election-2019

மோடிக்கு தெளிவாக புரிய வைப்பார்கள் தமிழக மக்கள்

திமுகவும் காங்கிரசும் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றன.-இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பேச்சு


(மாலை மலர் 13.04.2019)


தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் வெறுப்பு அரசியல் என்பதை அறிமுகப்படுத்தியதே பாஜகவும் அதன் எஜமானருமான ஆர்எஸ்எஸ்சும் தான் என்பதை சாதாரண மக்கள் முதல் சமூக ஆய்வாளர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.இந்தத் தேர்தல் பரப்புரையில் கூட பாஜகவின் தலைவர் அமித்ஷா, சர்ச்சைக்குரிய ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுவார்கள்’’ என்று ஊர் ஊராகப் பேசி வருகிறார். அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து, மேகாலயாவின் ஷில்லாங் தொகுதி பாஜக வேட்பாளர் சன்போர் சுன்னை என்பவர், அமித்ஷா முன்னிலையிலேயே தீக்குளித்து தற்கொலை செய்வேன் என்று கூறியுள்ளார். மோடியின் மந்திரிசபையில் முக்கிய அமைச்சராக இருக்கும் மேனகா காந்தியும் அவரது அருமை மகன் வருண் காந்தியும் தேர்தல் என்று வந்தாலே தங்கள்தலைவர்கள் வழியில் விஷம் கக்க ஆரம்பித்து விடுவார்கள். சென்ற தேர்தலின்போது, ராமர் கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்களது கையை வெட்டுவேன் என்றார் வருண்காந்தி. இப்போது அம்மா மேனகாவோ, முஸ்லிம்கள் எனக்கு ஓட்டுப்போடாவிட்டால்....! என்று இந்தி சினிமா வில்லன்கள் பாணியில் மிரட்டியுள்ளார். சுல்தான்பூர் மாஜிஸ்ட்திரேட் விளக்கம் கேட்டு மேனகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.நம் தமிழகத்தில் எப்போது வாயைத் திறந்தாலும் வெறுப்புப் பேச்சை உமிழும் எச்.ராஜாவுக்குதேசியச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்க்கும் பாஜக, இப்போது சிவகங்கைத் தொகுதியில் வேட்பாளராகவும் களமிறக்கியுள்ளது.இவ்வளவு ஏன்? இராமநாதபுரத்தில் யாருக்காக வாக்குக் கேட்டு மோடி வருகை புரிந்திருக்கிறாரோ, அந்த நயினார் நாகேந்திரன், அதிமுக-வில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டு, பாஜகவுக்குத் தாவியதோடு, ‘‘இந்துக்களின் எதிரிகளது தலையை வெட்டுவேன் ஜாக்கிரதை’’ என்று பேசி எடனே அதற்கு பரிசாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி பெற்றவர் இன்று வேட்பாளராகவும் வந்துவிட்டவர்.தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து கதைவிடுகிறார் மோடி. ஏப்ரல் 18ன் தீர்ப்பு இனிமேல் தமிழ்நாட்டில் தனக்கு எந்த வேலையும் கிடையாது என்பதை மோடிக்கு தெளிவாக புரியவைக்கும்.


- க.மன்னன்