கண்ணூர்:
கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) பெற்றுள்ள வரலாற்று வெற்றியின் நேரடி பயனாளிகள் கேரள மக்கள். இந்த மாபெரும் வெற்றி கேரள மக்களுக்கு பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கண்ணூரில் நடந்த செய்தியாளர்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் மேலும் கூறியதாவது:இடதுசாரிகளால் முன்வைக்கப்படும் அரசியல் மாற்றுக்கான அங்கீகாரமே இந்த தேர்தல் முடிவு. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த முடிவுஇந்திய அரசியலின் எதிர்காலத் திற்கான அடையாளமாகும். மாறிமாறி வரும் அரசுகளையே இதுவரைகேரளம் கண்டுள்ளது. எனவே இந்தவெற்றிக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. இந்த முடிவு அரசாங்கத்தையும் அதன்நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்வதன் பிரதிபலிப்பாகும்.
பெரும் அரசியல் போராட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தல் என்றதும் அதுவரை நிலவி வந்த சூழ்நிலையைத் தகர்த்தெறிவதற் கான நகர்வுகள் நடந்தன. பலவிதமான தாக்குதல்கள் நடந்தன. கேரளம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. ஆனால் மக்கள் முழுமையாக எல்டிஎப் உடன் இருந்தனர். அதனால்தான் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடிந்தது. ஒரு மாநிலமாகநாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சனைகளை எல்டிஎப்பால்தான் தீர்க்க முடியும் என்பதை மக்கள் நிரூபித்துள்ள னர்.
எளிய மக்களின் விருப்பம்
மதச்சார்பின்மைக்கு பல சவால்கள் எழுப்பப்படும் காலம் இது. வகுப்புவாதத்துடன் சமரசம்செய்யாதவர்கள் மதச்சார்பின்மை யைப் பாதுகாக்க அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் நலத்திட்டங்கள் மூலம் அரசாங்கம் பங்களித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கேரளத்தின் ஏழ்மையான பிரிவினரால் கூட ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த முடிகிறது. இதை எல்டிஎப் மட்டுமே செய்ய முடியும். கேரளத்தில் உள்ள எளிய மக்கள்,அவர்கள் நன்றாக வாழ விரும்பினால், எல்டிஎப் இன் தொடர்ச்சியானஆட்சி தேவை என்று நினைத்தார்கள். இது பொதுவாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து சமூகங்களிலும் நிகழ்ந்த ஒன்று.எல்டிஎப் அரசாங்கம் ஆட்சியில் நீடித்தால்தான் சமூக நீதியை முறையாகசெயல்படுத்த முடியும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, இந்த மாபெரும்வெற்றி கேரள மக்களுக்கு பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
பாஜகவின் கணக்கை முடித்தோம்
பாஜக பெரிய வெற்றியை ஈட்டுவோம் என்று கூறிக்கொண்டு இங்கேவந்தது. சாதாரண பெரும்பான்மை பெறாமலேகூட அரசு அமைக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள்.இந்த பிரச்சாரம் ஊடகங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில், பாஜக தனது கணக்கை கேரளத்தில் முடித்துக்கொள் ளும் என்று எல்டிஎப் கூறியது. கேரளம் வகுப்புவாதத்தின் விளை நிலம்அல்ல. இங்குள்ளது மதச்சார்
பின்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் என்பதை கேரள சமூகம் எவ்வித தயக்கமுமின்றி தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டின் பிரச்சனைகளிலும் மக்களின் பிரச்சனைகளிலும் ஒரு பகுதியாக இருக்கவோ அல்லது அதற்கேற்ப ஒரு நிலைப்பாட்டை எடுக்க வோ யுடிஎப் தயாராகவில்லை. எனவே அவர்கள் எழுப்பிய அனைத்து முழக்கங்களையும் மக்கள்நிராகரித்தனர். யுடிஎப் பின் இருப்பே தற்போது கேள்விக்குறி யாகும் நிலை உள்ளது. வளர்ச்சி நடவடிக்கைகளை நிறுத்தவும், பொது நலத் திட்டங்களை நாசப்படுத்தவும் மத்திய முகமைகள் போன்றவை களமிறக்கப்பட்டன. இந்த தேர்தல்முடிவு அவை எல்லாவற்றிற்கும் பதிலளிப்பதாக அமைந்துள்ளது.
வலதுசாரி ஊடகங்களின் இழிசெயல்கள்
கேரளாவின் பொது நலனைப்பாதுகாப்பதற்காக நடந்த பணிகள்மீது கரிபூசவும், அவற்றை முடக்கவும் வலதுசாரி ஆதரவு ஊடகங்கள் முயற்சி மேற்கொண்டன. யுடிஎப் - இன் கூட்டணிக்கட்சியை விடவும் மேலாக செயல்படும் ஊடகங்கள் இருந்தன. எல்டிஎப்-ஐ எவ்வாறு அவமதிப்பு செய்வது என்பது குறித்து அந்த ஊடகங்கள் ஆராய்ச்சி செய்தன.தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நாட்டுக்கு தேவையான அரசியல் எது என்பதை தீர்மானிப்போம் என்ற கூச்சலுடன் சில ஊடகங்கள் செயல்பட்டுள்ளன. எல்டிஎப்-க்கு எதிராக இவர்கள் எவ்வளவு முரட்டுத்தனமாக இருக்கிறார்கள் என்பதை நாம் சுயவிமர் சன ரீதியாக ஆராய வேண்டும்.
நாடு உங்கள் கைகளில் இல்லை என்று மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த ஊடகங்கள் என்ன சொன்னாலும் மக்கள் அப்படியே ஏற்பார்கள் என்று கருதக்கூடாது. சில ஊடகங்கள் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிக் கின்றன. நீங்கள் என்ன வகையானகதைகளைச் சொல்ல முயற்சித்தீர் கள்? தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் புனையப்பட்ட கதைகளாக அவை இருந்தன. பொது ஒழுக்கத்தின் எல்லைகளை மீறுவதற் கும் பொதுத் தளத்தையே மாசுபடுத்துவதற்கும் தயாராகவேண் டாம். இதுபோன்ற எந்த ஊடக மேலாளர்களையும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கூடுதல் பொறுப்பு
தேர்தல் வெற்றி எல்டிஎப்பை கூடுதல் பொறுப்புள்ளதாக மாற்றி இருக்கியிருக்கிறது. இது சாதாரண மக்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வெற்றியாகும். இது நன்மைகளுக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி. எல்டிஎப் அதிகாரபோதைக்குள் காலடி எடுத்து வைக்காமல் மக்கள் பக்கம் உறுதியாக நின்றது. அரசின் தலைமைத்துவம் குறித்து எந்தவொரு கேரளி
யரும் இதுவரை யாருக்கு முன்பும் தலைவணங்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. கோவிட் பொருந்தொற்று ஏற்படுத்தியுள்ள முன்னெப்போது மில்லாத கடினமான நேரத்தில் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
***************
சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்து
கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி 99 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில், ஒரு முறை ஆட்சிக்கு வந்த கட்சி அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியாது; மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிகள் தீர்மானிக்கப்படும் என்று இருக்கக்கூடிய கேரள மாநிலத்தில், முதல் முறையாக ஏற்கனவே ஆட்சியில் இருக்கிற ஒரு அரசு, இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மிகவும் சிறப்பாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட சிறப்பான வெற்றியும், அதிக எண்ணிக்கையில் பேரவை உறுப்பினர்களையும் வெற்றிபெறச் செய்து, 140 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி கேரளத்தில் மலர்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி என்பது எண்ணற்ற சவால்களையும், நெருக்கடியையும் சந்தித்ததாக இருந்த போதிலும், அவற்றை எதிர்கொண்டு இந்த வெற்றியை இடது ஜனநாயக முன்னணி சாதித்திருக்கிறது. கடுமையான மழை, வெள்ளம், நிபா வைரஸ் தொற்று காரணமாகவும், அதைத்தொடர்ந்து கொரோனா பரவல் முதல் அலை, இரண்டாவது அலை என்று அதனுடைய தாக்கத்தில் இருந்தும் மக்களை பாதுகாத்து மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு தேச, சர்வதேச அளவிலும் மிகச்சிறந்த பாராட்டுகளைப் பெற்ற அரசாக அது திகழ்ந்தது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, அதன் சாதனை மூலம் இந்த இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பொறுப்பு உள்பட, சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடிய பொறுப்புகளில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வைத்து ஒரு முன்னுதாரணமான அரசியல் தலைமையாக அது செயல்பட்டது. இத்தகைய சிறந்த செயல்பாட்டின் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தல் வெற்றியை சாதித்திருக்கிறது.
கடந்த ஐந்தாண்டு காலத்தில், மத்திய மோடி அரசாங்கத்தின் தீவிர தனியார்மயக் கொள்கையை எதிர்த்து, கேரளத்தில் அவர்கள் அரங்கேற்றியிருக்கிற மதவாத வன்முறை அரசியலை உறுதியுடன் எதிர்த்துப் போராடி, அதை கேரள மண்ணில் வீழ்த்தியுள்ளனர். மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், வாழ்வாதாரங்களை உருவாக்கவும் பல புதிய திட்டங்களைத் தீட்டி அவற்றை செயல்படுத்தினர். வருகிற ஐந்து ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை வகுத்து மக்கள் ஒற்றுமையை பேணி பாதுகாத்து ஒரு நல்லாட்சியை வழங்குவார்கள்; இந்தப் பணி இன்னும் சிறப்பாக தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துச்செய்தி....