தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வியாழக்கிழமை திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு கூட்டங்களில் மத்தியஅரசுடன், மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே நலத்திட்டங்களை பெற முடியும் என பேசி வருகிறார். அது வினோதமாக உள்ளது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் அடிமையாக, குறிப்பாக கொத்தடிமையாக இருக்கக்கூடாது.தமிழக சட்டப்பேரவையில் இனிமேல் புதியதொரு மாவட்டம் உருவாக்கப்படாது என தெரிவித்த பழனிசாமி, தற்போது பழனியை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என கூறுவது முரணாக உள்ளது. செல்லும்இடமெல்லாம் திமுக அழிந்துவிடும் என கூறும் பழனிசாமி, பாம்பின் வாயில்சிக்கிய தவளை போல், பாஜகவிடம் சிக்கியுள்ள அதிமுக அழியப்போகிறது என்பதை உணரவேண்டும். அதிமுகவை மிரட்டி 20 தொகுதிகளை பெற்ற பாஜக, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றார்.