election-2019

img

அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா


அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா


இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு முற்றிலும் தல்லைகீழாக்கியது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த கையோடு செய்த முதல் வேலைகளில் ஒன்று "இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்" எனும் மகா பெருமையைத் தட்டிச் சென்றதுதான்.

நரேந்திர மோடி அரசை வெறித்தனமாக ஆதரிக்கும் 'ஸ்வராஜ் மேக்' எனும் இணைய இதழ் இதை ஒட்டி ஒரு சிறப்பிதழை வெளியிட்டது (ஜூன் 5, 2017). இதில் சியோனிசத்தையும், இந்துத்துவத்தையும் இணைத்தும், இஸ்ரேலைக் கொண்டாடியும் மிக விரிவான 11 கட்டுரைகள் உள்ளன.

"இந்துத்துவாவும் சியோனிசமும்: கொடிகள்தான் வேறு வேறு கொள்கைகள் ஒன்றுதான்"

"நேருவிலிருந்து மோடிவரை : இந்திய-இஸ்ரேல் உறவின் நான்கு அத்தியாயங்கள்" 

"இஸ்ரேலின் விவசாயப் பண்ணைகளிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்"

"தொண்டு நிறுவனங்களை வீழ்த்த ஏன் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட வேண்டும்?"

"புதுமைமிகு கலாச்சாரத்தைக் கட்டமைக்க இஸ்ரேல் இந்தியாவுக்கு எதையெல்லாம் கற்பிக்க முடியும்?"

என்பன இக்கட்டுரைத் தலைப்புகளில் சில. இதனூடாக அவர்கள் சொன்னவை:

1. இந்துத்துவம் சியோனிசத்தை அனைத்து அம்சங்களிலும் வழிகாட்டு நெறியாகக் கொள்ளவேண்டும்.

2.இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

3.இஸ்ரேலின் அரசியலையும், வளர்ச்சி அணுகல்முறைகளையும் இந்தியா அப்படியே பின்பற்ற வேண்டும்.

'பயங்கரவாத எதிர்ப்பு, நியோ லிபரல் பொருளாதார வளர்ச்சி எனும் இரு அம்சங்களில் நாங்கள் இணைந்து நிற்போம்.." என வெளிப்படையாக அறிவித்து மோடி அரசு செயல்படத் தொடங்கியது. இன அழிப்புப் பாசிசத்தின் இன்றைய வடிவமாக உள்ள இஸ்ரேலுடன் மிகப் பெரிய அளவில் ஆயுதம் மற்றும் இராணுவ ஒப்பத்தங்களையும் மோடி அரசு செய்யத் தொடங்கியது.

மோடி அரசு பதவி ஏற்ற அதே நேரத்தில் (2014) பலஸ்தீன மக்கள் மீது ஒரு மிகப் பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. 2100 பலஸ்தீனியர்கள் இதில் கொல்லப்பட்டனர். இவர்களில் 70 சதம் சிவிலியன்கள். 500 பேர் குழந்தைகள். பள்ளிகள் வேண்டுமென்றே இலக்காக்ககித் தாக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் பலஸ்தீன இயக்கங்கள் பள்ளிகளிலிருந்து தாக்குதல்கள் எதையும் நடத்தவில்லை என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

ஐ.நா அவையின் மனித உரிமைக் கவுன்சில் முன்னாள் நியூயார்க் உச்சநீதி மன்ற நீதிபதி மேரி மெக்கோவான் டேவிஸ் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை (டேவிஸ் அறிக்கை), " இஸ்ரேல் அரசின் செயல்பாடுகள் போர்க் குற்றங்கள் என்கிற அடிப்படையில் நடவடிக்கைக்குத் தகுந்தவை" என்பதை உறுதிசெய்துள்ளது. இஸ்ரேல் திட்டமிட்டு சிவிலியன் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதை டேவிஸ் அறிக்கை நிறுவியது.

இந்த அறிக்கையைப் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி நடவடிக்கை கோருவது என்றுதான் இன்று ஐ.நா அவை தீர்மானம் இயற்றியுள்ளது. 41 நாடுகளின் முழு ஆதரவுடன் இயற்றப்பட்ட இத்தீர்மானத்தை அமெரிக்கா மட்டும் எதிர்த்துள்ளது. நரேந்திர மோடியின் இந்தியா உட்பட ஐந்து நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை.

இதற்கு மோடி அரசு என்ன விளக்கம் அளித்தது தெரியுமா?. பன்னாட்டு நீதிமன்றம் (ICC) அமைப்பதற்கான ரோம் தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதால் எந்த நாட்டின் மீதும் ICC விசாரணை கோரும் தீர்மானங்களில் இந்தியா பங்குபெறுவதில்லை என்பது மோடி அரசு சொன்ன விளக்கம். ஆனால் சிரியா மீதான ICC விசாரணை குறித்த இரு தீர்மானங்களுக்கு (மார்ச் 23 மற்றும் ஜூன் 1, 2012) இந்தியா ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

மக்கள் முன் எந்தப் பொய்யையும் சொல்ல நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க ஆட்சியும் தயங்காது என்பதற்கு இது இன்னொரு சான்று.

Marx Anthonisamy


;