election-2019

img

மக்களின் உரிமையையும் உயிர்ப் பாதுகாப்பையும் அமெரிக்க அரசின் காலடியில் வைத்து வணங்கி வீழ்ந்த நரேந்திர மோடி -அ.மார்க்ஸ்

மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்ட "123" அணு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த "இழுபறி" முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என ஒபாமாவின் இந்திய வருகையை ஏதோ சிவபெருமானே காட்சி அளித்தது போல தங்க லேஸ் போட்ட லட்ச ரூ கோட் எல்லாம் போட்டுக் கொண்டு மோடி ஆடிய ஆட்டத்தை மறந்து விட முடியுமா? ஆனால் அந்த ஒப்பந்தத்தின் ன் முழு விவரங்களையும் வெளிப்படுத்துவதில் இந்தியத் தரப்பிற்குக் கடைசி வரைக்கும் கொஞ்சம் வெட்கம் இருந்தது.

தனது சாதனைகளைப் பறைசாற்ற வார்த்தைகளை விரயமாக்கத் தயங்காத மோடி அணு ஒப்பந்தம் குறித்த இந்த அறிவிப்பைச் செய்யும்போது மட்டும், ”நமது சட்டம், நமது பன்னாட்டுக் கடப்பாடுகள், தந்திரோபாயம் மற்றும் வணிகச் சாத்தியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன” என்பதோடு நிறுத்திக்கொண்டு உட்கார்ந்தார். இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அப்போதைய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் சற்று எரிச்சலோடு பதிலளித்ததை பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருந்தன.

அணு ஒப்பந்தத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு அமசங்களில் மன்மோகன் சிங் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இழுபறி இருந்துவந்தது.

அணு உலை விபத்து ஏற்படும் பட்சத்தில் நமது மக்களின் நலன்கள் பாதுகாக்கப் படுவதில் எந்தச் சமரசமும் கூடாது எனக் கடுமையான எதிர்ப்புகளைக் கூட்டணிக் கட்சிகள் முன்வைத்ததன் விளைவாக அன்றைய காங்கிரஸ் அரசு 2010ல், “சிவில் அணு ஆற்றல் விபத்துப் பொறுப்புச் சட்டம்” (Civil Nuclear Damage Liability Act) ஒன்றை இயற்ற வேண்டியதாயிற்று. அணு உலையில் விபத்து ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்படும் நம் மக்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை அணு உலை அமைத்தவர்களே ஏற்க வேண்டும் என்பதும், உலை, தொழில்நுட்பம், இடுபொருட்கள் ஆகியவற்றை அளித்தவர்கள் மீது வழக்குத் தொடரும் உரிமைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதும் இச்சட்டத்தின் 46வது பிரிவு மூலம் உறுதி செய்யப்பட்டன.

நாடாளுமன்ற விவாதங்களின் போது இந்தப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குவதற்கு இடதுசாரிக் கட்சிகளோடு சேர்ந்து, அப்போது எதிர்க் கட்சியாக இருந்த பா.ஜ.கவும் அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்டப் பிரிவைத்தான் அமெரிக்கா உள்ளிட்ட அணு உலை வியாபார நாடுகள் எதிர்த்து வந்தன. ஒப்பந்தம் இறுதி நிலையை எய்தாமலேயே கிடந்து வந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்த கையோடு மோடி ஒபாமாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டில் மோடி அரசு இந்த நிபந்தனைகளை விட்டுக் கொடுத்தது., விபத்து நேர்ந்தால் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டம் ஒன்றின் மூலம் அதை ஈடு கட்டலாம் எனவும், அதற்காக இந்திய அரசு 1500 கோடி ரூபாயை முதலீடு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இழப்பீட்டுப் பொறுப்பும் சுமையும் அணு உலை விற்பனை நாடுகளிடமிருந்து இந்திய மக்களிடம் மாற்றப்பட்டது.

தவிரவும் கூடுதல் இழப்பீடு வழங்குதல் தொடர்பான ஒரு ஒப்பந்தத்த்திற்கும் (Convention on Supplementary Compensation) இன்று இந்தியா ஒப்புதல் (ratify) அளித்தது. இது இன்னும் 3000 கோடி ரூபாய் சுமையை இந்திய மக்களின் தோளில் ஏற்றியுள்ளது. எந்த நாட்டில் அணு உலை நிறுவப்படுகிறதோ அந்த நாடு இந்தக் கூடுதல் இழப்பீட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்கிற இந்த ஒப்பந்தத்தை இது வரை ஃப்ரான்ஸ், சீனா, ருஷ்யா, அமெரிக்கா முதலான நாடுகள் ஏற்காமல் எதிர்த்து வந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

விபத்து ஏற்படும் பட்சத்தில் உலை, தொழில்நுட்பம், இடுபொருட்கள் முதலானவற்றை அளித்தவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் உரிமையை வழங்கும் சட்டப் பிரிவை (Law on Tort) பலவீனப் படுத்துவதற்கும் மோடி அரசு ஒத்துக் கொண்டது. இந்தச் சட்ட நிபந்தனைகளைத் தளர்த்தும் வகையில் "பொதுநிலை அறிக்கை” (Memorandum of Law) ஒன்றை வெளியிட வும் மோடி அரச்ய்அரசு ஒத்துக் கொண்டது.

ஒபாமா வருகைக்குப் பல மாதங்கள் முன்னதாகவே மோடி அரசு இந்த முடிவுகளை எடுத்துச் செயல்படத் தொடங்கியதும் தெரிய வந்தது. இது குறித்த முடிவுகளை எடுக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது டெல்லி, வியன்னா, லண்டன் ஆகிய நகரங்களில் கூடி, அணு உலை விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், இன்சூரன்ஸ் பாதுகாப்பு முறைகள், அவற்றில் முதலீடு செய்யத் தேவைப்படும் தொகை என்பவை குறித்தெல்லாம் தனித் தனியே விவாதித்து இரகசியமாக முடிவுகளை எடுத்தது. அவை ஒபாமா வந்தபின் ஒப்பந்த வாசகங்களாக்கப்பட்டன. மக்களைப் பாதிக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையில் மக்களை விலக்கி விட்டு முழுக்க முழுக்க அதிகாரிகளின் துணையுடன் முடிவுகளை மேற்கொண்டு அவற்றை அந்நிய அரசொன்றுடன் ஒப்பந்தமாக்குவது எந்த வகையிலும் ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல என்பது குறித்து அரசு கவலைப்படவில்லை.

அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு இருந்த இழுபறியின் இரண்டாவது அம்சம் இந்திய அணு ஆற்றல் முயற்சிகளை கண்காணிக்கும் உரிமை தொடர்பானது. எந்திரங்கள் மற்றும் இடுபொருட்களை அளிப்பவர்கள் என்கிற வகையில் நமது அணு ஆற்றல் முயற்சிகளைக் கண்காணிக்கும் உரிமையை அமெரிக்கா 123 ஒப்பந்தத்தின் மூலம் வற்புறுத்தி வந்தது.

இறையாண்மைக்கு எதிரானது என இந்தியா இதை மறுத்து வந்தது. இதை இப்போது அமெரிக்கா விட்டுக் கொடுத்துள்ளது (waive) என்பது போல இந்தியத் தரப்பிலிருந்து செய்திகள் கசியவிடப் பட்டன. இனி 123 ஒப்பந்தம் தடங்கலின்றிச் செயல்படும் எனவும், அமெரிக்காவே முன் கை எடுத்து இந்தியா மீது தடை விதித்திருந்த நாடுகளுடன் பேசி அணு வணிகத் தடைகளை நீக்கும் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் இன்று அமெரிக்கா இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி விட்டது. இந்த அம்சத்திலும் விட்டுக் கொடுத்துள்ளது அமெரிக்கா அல்ல இந்தியாதான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அணு அற்றல் தொடர்பான எந்தெந்த முயற்சிகளையெல்லாம் அமெரிக்கா கண்காணிக்க வேண்டும் என இதுகாறும் வற்புறுத்தி வந்ததோ அவை குறித்த விவரங்களை எல்லாம் தானே தந்து விடுவதாக மோடி அரசு வாக்களித்துள்ளதாக இன்று அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது (The Hindu, Feb 5). தாங்கள் வழங்கும் கருவிகள் மற்றும் மூலப் பொருட்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் உரிமைகளை அதிகாரபூர்வமாக விட்டுக் கொடுப்பதாக (executive waiver) ஒபாமா எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்றும் அமெரிக்கத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

"எங்கள் சட்டப்படி நாங்கள் வழங்கும் அணு ஆற்றல் கருவிகள் முதலியவற்றின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. முதல் முறையாக இப்போதுதான் இந்தியா எங்களின் இந்தச் சட்டத் தேவைகளுக்கு இணங்க உரிய தகவல்களைத் தருவது எனவும், தொடர்ந்து உரிய கால இடைவெளிகளில் கலந்தாலோசனைகளுக்கு உடன்படவும் வாக்களித்துள்ளது" என்று அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வெர்மா கூறியுள்ளார். இந்தியாவுக்கென இது தொடர்பாகப் பிரத்தியேகமாக அமெரிக்கா இயற்றியுள்ள 'ஹைட்' சட்டத்தின்படி ஒபாமா அமெரிக்கக் காங்கிரசுக்குப் பொறுப்பானவர். தன்னிச்சையாக அவர் இந்தச் சட்ட நிபந்தனைகளை விட்டுக் கொடுத்துவிட இயலாது. மாறாக இந்தியா தன் நிலைபாட்டை விட்டுக் கொடுத்ததன் விளைவாகத்தான் இன்று ஒபாமா - மோடி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்கா தெளிவாக்கியுள்ளது.

ஆக அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோருது, காரணமானவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்குப் போடுஅது ஆகிய எல்லா உரிமைகளையும் மோடி அரசு இன்று விட்டுக் கொடுத்துள்ளது. சிவில் மற்றும் இராணுவம் தொடர்பான இந்தியாவின் அணு ஆற்றல் முயற்சிகள் அனைத்தையும் அறிந்து கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கதவும் திறந்துவிடப்பட்டுள்ளது.

இப்படியான கண்காணிப்பு உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குவதென்பது நமது படுக்கை அறையுள் ஒரு மூன்றாம் மனிதரை நாற்காலி போட்டு அமரச் செய்வதற்கு ஒப்பு என்கிற விமர்சனம் இது குறித்த விவாதங்களின்போது முன் வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இவர்களையோ இன்னொரு முறை அரசதிகாரத்தில் அமர வைப்பது?

-Marx Anthonisamy


;