election-2019

கன்னக்கோல் கள்வனும் மண்சட்டி கணேசும்...

அந்தக் காலத்தில் அமாவாசை இரவு நேரங்களில் திருடுவதற்கு வரும் திருடர்கள், சுவற்றில் ஓட்டை போட கன்னக்கோல் என்ற கருவியை வைத்திருப்பார்கள். அதன்மூலம் வீடுகளின் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைவர். அவ்வாறு ஓட்டை போடுவதை உணர்ந்து கொண்ட சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள், அவ்வாறு ஓட்டை போடப்படும் இடத்திற்கு அருகில் மிக வலிமையான கழி அல்லது கத்தியுடன் திருடன் உள்ளே நுழையும்போது அவனைத் தாக்கக் காத்திருப்பர். திருடன் இதையெல்லாம் அறிவான். அதனால், சுவற்றில் ஓட்டை போட்டதும் உடனே தலையை உள்ளே நுழைக்காமல் ஒரு கம்பில் மண்சட்டியை மாட்டி அதனை உள்ளே நுழைப்பான். அதற்கு வீட்டுக்குள்ளிருந்து எதிர்வினை ஏதும் இல்லாவிடில் உள்ளே நுழைந்து திருடவும் கொலைசெய்யவும் துணிவான். அவ்வாறன்றி, உள்ளே இருக்கும் வீட்டுக்காரர், அந்த இருட்டில், அந்த மண்சட்டியை திருடனின் தலை என்று நினைத்து தன் கையில் உள்ள கம்பால் வேகமாக அடித்தால், மண்சட்டி உடையும். அச்சத்தம் கேட்டவுடன் திருடன் தப்பித்தால் போதும் என்று ஓடிவிடுவான். அதேபோலத்தான், தமிழ்நாடு அரசில் பணியாற்றும் சில யோக்கிய சிகாமணிகள், தேர்தல் பணியில் பறக்கும் படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள உதவிச் செயற்பொறியாளரான, எஸ். கணேஷ் என்றஅலுவலரை மண்சட்டியாகப் பயன்படுத்தி யுள்ளார்கள். இந்தியா முழுதும் உள்ள ஊடகங்களும் அறிஞர்களும் விழிப்போடிருந்து இதனை எதிர்த்ததால், சம்மந்தப்பட்ட சதிகார அரசு அலுவலர்கள் பின்வாங்கி ஓடிவிட்டனர். தமிழ்நாட்டுத் தேர்தல் ஆணையர், சம்பந்தப்பட்ட பறக்கும்படை அலுவலர் திரு. கணேஷை தேர்தல் பணியிலிருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 


1. அவரைத் தேர்தல் பணியிலிருந்து நீக்கிவிட்டால், நடந்த அட்டூழியத்திற்கு தீர்வு கண்டதாக ஆகிவிடுமா?


2. மோடியின் ஆகாய அளவிலான ரபேல் ஊழல் வெளியே வராமல் தடுக்கவேண்டி, அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செயல்பட ஒரு உதவிச் செயற்பொறியாளர் எவ்வாறு துணிவார்? 


3. அந்த புத்தக வெளியீட்டு விழாவைத் தடுப்பதற்கு எந்த மேலதிகாரியிடம் முன் அனுமதி பெற்று பாரதி புத்தகாலயத்திற்குச் சென்றார்?


4. அந்த மேலதிகாரி யார்?


5. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பது பற்றி எந்தக் கோப்பில் அலசி ஆராயப்பட்டது? அதில் ‘அலுவலகக் குறிப்பில்’ யார்யார் தமது கருத்துக்களையும் , ஆணையையும் பதிவு செய்துள்ளனர்?


6. திரு. கணேஷ் ஒரு வெள்ளைத்தாளில் அலுவலகக் கோப்பு எண் ஏதும் குறிப்பிடா

மல், எப்படி ஒரு கடிதத்தை பாரதி புத்தகா லயத்திற்குக் கொடுத்தார்? அப்படியானால், இந்த நடவடிக்கை தொடர்பாக தேர்தல் அலுவலகத்தில் எந்தக் கோப்பும் இல்லை என்றுதானே பொருள்? இது அரசு அலுவலர்களுக்கான நடத்தை விதிகளில் உள்ள Lack of integrity, Lack of devotion to duty and conduct unbecoming of a government servant என்ற மூன்று குற்றங்களையும் திரு . கணேஷ் புரிந்ததற்கான சான்றுதானே?


7.இந்திய மக்களுக்கெதிரான (பிரஜா துரோகம்) செயலில் ஈடுபட்ட திரு. கணேஷ் மீது நடவடிக்கை எடுத்து விசாரித்தால், இவரை மண்சட்டியாகப் பயன்படுத்திய அந்தக் கன்னக்கோல் திருடன் யாரென்று மக்களுக்குத் தெரியும் அல்லவா?


8. அந்தக் கன்னக்கோல் திருடன் யாரென்று தெரிந்து விடக்கூடாதென்றுதான் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா?


முகநூல் பதிவிலிருந்து.... 

;