கும் நடிப்பில் கமல் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
நவீன நகர கட்டுமானத்தை வெறித்து பார்த்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறார். பிறகு ஒரு பள்ளி குழந்தையுடன் ஒரு போட்டோ. ஒரு பூங்காவில் நடக்கும் ஒருவருடன் என்னவோ சொல்லி சிரித்து ஒரு போட்டோ. பிறகு தெருமுனையில் நின்றுகொள்கிறார். அவரருகே மக்கள் வருகின்றனர். அவர்களிடம் பேசுகிறார். என்ன குறைகள் அவர்களுக்கு இருக்கிறதென கேட்டறிகிறார். ஒரு ஐம்பது வருட காலத்துக்குப்பிறகு கோவை தெற்குப்பகுதியின் ஒரு தெருமுனை யில் நிற்பவரின் வாழ்க்கையில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அந்த பணக்காரர் ஏன் ஆர்வம் காட்டுகிறார் என்பது அம்மக்களுக்கு தெரிந்தே இருந்தது.
கோவை தெற்கிலேயே இன்னொருவர் இருக்கிறார். ஏ டீம் வேட்பாளர். வாக்கிங் சென்ற கமலை போலவே அவருக்கும் திடீரென ஆட்டோ பயணத்தின்மீது பாசம் வந்திருக்கிறது. ஆட்டோவில் ஏறியிருக்கிறார். போட்டோவும் எடுத்துக் கொண்டார். கோவை தெற்கிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நிறையபுகைப்படங்கள் வரும் என்பதை மக்கள் புரிந்திருக்கின்றனர். Both are sailing in the same boat; not in same auto though. (இருவருமே ஒரே படகில்தான் செல்கின்றனர்; இருந்தாலும் ஒரே ஆட்டோவில் அல்ல) என்ன ஒரு புத்திசாலித்தனம்!
இரண்டு நாட்களுக்கு முன் மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஒரு ஆட்டோ புகைப்படம் வெளியானது. ஆட்டோவில் இருந்தவரிடம் கோவை தெற்குக்காரர்களின் பளபளப்பு இல்லை. உழைப்பின் வண்ணத்தை பூசியிருந்தார். திருப்பரங்குன்றத்தில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். பெயர் பொன்னுத்தாய். ஆட்டோவில் தன் பிரச்சாரத்தை தொடங்கினார்.ஆட்டோவை ஓட்டியவர் வேட்பாளரிடம் பணம் வாங்கவில்லை. ஏனெனில் ஓட்டியவர் வேட்பாளரின் கணவர். அவரும் சங்க உறுப்பினராக மக்களுக்கான பணியில் இயங்கிக் கொண்டிருப்பவர்தான். இருவருமே மக்களிடம் சென்று என்ன பிரச்சனை என கேட்டறிய வேண்டிய தேவை கிடையாது. பெட்ரோல் விலை உயர்வு முதல் வேலையிழப்பு வரைஎல்லாவற்றையும் அவர்களும் எதிர்கொண்டிருக் கிறார்கள். எதிர்கொண்டவர்களுக்கென தொடர்ந்து களம் கண்டுகொண்டும் இருக்கிறார்கள்.
கமலுக்கோ வானதிக்கோ அவர்கள் போட்டோ எடுத்துக்கொண்ட ஆட்டோக்கள் தேர்தல் கால பயன்பாடு மட்டும்தான். பொன்னுத்தாய்க்கோ, அவரது கணவர் ஓட்டும் ஆட்டோதான் வாழ்வாதாரம். பொதுவுடமை சித்தாந்தம்தான் வாழ்க்கை.கமல் நடித்த ‘நாயகன்’ பட பாணியிலேயே சொல்வதானால்,‘நீங்க படிச்சவங்க.. வசதியா வாழ்ந்துட்டீங்க..! நாங்க அப்படியில்ல... சோத்துக்கு திண்டாடுனோம்... போராடணும், மக்களுக்கான நியாயம் கிடைக்கறதுக்குள்ள ரத்த அடிலாம் படணும்... ஒரு நாளாவது ராத்திரி வரைக்கும் நாங்க உயிரோடு இருப்போம்னு நம்பியதுண்டா?’
என்னும் வர்க்கத்தையும் அரசியலையும் சேர்ந்தவர் பொன்னுத்தாய்.
கமல் பேசிய வசனம் அவருக்கே பொருந்துவது தான் நகைமுரண்.
கட்டுரையாளர் : ராஜசங்கீதன்
நன்றி : கலைஞர் செய்திகள்