election-2019

அதிமுக வேட்பாளர் பின்னால்... சில மணி நேரங்கள்

‘‘மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு தமிழில் பேச வராது. ஆங்கிலம் நன்றாக பேச வரும்’’ என்ற தெர்மாக்கோல் அமைச்சர் செல்லூர் ராஜு பேசத் துவங்கியதும்கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து சமாளித்த அவர் தொடர்ந்து பேசுகையில்,‘‘நாடாளுமன்றத்தில் போய் பேசனுமில்ல ஆத்தா; சும்மா அங்க போய் பொம்ம மாதிரி உட்கார்ந்து கொண்டு வருபவருக்கு ஓட்டு போடக்கூடாது... தமிழைக் காட்டிலும் இப்போது தான் தமிழில் நன்றாக பொளந்து கட்டுகிறார். தமிழில் பின்னி எடுக்கிறார். நம்ம வேட்பாளரு...’’ என்று மீண்டும் உளறினார்.அடுத்து, வடிவேலின் ‘‘மின்னல் ஜோக்’’ மாதிரி பேச ஆரம்பித்தார். ‘‘அண்ணன் ராஜன் செல்லப்பா வந்திருக்கிறாரு’’... மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன் வந்திருக்கிறாரு... தம்பி அண்ணன் வடிவேல் வந்திருக்கிறாரு... என்னா எல்லோரும் வந்திருக்கிறாரு... வந்திருக்கிறானு சொல்றோம்... சிரிக்க மாட்டீங்களா? கூட்டணி கட்சிக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க... எல்லாம் ரெண்டு விரலைக் காட்டுங்க’’ என்றார். ‘‘இப்ப பத்திரிகைகாரங்க எல்லாம் படம் எடுங்கப்பா. ஏனப்பா இப்ப படம் எடுக்க மாட்டேங்குறீங்க’’ என்று கெஞ்சாத குறையாக கூறினார். பத்திரிகைகாரர்கள் ஓரமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.


இதனையடுத்து பேசிய வேட்பாளர் ராஜ் சத்யன் உளறிக் கொட்டினார். ‘‘அம்மாவின் சின்னம் பறிக்கப்பட்டுவிட்டது என்றார். தாய்மார்களுக்காக வாழ்ந்து மறைந்த அம்மா, தன்னுடைய தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிப்பார்கள்; ‘‘அம்மா வளர்த்த அதிமுகவை ஆட்சிகட்டிலில் வைத்து நாடாளுமன்றத்தில் ஒடுக்கி வைப்பார் என்று நினைத்துத்தான் சின்னத்தை விட்டுச் சென்றிருக்கிறார்’’ என்று பேசினார் ஒன்றும் புரியவில்லை. பேச்சை முடித்துக்கொண்ட ராஜ் சத்யன் அடுத்த இடத்திற்கு புறப்பட்டார். ஆனால் வாகனத்தில் அழைத்து வந்த பெண்களுக்கு பணம் எதுவும் தராததால் ஆரத்தி தட்டுடன் நின்றவர்கள் ஏமாந்து நின்றார்கள். மேலும் கூட்டம் காட்டுவதற்காக தொடர்ந்து 3 மையங்களுக்கு அதே பெண்கள் வந்தனர். வேட்பாளரின் தந்தை ராஜன் செல்லப்பா வாகனத்திலேயே இருந்து கொண்டார். அமைச்சர் செல்லூர் பாதியிலேயே திரும்பி விட்டார். 


காஞ்சரம்பேட்டையில் வாக்கு சேகரிப்பின் போது தொண்டர்கள் தங்களின் பெயரை சொல்லவில்லை என்று தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து வார்டு செயலாளர் உட்பட பலரது பெயர்களை வாசித்த பிறகே வேட்பாளர் அங்கிருந்து புறப்பட வேண்டியதாயிற்று. சின்னபட்டியில் அந்த பகுதி தேமுதிக தலைவர்களை வாகனத்தில் ஏற்றவில்லை. மேலும் வேட்பாளருக்கு சால்வை அணிவிப்பதற்கு பதிலாக தேமுதிக தலைவருக்கு தனியாக ஒரு பாராட்டுவிழா நடத்திக்கொண்டிருந்தார்கள். கொடிமங்கலத்தில் வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி பணம் தராததால் அப்பகுதி பெண்கள் ஆரத்தி தட்டுடன் நின்று கொண்டே இருந்தார்கள். அப்போது வார்டு செயலாளர் ஆடுகளை ஓட்டுவது போல துண்டை எடுத்து விரட்டினார்.


இலமு, பா.ரணதிவே

;