election-2019

img

அடிக்கல் நாட்டுவிழா எனும் அவல நாடகம்

அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் குளம் - குட்டைகளில் நீரை தேக்குவது. அதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் பெருகி பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும் பயனுள்ள திட்டமாகும். பில்லூர் அணையிலிருந்து உபரிநீரைக் கொண்டு நிறைவேற்றப்படும் திட்டம் இது.ஒவ்வொரு தேர்தலிலும் இந்தத் திட்டம் இந்தப் பகுதியில் கட்டாயம் எதிரொலிக்கும். ஏறத்தாழ 60 ஆண்டு காலமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும், அரசியல் கட்சிகளும் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக, தமிழக முதலமைச்சர் அவர்கள் அவசரம் அவசரமாக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார். அத்துடன் எல்&டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளில் திட்டம் நிறைவடையும் என்றும் அறிவித்தார். இவ்வளவு காலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கடுகளவும் கவலைப்படாத அதிமுக அரசு தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு அடிக்கல் நாட்டு விழா எனும் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது.


இத்திட்டம் துவங்கும் பகுதி வனத்துறைக்கு சொந்தமான பகுதியாகும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் ஒரு கல்லைக் கூட இவர்களால் எடுத்து வைக்க முடியாது என்பது முதல்வருக்கே தெரியும். ஆனால், இத்திட்டம் தொடர்பாக அனுமதிகேட்டு இன்றைய தேதி வரை கடிதம் கூட தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.இத்திட்டத்திற்கு சுமார் 1700 கோடி ரூபாய் செலவாகும். மத்திய அரசின் நிதி உதவியில்லாமல் இவ்வளவு தொகையை மாநில அரசு ஒதுக்குவது சாத்தியமில்லை. ஆனால், இத்திட்டத்திற்கான நிதியும் மத்திய அரசிடம் கேட்கப்படவில்லை.எனவே, அடிக்கல் நாட்டு விழா என்பது தேர்தலில் விவசாயிகளை ஏமாற்றி வாக்கு வாங்குவதற்கு தானே தவிர திட்டத்தை நிறைவேற்றும் உண்மையான அக்கறை அதிமுக அரசுக்கு இல்லை என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த நல்ல திட்டம் நிறைவேற வேண்டுமானால் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் குரலெழுப்ப வேண்டும். மத்திய அரசிடம் போராடி அனுமதி பெறுபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம், இதை கட்டாயம் செய்ய முடியும். விவசாயிகளே! சிந்தித்து வாக்களிப்பீர்.


பெ.சண்முகம்

;