election-2019

தேச விரோதிகளின் 124 - ஏ

420, 124 - ஏ - இவை இரண்டுமே இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் எண்கள். இவற்றில் 124 ஏ பற்றி அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் நன்கறிவர். அதாவது தேசவிரோத செயல்களில் ஈடுபடுவது, தேச விரோதமாக பேசுவது, முழங்குவது, சைகை மூலம் வெளிப்படுத்துவது, தேசத்தை ஏதாவது ஒரு வகையில் அவமதிப்பது என்பதெல்லாம் இந்திய தண்டனைச் சட்டம் 124 - ஏ பிரிவில் அடங்கும். பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, தேசப்பற்றின் வெளிப்பாடு ஆகியவற்றை முடக்குவதற்காக குற்றவியல் சட்டத்திற்கு மூலகாரணமாக இருந்த மெக்காலே  (கல்வியில் ஆங்கிலத்தைத் திணிக்க வழிவகுத்த அதே மெக்காலேதான்) தண்டனை சட்டத்தில் 1870 - ஆம் ஆண்டு இதனைச் சேர்த்தார். இந்திய விடுதலைக்குப் போராடியவர்களை ஒடுக்குவதற்காக 150 ஆண்டுகளுக்கு முன் பிறப்பெடுத்த கிழட்டுப் பிரிவு இது. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் இந்தச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருக்க வேண்டும்; குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காலனி ஆதிக்க பிரிட்டிஷ் அரசின் மாற்று வடிவமாக இங்கே பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசுகள் அமைந்ததால் மக்களின் போராட்ட உணர்வு தங்களின் மீதும் திரும்பும் என்று அறிந்து இதனை அப்படியே பாதுகாத்து வைத்தனர். அதுதான் இன்று தன் கோரப் பற்களால் கண்டவர்களையெல்லாம் கடித்துக் குதறுகிறது. கொஞ்சம் ஜனநாயக எண்ணம் கொண்டவர்களுக்கு அதிகாரம் கிடைத்தாலே ஆட்டம் போடுவார்கள். சர்வாதிகார குணம் கொண்ட சங்பரிவார கும்பல் ஆடுவதற்கு கேட்கவா வேண்டும்? அவர்களின் ஆட்டங்களில் சில காட்சிகள்:


l மேற்கு பீகாரில் ரோட்டஸ் மாவட்ட போலீசார் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் தேசவிரோத வழக்கில் 5 மைனர்கள் (இளம் சிறார்கள்) உட்பட 8 பேரை பிடித்தனர். அவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா? முஜாஹித் (நாட்டை விட்டு வெளியேறியவர்கள்) பற்றிய ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியது தான். அந்த சிறார்களுக்குப் பாடலின் பொருள் கூட தெரியாது என்பது கூடுதல் தகவல். தேசவிரோத பிரிவின்கீழ் பெரியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 


l ஜார்க்கண்ட் பாஜக ஆட்சியில் கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று 20 ஆதிவாசிகளுக்கு எதிராக தேசவிரோதப் பிரிவு பயன்படுத்தப்பட்டது. அவர்கள் அப்படி என்ன குற்றம் செய்தார்கள்? முதலமைச்சர் ரகுபர்தாஸ் தலைமையிலான அரசை விமர்சித்து முகநூலில் பதிவிட்டது தான். 


l 2014 அக்டோபர் மாதத்தில் கேரளாவில் 25 வயது தத்துவத் துறை மாணவரும் அவரது நண்பர்களும் இந்த சட்டப்பிரிவுக்கு இலக்கானார்கள். இவர்கள் செய்த குற்றம் என்னவென்றால், திரைப்படத்திற்கு முன்னால் திரையிடப்பட்ட தேசிய கீதம் பாடலின் போது எழுந்து நிற்காதது தான். 


l 2015 நவம்பர் மாதம் நாடே கொந்தளித்த சமயம். நாங்கள் இடும் கட்டளைகளைப் பிடிக்காதவர்கள், எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விடுங்கள் என்று சங்கிகளால் மிரட்டப்பட்ட காலம். இதனை சகித்துக் கொள்ள முடியாமல் எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் நாடக, திரைப்படக் கலைஞர்களும் விருதுகளை மோடியின் முகத்தில் வீசி எறிந்த காலம். 

அப்போது ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் திரைப்பட நடிகர் அமீர்கான் பேசுகிறார். நாட்டில் சகிப்பின்மை அதிகரிப்பதால் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாம் போலிருக்கிறது என்று மனைவி சொன்னதாக அவர் கூறினார். இதனையும் சகித்துக் கொள்ள முடியாத சங்பரிவார்கள் அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்தது. கான்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இன்னமும் அது நிலுவையில் இருக்கிறது. நபர்கள் மட்டுமல்ல அமைப்புகளும் தேசவிரோத வழக்கிலிருந்து தப்பிக்க வில்லை, இந்திய சர்வதேச பொது மன்னிப்புக்கான ஒரு தொண்டு நிறுவனம், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பரப்புரை செய்தது . இது பற்றி பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளிவந்தன. இது ஒரு குற்றமா? தொண்டு நிறுவனத்தின் மீது தேச விரோத வழக்குப் பாய்ந்தது. கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு விசாரணை நீதிமன்றம், இது பதிவு செய்யப்படவேண்டிய வழக்காகவே இல்லை.  இந்தச் செயல் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாகும் என்று குறிப்பிட்டு வழக்கை நிராகரித்துவிட்டது. 


l பிரதமர் நரேந்திர மோடியையும் மணிப்பூர் முதலமைச்சர் நாங்தோம்பாம் பிரேன் சிங்கையும் விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்டதற்காக அம்மாநில பத்திரிகையாளர் கிஷோர் சந்திர வாங்கெம் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த இம்பால் மேற்கு தலைமை குற்றவியல் நீதிமன்றம் மோடிக்கும் பிரேன் சிங்குக்கும் வலுவான குட்டு வைத்தது . 

நாட்டின் குடிமக்கள் நாகரீகமான வார்த்தைகளாலோ கடுமையான சொற்களாலோ தாங்கள் நினைக்கும் கருத்தினைக் கூறினால் அதனைப் பெரும் குற்றமாக எடுத்துக் கொள்ளும் அளவுக்குப் பிரதமர், முதலமைச்சர் போன்ற அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் உணர்ச்சிமயமாக இருக்கக் கூடாது. 

இது போன்ற அறிவுரைகள் எல்லாம் சங்கிகளின் தடித்த தோலுக்கு உறைக்காது என்பதற்கான புள்ளிவிபரத்தை பாருங்கள். 


l பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2013 - இல் 124 ஏ பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் வெறும் 9 தான். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபின் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 2014 - இல் 47, 2015- இல் 30, 2016 - இல் 35 என 3 ஆண்டுகளில் 112 தேசவிரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய குற்றவியல் ஆவணங்கள் ஆய்வுக்குழுதான் இந்தக் கணக்கைத் தந்துள்ளது. தேச துரோக வழக்குகளில் இருந்து தமிழகம் தப்பி விட்டதா என்ன ? பாஜகவின் கட்டளைகளுக்கு சிரம் தாழ்த்திப் பணிவிடை செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு எத்தனையோ வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. பாடகர் கோவன், சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குகள். 124 - ஏ என்கிற இந்தப் பிரிவு பற்றி சட்ட ஆணையம் சென்றாண்டு சமர்ப்பித்த அறிக்கையில் என்ன கூறுகிறது? 


l இந்தப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? 


l எந்த பிரிட்டிஷ் அரசு இந்த சட்டப்பிரிவை தண்டனைச் சட்டத்தில் சேர்த்ததோ அந்த நாட்டிலேயே 10 ஆண்டுகளுக்கு முன்னால் முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? இதைப் பற்றி எல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கிற 420 பேர்வழிகள் கண்டுகொள்வதில்லை. 420 என்றால் ஏமாற்று. ஆட்சித் தலைமையின் ஏமாற்று பற்றி பாஜகவுடனேயே பயணம் செய்த ராம்ஜெத்மலானி கூறியிருப்பதே சான்று.



;