election-2019

அப்போதெல்லாம் வாக்காளரை விலைக்கு வாங்கினார்கள்

அப்போதெல்லாம்

வாக்காளரை விலைக்கு வாங்கினார்கள்,

இப்போது வேட்பாளர்களையே வாங்கிவிடுகிறார்கள்


அப்போதெல்லாம்

கட்சியில் செல்வாக்கைக் காட்டி சீட்டுக்கேட்டார்கள்

இப்போது செலவுசெய்யும் தகுதி அறிந்தே சீட்டுத் தருகிறார்கள்


அப்போதெல்லாம்

தலைவர்களை விலைக்கு வாங்கினார்கள்

இப்போது கட்சிகளையே வாங்கிவிடுகிறார்கள்


அப்போதெல்லாம்

அமரர் ஊர்தி பிணத்தோடு போனது,

இப்போது பணத்தோடு போகிறது!


அப்போதெல்லாம்

முற்றும் துறந்தவர்களையே முனிவர்கள் என்றார்கள்

இப்போது, காவிஉடைகளில் கார்ப்பரேட் வணிகர்கள்!


அப்போதெல்லாம்

நீதிபதியிடம் நீதிமன்றம் போய் நீதி கேட்டோம்

இப்போது நீதிபதிகளே வீதிக்கு வந்து நீதி கேட்கிறார்கள்


அப்போதெல்லாம்

குற்றவாளிகளுக்கு தண்டனை தந்தார்கள்

இப்போது பதவி உயர்வு தந்து பாராட்டுகிறார்கள்!

 

அப்போதெல்லாம்

ஆடம்பரப் பொருள்களுக்கே அதிகவரிபோட்டார்கள்

இப்போது அவசியப் பொருள்களுக்கே அதிகவரி போடுகிறார்கள்


அப்போதெல்லாம்

கோமாளிகள் சர்க்கஸில்தான் இருந்தார்கள்

இப்போது சர்க்காரிலேயே இருக்கிறார்கள்


அப்போதெல்லாம்

தலைவர்கள் புயல்சேத ஆறுதலுக்கு வந்தார்கள்

இப்போது தேர்தலுக்கு மட்டுமே வருகிறார்கள்.


நா.முத்துநிலவன்


;