election-2019

img

நெஞ்சம் துடிக்கவில்லையா மோடி? எத்தனை முறை சுடுவீர்கள் மகாத்மாவை?

நாகப்பட்டினம், ஏப்.5-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, வியாழக்கிழமை மாலை அவுரித்திடலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது, ‘தொழுதகையுள்ளும் படையொடுங்கும், ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து’என்றான் வள்ளுவன். 1948, ஜனவரி-30, காந்தி பிர்லா மாளிகைக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் போது, கைக் கூப்பியவாறே கோட்சே மூன்றுமுறை சுட்டானே, உலகமே பதறியது, ஆனால்,ஆர்.எஸ்ஸ். காரர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள்.இந்த ஜனவரி-30ல், இந்துமகா சபைத் தலைவியும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் காந்தியின் உருவ பொம்மையின் நெஞ்சப் பகுதியில் மீண்டும் மீண்டும்சுட்டு, ரத்தம் வடிப்பது போல், சிவப்பு வண்ணத்தைக் கொட்டி வடியச் செய்தார்களே இந்தக் காட்சியைக் கண்டு உங்கள் நெஞ்சம் துடிக்கவில்லையா மோடி? எத்தனை முறை சுடுவீர்கள் மகாத்மாவை? காந்தி இந்ததேசத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கேமகாத்மா அல்லவா? அதைப் பற்றி இதுவரை ஏதாவது, அப்படிச் செய்யக் கூடாதுஎன்று ஒரு வார்த்தை சொன்னதுண்டா? முற்போக்குச் சிந்தனையாளர்கள், மாபெரும் எழுத்தாளர்கள் கல்புர்கி, பன்சாரே, கெளரிலங்கேஷ், தபோல் கர் போன்றோரைக் கொலை செய்தபோது உங்கள் நெஞ்சம் துடிக்க வில்லையா மோடி?தமிழகத்தில் டெல்டா மாவட்டங் களில் கஜா புயலினால் 89 பேர் மடிந்தனர். லட்சக்கணக்கில் தென்னைகளும் பல்வேறு மரங்களும் வீழ்ந்தன. உங்கள்நெஞ்சம் துடிக்க வில்லையா மோடி? பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளை வந்து பார்க்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்ற வில்லையா? தமிழகத்திற்கும் நீங்கள் தானே பிரதமர்? தமிழக மாணவர்கள் மருத்துவத் துறையில் மேலோங்கி விடக் கூடாது என்று நீங்கள் கொண்டு வந்த ‘நீட்’ தேர்வால் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லையே என எங்கள் மாணவிகள் அனிதா, பிரதிபா போன்றவர்கள்தற்கொலை செய்து கொண்டார்களே… தூத்துக்குடியில் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல் லப்பட்டார்களே… உங்கள் நெஞ்சம் துடிக்க வில்லையா மோடி?


நாட்டின் காவலாளி என்று பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக் கொள்கிறீர்களே, விஜய் மல்லையா- 9500 கோடி, நீரவ் மோடி -13500 கோடி,கோத்தாரி -3500 கோடி என வங்கிகளில்கடன் வாங்கி, பெரிய முதலாளித்துவத்திமிலங்கள் 23 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றார்களே… உங்களுக்குத் தெரியாமலா ஓடினார்கள். அவையெல்லம் நமது நாட்டின்பணம் அல்லவா?நமது மீனவர்கள் கடலில் இன்னும் பாதுபாப்பு இல்லாமல் இலங்கப் படையினரால் பிடிக்கப் படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப் படுகிறார்கள், இலங்கைச் சிறையில் வதைக்கிறார்கள், அவர்களின் லட்சக்கணக்கான மதிப்புள்ள விசைப் படகுகளை இலங்கையினர் அபகரித்துக் கொள்கிறார்கள். நாட்டின் காவலாளி என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமில்லையா மோடி?ஹைட்ரோ கார்பன், மீத்தேன், எரிவாயு என எடுத்திட, காவிரி வளநாட்டைப்பாலைவனமாக்கிட, கார்ப்பரேட் கம் பெனிகளிடம் 2017, ஜூன்-19 அன்று, காவிரி டெல்டாவில் 55 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதிகளைத் தாரை வார்த்துக் கொடுத்து ஒப்பந்தமாகியுள்ளதே… எங்கள் நெஞ்சம் துடிக்கிறது. உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லையா மோடி? .  


மதநல்லிணத்திற்குப் பெயர் பெற்ற பூமி நாகை வாட்டம். இது போல், இந்தியதேசத்தில் பல மதங்கள், பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் உடையமக்கள் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள். மோடியின் ஆட்சியில் மதங்களின் பெயரால் கலவரங்கள், கொலைகள் என மிகுகின்றன. மோடி, ஹிட்லரைப்போல் ஒரு பாசிசவாதி, மீண்டிம் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. இந்தத் தேர்தல் பாசிசமா? ஜனநாயகமா? என மக்கள் முடிவுசெய்யும் தேர்தல், விடியலைத் தேடும் தேர்தல்.அன்பு மக்களே! திண்ணைக்குத் திண்ணை, வீதிக்கு வீதி சென்று எல்லாமக்களிடமும் பிரச்சாரம் செய்யுங்கள். மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியையும் நல்லவரும் வல்லவருமான எம்.செல்வராஜையும் வெற்றி பெறச்செய்து, இந்த தேசத்தையும் தமிழகத்தையும் காப்பாற்றுங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.

;