election-2019

img

பாஜகவின் ஊதுகுழல்களான தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி!

புதுதில்லி, ஏப்.6-


அரசு ஊடகங்களான தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் அப்பட்டமாக பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் ஊதுகுழல்களாக மாறியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக தலைமைத் தேர்தல்ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு கூறியிருப்பதாவது:தேர்தல் நடத்தை விதிகளை, ஒருபக்கம் பாஜகவும், மறுபக்கம் அரசு ஊடகங்களும், கொஞ்சமும் வெட்கமற்ற முறையில் மீறிக் கொண்டிருக்கின்றன. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இவ்வாறு இவர்கள் தொடர்ந்து நடத்தை விதிகளை மீறிவந்த போதிலும், தேர்தல் ஆணையமும், இவர்கள் மீது வலுவான நடவடிக்கைகள் எதையும் எடுப்பதற்கு முன்வராமல் உள்ளது. இதனால், நடைபெறவிருக்கும் தேர் தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா? என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர் களையும் இந்நிகழ்ச்சிப் போக்குகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.அண்மையில், பிரதமரின் தேர்தல்பிரச்சாரத்திற்காக என்றே உருவாக்கப் பட்டுள்ள ‘நமோ டிவி’, ஒளிபரப்புக்கான உரிமத்தையே பெறவில்லை என்றுகேள்விப்படுகிறோம். அதுமட்டுமல்ல, இத்தொலைக்காட்சி அலைவரிசையைச் சேர்ந்தவர்கள் இதனை ஒளிபரப்புவதற்கான உரிமம் கேட்டு இதுவரை விண்ணப்பிக்கவே இல்லை என்றுகூறப்படுகிறது. அதாவது ‘நமோ டிவி’ஒளிபரப்பு, நாட்டின் சட்டங்களை முற்றிலும் மீறியதாக அமைந்திருக்கிறது.இவ்வாறு உரிமம் கேட்டு, விண்ணப்பிக்காததன் காரணமாக ‘நமோ டிவி’யின் உரிமையாளர் யார்? என்பதையோ அல்லது இந்த டி.வி.யின் ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகளின் உரிமையாளர் யார்? என்பதையோ அறிந்து கொள்ள முடியவில்லை. மார்ச் 31 அன்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப் பட்டுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளில் ‘நமோ டிவி’ இடம் பெறவும் இல்லை. எனினும் இத்தொலைக்காட்சி அலைவரிசை மூலமாக தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அனைத்துமுக்கிய டிடிஎச் நிலையங்களும் அவற்றை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.



இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை அறிவித்த பின்னர் தொடங்கப் பட்டுள்ள இத்தகைய அருவருக்கத்தக்க நிகழ்ச்சிப்போக்கு குறித்து தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.அதேபோல, தூர்தர்ஷனும், அகிலஇந்திய வானொலியும் தேர்தலில் போட்டியிடும் பிரதமரின் பிரச்சார நிகழ்ச்சிகளை அதீதமான முறையில் ஒளி - ஒலிபரப்பி வருவது குறித்து, ஏற்கெனவே தேர்தல்ஆணையத்திற்கு நாங்கள் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம். ஆயினும்தேர்தல் ஆணையம் அவற்றின்மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காததால் அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளைப்பற்றிக் கிஞ்சிற்றும் பொருட் படுத்தாமல் தங்களின் விதிமீறலைத் தொடர்ந்து வருகின்றனர்.பிரதமரின் கொல்கத்தா நிகழ்ச்சிஉரையை, நேரடி ஒளிபரப்பாக அனைத்துதூர்தர்ஷன் அலைவரிசைகளும் ஒளிபரப்பின. இவற்றை தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிபரப்பின. இவ்வாறு நாட்டில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒருதலைப்பட்சமாக இயங்குவதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதுடன், தேர்தல்நடத்தை விதிகளை மீறும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைவலியுறுத்துகிறோம். மற்றொரு பிரச்சனை, தேர்தல்நடத்தை விதி அமலில் இருக்கும்போது, ஊதிய உயர்வு குறித்து, அரசாங்கம் எவ் விதமான அறிவிப்பும் செய்யக்கூடாது என்பதாகும். அவ்வாறு செய்தாலும் அதுதொடர்பாக தேர்தல் முடியும்வரை தொலைக்காட்சி அலைவரிசைகள், அகில இந்திய வானொலி மற்றும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது. ஆனால், மகாத்மா காந்தி தேசியஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச்சட்டத்தின்கீழ் கூலி உயர்த்தப்பட்டிருப்பதாக தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவை ஒளி- ஒலி பரப்பிக்கொண்டிருக்கின்றன. (இது தொடர்பான நகல்களை இணைத்திருக்கிறேன்.) இவை வாட்ஸ் ஆப் செய்திகள் வாயிலாகவும் பரப்பப்பட்டுக் கொண்டிருக் கின்றன. இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையரின் கட்டளைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. எனவே, இவற்றிற்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையம் கடுமையான மற்றும் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.மக்களவைத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கும், தலைமைத் தேர்தல் ஆணையர், அனைத்து அரசியல் கட்சிகள் இடையேயும் சமமாகத்தான் நடந்து கொள்கிறார் என்று மக்கள் நம்புவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.இவ்வாறு நிலோத்பால் பாசு குறிப் பிட்டுள்ளார். (ந.நி.)

;