election-2019

கீழ்க்கண்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக முன்னெடுக்கும்

மாநில உரிமைகள்


ஆளுநர் நியமன முறை, ஆளுநர்களின் தற்போதைய செயல்பாட்டை பரிசீலிப்பது; மாநில அரசு அனுப்பும் 3 பெயர்களில் ஒருவரை ஆளுநராகக் குடியரசு தலைவர் நியமிக்க வழிவகை செய்வது


திட்டக்குழுவை மீண்டும் அமைப்பது, திட்டக்குழு அமைப்பில் மாநிலங்களுக்கு உரிய பங்கை உறுதிப்படுத்துவது; தேசிய வளர்ச்சி கழகத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளித்து, திட்டக்குழுவை அதன் நிர்வாக அங்கமாக மாற்றுதல்


கல்வித் துறையை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவது; பொதுப்பட்டியல், மாநிலப்பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தையும் மாநிலங்களுக்கு வழங்குவது.

15ம் நிதி ஆணையத்தின் பணி வரம்புகளும், வரையறைகளும் மாற்றி அமைக்கப்படுவது; மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, மத்திய அரசு பெறுகின்ற செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட வரி வருவாயில் 50 விழுக்காடு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது, மத்திய அரசு முன்மொழியும் திட்டங்களின் முழுச்செலவையும் மத்திய அரசே ஏற்பது. 


தமிழகத்துக்குத் வர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வற்புறுத்துவது


சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் வரி கொள்கைக்கான வாய்ப்பை விரிவுபடுத்தப்படுவது


மத்திய அரசின் வரி கொள்கையில் கூடுதலான நிதி திரட்டல், வருமான வரி, சொத்துவரி, வாரிசு வரி போன்ற நேர்முக வரியினங்கள் மூலம் திரட்டுவதற்கு நிர்ப்பந்தங்கள் செய்வது; கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து வரியும், வங்கிக் கடனும் உறுதியாக வசூல் செய்யப்படுவது; வரி ஏய்ப்பு செய்யும் பெரு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது


ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள், பெட்ரோல் - டீசலுக்கான கலால் வரி விகிதங்கள் ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் மறைமுக வரிகளாக இருப்பதால், இவற்றின் சுமையைக் குறைப்பது 


தமிழ்மொழி வளர்ச்சி


தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்குவது  


தமிழை பயிற்று மொழியாகவும், வழக்காடு, வழிபாட்டு மொழியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுப்பது; தமிழ் வழியில் பயில்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது; தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல்மொழியாக இருக்க நடவடிக்கை எடுப்பது


கணினி தமிழ் முன்னெடுப்புகளை வலுவாக்குவது, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தள செய்திகள் தமிழில் இருப்பதை உறுதி செய்வது


மாநிலங்கள் மீது இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பைத் தடுப்பது, அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்தை வலியுறுத்துவது


மத்திய திட்டங்களை தமிழ்நாட்டில் தமிழ்பெயரில் அமலாக்குவது. 


ஊழல் ஒழிப்பு


உயர்மட்ட ஊழலை ஒழிக்க வலுப்படுத்தப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்துவது; அரசுக்கும் தனியாருக்கும் இடையே ஏற்படும் அனைத்து ஒப்பந்தங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இதன் வரையறைக்குள் கொண்டு வருவது; தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களையும், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களையும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது மற்றும் ஒரு நிறுவனத்தின் உள்ளிருந்தே ஊழலை அம்பலப்படுத்துபவர்களைப் பாதுகாக்கும் சட்டம் (Whistleblowers Protection Act) போன்ற சட்டங்களின் கீழ் கொண்டு வருவது; 


அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதோடு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது சொத்து விபரத்தை ஒவ்வொரு ஆண்டும் பகிரங்கமாக வெளியிடுவது 


ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடல்


இயற்கை வளங்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் சொத்தை முடக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, ககன்தீப் சிங் பேடி மற்றும் சகாயம் ஐ.ஏ.எஸ். அறிக்கையை வெளியிட்டு, மேல் நடவடிக்கை எடுப்பது


தமிழக அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் வழக்குகள், ரெய்டுகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்வது


அரசுப்பணி நியமனங்கள், ஊழியர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் ஊழலற்று நடைபெறுவது


நதிநீர் பிரச்சனைகள் மற்றும் பாசனம்


தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது, காவிரியின் குறுக்கே மேகதாட்டு, இராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்துவது 


முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது; பேபி அணையை கட்டும் பணியை துவக்குவது; நெல்லை மாவட்டம் செண்பகவல்லி அணையை புனரமைப்பது.


அனைத்துக் கட்சியினர் ஒருங்கிணைப்போடு நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளைப் பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், அண்டை மாநிலங்களோடும், மக்களோடும் பரஸ்பர நல்லுறவைப் பேணுவது 


காவிரி டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு, பெட்ரோலிய ரசாயன மண்டலம் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைப்பது 


அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து முடிப்பது, காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு போன்ற திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றுவது


நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதைத் தடுத்திட மழை நீர் சேகரிப்பு, குளங்கள், குட்டைகள் வெட்டுவது, பாசன, வடிகால் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர் வாருவது போன்ற பல்முனை நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதற்கு உரிய நிதியை மத்திய அரசிடம் கோரி பெறுவது.


இலங்கை தமிழர்கள் பிரச்சனை


இலங்கையில் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட மத்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது


இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு சுயேச்சையான நம்பகத்தன்மையுடனான உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்துவது


தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது



ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு


மக்கள் இயக்கங்கள், வெகுமக்கள் போராட்டங்களுக்கு முறையாகவும், பாகுபாடு இன்றியும் அனுமதி கிடைத்திட, மாற்றுக் கருத்துக்களை, படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது, காலனிய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டத்தை மாற்றி அமைத்து, அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தை தேச விரோத, தேசத் துரோக செயல்போல சித்தரிப்பதைத் தடுப்பது 


ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட, அரசின் முடிவுகளை விமர்சிக்கும், ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படாமல் தடுத்திட, ஊடகத்துறையினரின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் நிறைவேறிட நடவடிக்கைகள் எடுப்பது


அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில் பங்கேற்றோர் மீது புனையப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்வது


தகவல் உரிமை சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வது



சட்டம் - ஒழுங்கு


தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப்பாலினத்தவர் உள்ளிட்டோர் மீதான பாலியல் குற்றங்கள், உரிமை மீறல், வழிப்பறி, நகைப் பறிப்பு போன்றவற்றைத் தடுக்கவும், சீரான சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்தவும் உறுதியான நடவடிக்கைகள், சமூக விரோத சக்திகளை ஒடுக்குவது, கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி, கடத்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி கண்ணியமாக வாழ்வதை உறுதி செய்வது


காவல்நிலைய சித்ரவதைகள், லாக்கப் மரணங்கள், மனித உரிமை மீறல் மற்றும் அரசியல் தலையீடுகளைத் தடுத்து நிறுத்துவது, அத்துமீறல்களில் ஈடுபடும், தவறிழைக்கும் காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை துரிதமாக மேற்கொள்வது  


பெண்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் அத்தகைய காவலர்கள் மீது ஐ.பி.சி. 166 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது


காவல்துறையினருக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும் 8 மணி நேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்வது


தேர்தல் சீர்திருத்தம்


ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் பண ஆதிக்கம் தேர்தலை கேலிக்கூத்தாக்குவதை தடுத்து, ஜனநாயக அடிப்படையில் மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்வது, அனைத்து வாக்காளர்களது வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்துவது


நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவது


உயர்மட்ட ஊழலுக்கு வழி வகுக்கும் தேர்தல் பத்திரம் மூலமான நன்கொடையைத் தடுக்க விதி உருவாக்குவது, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நன்கொடை அளிப்பதைத் தடை செய்வது 


அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு உச்சவரம்பு விதிப்பது


தேர்தல் ஆணையர்கள், ஓய்வு பெற்ற பின், அரசு பொறுப்புகளுக்கோ, ஆளுநர், சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்வு செய்யப்படுவதை சட்ட ரீதியாகத் தடுப்பது


நீதித்துறை

நீதித்துறையில் நடக்கும் நியமனம், இடமாறுதல், நீதிபதிகள் மீது எழும் குற்றச்சாட்டுகளை விசாரித்தல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனிக்க சுயேச்சையான தேசிய நீதித்துறை ஆணையத்தை உருவாக்குதல்


நீதிமன்ற அவமதிப்பு என்பதன் வரையறையைப் பொருத்தமாக மாற்றுவது; மாற்றுக்கருத்துக்களையும், விமர்சனங்களையும் அவமதிப்பு என்ற பெயரால் ஒடுக்குவதைத் தவிர்ப்பது


நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்வது


சாமானிய மக்களும் செலவழிக்கக் கூடிய கட்டணத்தில் விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்வது


பொதுத்துறை


நவரத்தின பொதுத் துறை நிறுவனங்கள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிப்பது, அந்நிறுவனங்கள் பலப்படுத்தப்படுவது; லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை தடுப்பது, நட்டத்தில் இயங்குகின்ற, சமூக நோக்கோடு செயல்படுகிற பொதுத் துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவதற்கு எல்லா

முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது; ரயில்வே தனியார்மயத்தை ரத்து செய்வது


வங்கிகளில் வராக்கடன் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளின் பட்டியலை வெளியிடுவது, அவர்களது பாக்கியை முழுமையாக வசூல் செய்து பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாப்பது


வங்கி குறைந்தபட்ச கையிருப்பிற்கான தண்டத் தொகையை ரத்து செய்வது


அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனை தடுத்து நிறுத்தப்படுவது, அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நான்கும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கழகமாக செயல்பட ஆவன செய்வது


எல்.ஐ.சி பிரிமியங்கள், உடல் நல காப்பீடு மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு பிரிமியங்கள் மீதான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்பட வலியுறுத்துவது


பி.எஸ்.என்.எல் நிறுவனம் முழுமையான அரசு நிறுவனமாக தொடர்வது, பி.எஸ்.என்.எல் க்கு 4 ஜி சேவை, கட்டமைப்பு வளர்ச்சிக்கான அனுமதிகளில் உள்ள உள்நோக்கத்துடனான தாமதங்கள் முற்றிலுமாக களையப்பட்டு அதன் வளர்ச்சி முழுமையாக உறுதி செய்யப்படுவது 


இயற்கை பேரிடர்


தொடர்ந்து ஏற்பட்டு வரும் இயற்கை இடர்பாடுகளால், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடு செய்யும் வகையில் நிவாரண உதவிகள் வழங்கிட “இயற்கை பேரிடர் நிவாரண உதவித் திட்டம்” வகுப்பது, நிரந்தர பேரிடர் தடுப்பு திட்டம் உருவாக்கப்படுவது, நிவாரணப் பணிகளில் பெண்கள், குழந்தைகளின் சிறப்புத் தேவைகளை கருத்தில் கொள்வது


பேரிடரைத் தடுக்கும் நோக்குடன் பெரு நகரத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை முறையாகப் பராமரித்தல், ஏரி போன்ற நீர்நிலைகளைத் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துவது நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, இதனால் பாதிக்கப்படும் ஏழை-எளிய மக்களுக்குப் பொருத்தமான மாற்று இடம் வழங்குதல், பேரிடர் மீட்பில் நகர பகுதிகளுக்கு கிடைக்கும் அதே மீட்பு பணிகள் கிராமப் புறங்களையும் உடனே சென்றடைய நடவடிக்கை எடுத்தல் 


பேரிடர் மேலாண்மையில் மீட்பு (rescue), நிவாரணம் (relidf), மறுவாழ்வு (rehabilitation) ஆகியவை முதன்மைப்படுத்தப்படுவதோடு, மட்டுப்படுத்துதல் (mitigation) முயற்சிகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து தரப்பு-பகுதி மக்களை சென்றடைய வேண்டும். பாரபட்சமற்ற அணுகுமுறை மிக அவசியம். 


பேரிடர்களை எதிர்கொள்ள தற்போது உள்ள (National Disaster Management Fund) தேசிய பேரிடர் மீட்பு குழுவின்  செயல்பாடுகளை, உள்ளூர் மக்களின் இணைப்புடன் சீர்படுத்துவது, மாநில அளவில் அதற்கான தனி துறையும், நிதிஒதுக்கீடும் உருவாக்குவது, பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள அனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றினை உருவாக்குவது 


தொழில் வளர்ச்சி


தமிழகத் தொழில் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு குறு நடுத்தர தொழில்களை வளர்ப்பதும், பாதுகாப்பதும் அத்தியாவசியமானது. உயர் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யினால் இவை நலிந்து கிடக்கின்றன. சிறு குறு தொழிலுக்கு முன்னுரிமை அளித்தல், கடந்த காலத்தைப் போலவே சில குறிப்பிட்ட தொழில்களின் உற்பத்தியை சிறு தொழில்களுக்காக ஒதுக்குதல், தடையற்ற மின்சாரம், இத்தொழில்களுக்கு நிரந்தரமாக உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளை பெற்றுத் தருவது, அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்கள் 25 சதவிகிதம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதியை உறுதியாக அமலாக்குவது  


குறுந்தொழில் பேட்டைகள், மூலப்பொருள் வங்கி அமைத்தல், சொத்துப் பிணையம் இன்றி கடன் உதவி வழங்குதல் மற்றும் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித் தர நடவடிக்கைகள் எடுப்பது


பெருந்தொழில் முதலீட்டாளர்களிடம் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை கட்டாயமாக்கி செயல்படுத்துவது


உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது 


விவசாயத்திற்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள ஜவுளி தொழில் நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல், பட்டாசு, தீப்பெட்டி, பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி, ரப்பர், முந்திரி, தோல்

பதனிடுதல் உள்ளிட்ட தொழில்கள் நசிவைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஜி.எஸ்.டி.யைக் குறைத்து, சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பது


சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ரத்து செய்தல்; உள்நாட்டு கார்ப்பரேட் சில்லரை வர்த்தகத்தை முறைப்படுத்துதல்


வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்


விவசாயத்தை மேம்படுத்தவும், அதை லாபகரமான தொழிலாக மாற்றவும், கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குமான கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுப்பது


அனைத்து விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் அடக்க விலையோடு 50 விழுக்காடு சேர்த்து விலை தீர்மானிப்பது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் தானியங்களை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் முழுமையாகக் கொள்முதல் செய்வது 


கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ. 1200 கோடியை வட்டியுடன் வழங்கிட உறுதியான நடவடிக்கை மேற்கொள்வது


உயர் அழுத்த மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதை நிறுத்தி, மாற்று வழியான புதை வடங்கள் கொண்டு, சாலையோரங்களில் பதித்து நிறைவேற்றுவது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பு குறைந்ததற்கான இழப்பீடும், வருட வாடகையும் வழங்க வலியுறுத்துவது 


இயற்கை முறை விவசாயத்திற்கு உரிய மானியம் வழங்கி ஊக்கமளிப்பது, மரபணு மாற்ற பயிர்களுக்கும், அதன் சோதனைக்கும் தடை விதிப்பது 


தற்போதைய வேளாண் நெருக்கடியில் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்வது, தனியாரிடம் பெற்ற கடன்களைத் தீர்க்க ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுப்பது.


அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் அதை பயன்படுத்துவதற்கான பயிற்சி ஆகியவற்றை விவசாயிகள் பெறுவதற்கு உரிய நிதி ஏற்பாடுகளை அரசு செய்யக் கோருவது  


விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை மாற்றியமைக்க வலியுறுத்துவது


பால் கொள்முதல்விலையை தீவன விலை உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தி அறிவிப்பது, கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு கோழி வளர்ப்பு கூலியை உயர்த்திக் கொடுப்பது


இதர கிராமப்புறத் தொழில்கள்


கால்நடை, கோழி வளர்ப்பு, கைவினைப்பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து கிராமப்புறத் தொழில்களுக்கும் உரிய நிதி, கடன் மற்றும் மானியங்களை அரசு அளித்திடுவதை உறுதிப்படுத்துவது


நிலம்


விவசாய விளைநிலங்கள் வரைமுறையற்று வீட்டு மனைகளாகவும், விவசாயம் அல்லாத பணிகளுக்கும் மாற்றப்படுவதை ஒழுங்குபடுத்த தேவையான சட்டம் இயற்றுவது 


2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீள்பார்வைக்கு உட்படுத்தி விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலம் கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பது, ஒப்புதலுடன் கையகப்படுத்தும் போது விவசாயிகள், விவசாய தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படுவது, உரிய இழப்பீடு வழங்குவது, அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலையில் 10 விழுக்காடு பங்குகளை அவர்களுக்கு வழங்குவது, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலையும், நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளித்திடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த காலத்தில் கொடுத்த இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது 


தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப் படுத்தி, உபரி நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு தலா 2 ஏக்கர் வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பது; தலித், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது; பெண்கள் பெயரில் தனிப்பட்டா மற்றும் கூட்டுப்பட்டா வழங்குவது



அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது, இந்நிலங்களில் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் நிலமற்ற ஏழை குத்தகைதாரர்களுக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் அந்நிலங்களை சொந்தமாக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்வது,


வன விலங்குகளால் ஏற்படும் சாகுபடி நஷ்டத்திற்கு முழு இழப்பீடு வழங்கிட வலியுறுத்துவது


தமிழகத்தில் எஸ்டேட் நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுப்பது 


குமரி, நீலகிரி மாவட்டங்களில் அமலாக்கப்பட்டு வரும் “தனியார் வனப்பாதுகாப்புச் சட்டம்” திருத்தப்பட்டு, விவசாயிகளுக்கு நில உரிமை வழங்குவது  








 



;