election2021

img

மோடி அரசின் ஏஜெண்டாக துணை நின்ற அதிமுக...

அடிமைகளுக்கும், சுதந்திரமான மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இந்த தேர்தல். தமிழகத்தில் வசிக்கும் 6 கோடி தமிழர்களாகிய நாம் அடிமைகளுடைய ஆட்சியில் இருக்கப் போகிறோமா? அல்லது சுயமரியாதைமிக்க ஒரு ஆட்சியில் இருக்கப் போகிறோமா? என்பது தான் நம் முன்னால் இருக்கிற கேள்வி. கடந்த 10 ஆண்டு காலமாக எல்லா வகையிலும் வஞ்சித்த, எல்லா வகையிலும் நமது உரிமைகள்; பறிபோகும் போது வேடிக்கை பார்த்த அரசு தான் அதிமுக அரசு. அப்படிப்பட்ட இந்த அரசை வீட்டுக்கு அனுப்புகிற நேரம் வந்துள்ளது என உரத்து முழங்குகிறார் சு.வெங்கடேசன் எம்.பி., மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து பல்வேறு இடங்களில் அவர் பேசினார். அதன் சாராம்சம்:

மோடியின் படத்தை புறக்கணித்த வானதி
மக்கள் பெரும் கோபத்தோடு இருப்பதை தேர்தல் களம் நிருபித்து வருகிறது. அதன் வெளிப்பாடு தான் அதிமுக வேட்பாளர்கள் யாரும் தங்களது வாக்கு சேகரிக்கும் துண்டறிக்கையில் பிரதமர் மோடியின் படத்தை போடவில்லை. பாஜக பற்றிய செய்தியே இவர்களின் பிரச்சாரத்தில் இல்லை. இது நமது அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். நேற்று வரை இது தான் நிலைமை என்றால் இன்றைய நிலைமை இன்னும் மாறியிருக்கிறது. அதாவது பாஜகவே தனது துண்டறிக்கையில் மோடியின் படத்தை போடவில்லை என்பது  தான். கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் துண்டறிக்கையில் மோடியின் படம் இல்லை என்று வலைத் தளங்களில் செய்தி பரவுகிறது. 

                                   ********************

ஏப்.2 மோடி வருகை... அதிமுகவின் கதை முடிகிறது

அடுத்த வாரம் இன்னும் நிலைமை மோசமாகப் போகிறது. மதுரை உட்பட தென் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களிடையே ஒரு பரபரப்பு நிலவுகிறது. அது என்னவென்றால் வருகிற 2 ஆம் தேதி மதுரைக்கு மோடி வந்து அதிமுக வாக்காளர்களுக்கு வாக்குச் சேகரிக்கிறார். அன்றோடு அதிமுக கதை முடியப்போகிறது. அதிமுக வேட்பாளர்கள் மோடி கலந்து கொள்ளும் மேடைக்கும் போகலாமா? வேண்டாமா? என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நமக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி.  

                                   ********************

மருத்துவ மாணவர்களுக்கு அநீதி; எடப்பாடி குரல் கொடுத்ததுண்டா? 

கடந்த 10 ஆண்டுகளாக நமது பண்பாட்டை, தொன்மத்தை, பாரம்பரியத்தை அனைத்தையும் விற்றவர்கள், நசுக்கியவர்கள், கிழித்தெறிந்தவர்கள். மருத்துவ உயர்கல்வி தேர்வு  எழுதும் 11800 தமிழக மாணவர்களில் 2 ஆயிரம் பேர் தேர்வு எழுதக்கூட தேர்வு மையங்கள் தமிழகத்தில் இல்லை. 10 ஆயிரம் மாணவர்கள் வெளி மாநிலங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட போது நாங்கள் கொதித்தோம். அதனை எதிர்த்து அறிக்கை விட்டோம். மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். இப்போது மத்திய அரசு தமிழகத்தில் தேர்வு மையங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்த உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்டு வந்து இருக்கிறோம். தமிழக மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த அநீதிக்குஎதிராக எடப்பாடி பழனிசாமி என்றைக்காவது வாய்திறந்ததுண்டா? எந்த அமைச்சராவது வாய் திறந்தது உண்டா?

                                   ********************

கீழடி பாரதப் பண்பாடா?

3 ஆயிரம் ஆண்டு கால நமது தமிழ்ப் பாரம்பரியத்தை  தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள் என்றால், கீழடிக்கு போன எடப்பாடியின் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் இது தமிழ்ப் பண்பாடல்ல, பாரதப் பண்பாடு என்று பேட்டியளிக்கிறார். நம்மை காட்டிக்கொடுக்கிற இந்தக் கூட்டம், தமிழகத்தின் வரலாற்றை, மரபை, மாண்பை கெடுக்கிற இந்த கூட்டத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?

                                   ********************

நமது உரிமைகள் பறிபோக துணை நின்றவர்கள்

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்துவிட்டு இப்போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ குடியுரிமைச் சட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சி எடுப்போம் என்கிறார்கள். அதிமுக எம்.பி.க்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த நாட்டில் குடியுரிமை சட்டம் நிறைவேறியிருக்காது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை காட்டிக் கொடுத்தவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம் உரிமை பறிபோக துணை நின்றவர்கள். இன்றைக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். 

                                   ********************

பிரிட்டிசாரை எதிர்த்த மண்ணில் காமெடி பீஸ்

சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிசாருக்கு எதிரான போராட்டங்களால் எஃகு கோட்டை போல உறுதியான மண் இந்த மண். இந்த மலைக்கோட்டையைப் போல (திண்டுக்கல்) கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அவ்வளவு உறுதியாக போராடிய தீரர்கள் நிரம்பிய மண்ணிலிருந்து ஒரு காமெடி பீசா? பிரச்சனை என்ன தெரியுமா? எங்கள் ஊரில் உள்ள காமெடி பீசுக்கும், இங்கே உள்ள காமெடி பீசுக்கும் தான் போட்டி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மீடியாக்களின் கேமராக்கள்; திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ பின்னால் தான் செல்கின்றன. அண்ணன்கள் இன்றைக்கு என்ன கருத்து முத்துக்களை உதிர்க்கப் போகிறார்கள் என்று அலைகிறார்கள். 

                                   ********************

அமைச்சர்களின் மனநோய்க்கு மருந்து 

இந்த மாநிலத்திற்கு இதை செய்தேன், இந்த மாவட்டத்திற்கு இதைச் செய்தேன், எனது தொகுதிக்கு இதைச் செய்தேன்  என்று சொல்லி ஓட்டு கேளுங்கள். எங்கள் ஊர் அமைச்சர் நான் தாயில்லா பிள்ளை என்று ஓட்டு கேட்கிறார். எனக்கு சுகர் இருக்கு என்று விஜயபாஸ்கர் ஓட்டு கேட்கிறார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது தானே! உனது மன நோய்க்கும் சேர்த்து மருந்து கொடுக்கிற நாள் தான் தேர்தல் நாள். 

                                   ********************

சாமானிய மனிதர்களை காப்பாற்றுவீர்களா?

கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான யானைகள் இறந்த மாநிலம் தமிழ்நாடு. 7 ஆண்டுகளில் மட்டும் 566 யானைகள் இறந்திருக்கின்றன. கடந்த 3 மாதத்தில் 10 யானைகள் இறந்துள்ளன. இவை என்ன இயற்கை மரணமா? வனத்துக்குள் அந்த பிரம்மாண்டமான உருவம் படைத்த யானையையே காப்பாற்ற முடியாத நீங்களா- வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனா- சாமானிய மனிதர்களை காப்பாற்ற போகிறீர்கள்? 

                                   ********************

சட்டமன்றத்தில் பேசாத அமைச்சர் 

30 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை துவங்கி இந்த நாட்டை சீர்குலைக்கிற சட்டப் பிரச்சனை வரை அரசியல் களத்தில் தொடர்ச்சியாக நின்று போராடி அனுபவம் பெற்ற ஏழை பங்காளனை (என்.பாண்டி) நாங்கள் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். எளிமையான மனிதர்கள் மக்களின் பிரச்சனைகளை வலிமையாக முன்னெடுப்பார்கள். அமைச்சர் சீனிவாசன் மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் ஒற்றை வார்த்தைக் கூட பேசமாட்டார். ஆனால் எங்கள் வேட்பாளர் பெற்ற சொத்துக்கள் 30 ஆண்டு கால வழக்குகள் தான். 

                                   ********************

போராட்ட பூமி திண்டுக்கல்

எவ்வளவு மகத்தான சட்டப்பேரவை உறுப்பினர்களை தந்த மண் இந்த மண். ஏ.பாலசுப்ரமணியத்தில் துவங்கி எஸ்.ஏ.தங்கராஜன், என்.வரதராஜன், கே.பாலபாரதி வரை தேர்ந்தெடுத்த மண் இந்த மண். அவர்கள் எல்லாம் திண்டுக்கல் மக்களுக்காக மட்டும் சட்டமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை; ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து எம்எல்ஏவாக அனுப்புவது தான் ஒரு தொகுதியில் உள்ள வாக்காளரின் பெருமையாகும்.