election-2019

ஓட்டுப் போட்டதற்காக உடைக்கப்பட்ட கை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித்துகள் குடியிருப்புப் பகுதிக்குள் பாமகவினர் தாக்குதல் நடத்திய இடத்திற்கு செல்லலாமா என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சின்ணை பாண்டியன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஆகவே அங்குகாவல்துறை நம்மை அனுமதிக்காது என்றுசொன்னார். ஆனால் அங்கு தாக்குதலுக்கு உள்ளான திரு.இரவி அவர்கள் மட்டும் தஞ்சைமருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் அறிந்து அங்கு அவரைநாங்கள் பார்க்கச் சென்றோம். எங்களோடு சிபிஐ(எம்) தோழர் கரிகாலனும் வந்திருந்தார்.இரவி அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுசுயநினைவு இல்லாத சூழலில் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டுள்ளார். அவருக்கு வலதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருக்கிறது. இடதுகையில் ஆழமான கீறல்கள் எற்பட்டிருக்கிறது. முகத்தில் கடுமையான ரத்தக்கட்டோடு கொண்ட வீக்கங்கள் இருக்கிறது. தலையிலும், முதுகிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. வெள்ளியன்றுதான் அவருக்கு சுயநினைவே திரும்பியுள்ளது. வியாழன் இரவுதோழர்.திருமாவளவன் அவர்கள் நேரில் வந்து பார்த்து சென்றுள்ளார்.


கொடூரமாக கொலைவெறித் தாக்குதல்நடத்தும் அளவிற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள். அந்த கிராமப்பஞ்சாயத்தில் சுமார்5000 ஓட்டுகள் இருக்கின்றன. அதில் தலித் ஓட்டுகள் சுமார் 1100 ஓட்டுகள். வாக்குப்பதிவன்று அந்த 1100 ஓட்டுகளையும் முழுமையாக பதிவிடவைக்க அந்தப்பகுதி மக்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். வயதானவர்களை அழைத்து வர வாகன ஏற்பாடு, இயலாதவர்களை தூக்கி வர ஆட்கள் ஏற்பாடு, வெளியூரில்உள்ளவர்களை வாக்களிக்க வரவழைக்கும் ஏற்பாடு, என்று 100 சதவீதம் வாக்குப்பதிவைஉறுதி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தாக்குதலுக்கு உள்ளான இரவிஅவர்களின் 2 மகன்களும் வாக்களிப்பதற்காகவே சென்னையில் இருந்து தங்கள் ஊருக்கு வந்துள்ளார்கள். உண்மையில் இந்தப் பணிகளை முழுமையாக செய்ய வேண்டியது அரசும்,தேர்தல் ஆணையமும் தான். ஆனால், போக்குவரத்து வசதியை கூட தேர்தல் ஆணையம் சரிவரசெய்யவில்லை. அந்த மக்களே தங்கள் வாக்குகளை முழுமையாக செலுத்த பணியாற்றி இருக்கிறார்கள். அவர்கள் தெருக்களில் வாக்குச்சாவடி இல்லை. (ஏன் இந்தியா முழுவதும் தலித் குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் இருப்பதில்லை) இருந்தபோதும் ஆதிக்க சாதியினர் வாழும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தங்கள் வாக்குகளை முழுமையாக செலுத்த பல்வேறு தடைகளைத் தாண்டியே சென்றுள்ளனர்.


வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலிருந்து தலித் மக்களின் உற்சாகமான நடவடிக்கைகள் பாமக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த ஆதிக்க சக்திகளை எரிச்சலூட்டியுள்ளது. மதியத்திற்குப் பிறகு தங்கள் எரிச்சலின் உச்சத்தில் தலித் மக்கள் குடியிருப்பு நுழைவாயிலில், ஊரின் பிரதான சாலை அருகே அமைந்திருந்த விசிக வினரின் கொடிக் கம்பத்தை முதலில்உடைத்துள்ளார்கள். அதனருகே வீசிகவின்தேர்தல் சின்னமான பானையை உடைத்துள்ளனர். இவ்வளவு அட்டூழியங்கள் நடக்கும் வரைபொறுமை காத்த தலித்துகள் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்டுகவே, நியாயம் கேட்டவர்களை, “ அவ்வளவு திமிரடா “ என்று தலித் குடியிருப்புகளுக்குள் சென்று திட்டமிட்டு ஆட்களை திரட்டிப்போய் தாக்கியுள்ளார்கள். தாக்குதலில் பல வீடுகள் சேதம் ஆகியுள்ளன.தலித்மக்கள் தங்கள் உழைப்பில் சேர்த்து வைத்திருந்த பொருட்களையும் தாக்குதல் காரர்கள் திட்டமிட்டு நாசப்படுத்தி உள்ளனர். அந்த ஊரில் இருந்த சிலரை உயிருக்கு ஆபத்தான வகையில் திட்டமிட்டு தாக்கியுள்ளார்கள். மேற்கண்ட சம்பவங்களை தொகுத்துப் பார்க்கையில்தலித் மக்கள் இந்த இடத்தில் எந்தத் தவறும் செய்யவில்லை. முழுக்க முழுக்க இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் அரசும் பாமக மற்றும் இந்துத்துவாவினர் தான். பாமக இந்துத்துவா அமைப்புகள் சரி, இதில் அரசு என்ன தவறு செய்தது? என்று சிலர் கேட்கலாம்.


அரசு செய்துள்ள, செய்துகொண்டிருக்கும் தவறுகள்


100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக போராடிக் கொண்டிருந்த தலித் மக்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்து கௌரவித்திருக்க வேண்டும். ஆனால் குறைந்த பட்ச பாது

காப்பை கூட ஆளும் அரசும் தேர்தல் ஆணையமும் செய்யவில்லை.


1100 வாக்குகள் உள்ள தலித் பகுதிக்குள் குறைந்து ஒரு வாக்குச்சாவடியாவது அரசு அமைத்திருக்கவேண்டும்.


தேர்தல் நடக்கின்ற போது, துணை இராணுவப்படைகளெல்லாம் இருந்தும் கூட, பட்டப்பகலில் நடக்கும் கலவரத்தை தடுத்து நிறுத்த ஒரு காவலர் கூட தாக்குதல் பகுதிக்கு வராமல் போனதில் அரசிற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் பொறுப்பு இல்லையா.


ஒரு தரப்பு மட்டுமே தாக்குதலுக்கும், சேதங்களுக்கும் உள்ளாகியிருக்கும் போது, இருதரப்பினருக்கும் இடையிலான மோதல் என்று அரசு இயந்திரமே செய்தி வெளியிட்டு, ஊடகங்களில் பரப்புவது எந்த வகையில் நியாயம்.


தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தியவர்கள் மீது, வாக்குப்பதிவை தடுத்தார்கள் என்று அரசு வழக்குப்பதிவு செய்யா

தது ஏன்?


இப்படிக்கேள்விகள் பலநூறு இருக்கிறது. இதில் தாக்குதலுக்கு உள்ளான மக்கள் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். “வாக்களிப்பதன் மூலம் தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்” என்ற ஜனநாயகத்தை நம்பியதை தவிர அவர்கள் தவறு ஏதும் செய்யவில்லை. வாக்களிக்க அவர்கள் தங்கள் விரலை நீட்டினால், ஆதிக்க வர்க்கம் அவர்கள் கைகளை உடைக்கிறது. அந்த ஆதிக்க வர்க்கத்திற்கு திருப்பிச் சொல்ல ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. அந்த பதிலை இறுதியாக நாங்கள் மருத்துவமனையைவிட்டு கிளம்பும்போது தாக்குதலுக்குள்ளான இரவி அவர்களே சொன்னார்.“எங்களால் திருப்பித் தாக்க வலு இருந்த போதும், அவர்களைப் போல் திருப்பித் தாக்கமாட்டோம். அதே வேளையில் எங்களை யாரும்அடிமைப்படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் விடுதலை எதில் இருக்கிறது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்”ஆம், அந்த மக்களுக்கான விடுதலை எதில் இருக்கிறது என்று அந்த மக்களுக்கு நன்றாகத்தெரியும். மற்றவர்கள் செய்ய வேண்டியது, அவர்களின் விடுதலை குரலுக்காக துணை நிற்கவேண்டியதே...


களப்பிரன்




;