தென்காசி தொகுதியில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். கிருஷ்ணசாமி இதுவரை கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும் போதெல்லாம் தனி சின்னத்தில் போட்டியிட்டு வந்தார். கூட்டணி அமைத்தாலும் ‘தன்மானத்தை’ இழப்பதில்லை என்று கூறி வந்த கிருஷ்ணசாமி இந்த முறை அதிமுக கூட்டணியில் சேர்ந்து, ‘தன்மானம்’ இழந்து நிற்கிறார்.இந்நிலையில் அவர் எதிர்பார்த்தபடி தென்காசி தொகுதியில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் உட்பட அனைத்து பகுதி களிலும் கிருஷ்ணசாமி பெயர் இல்லாமல் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. தனது காரில் இருந்த புதிய தமிழகம் கட்சிக் கொடியை அகற்றிவிட்டு அதிமுக கொடியை பறக்கவிட்டிருக்கிறார் கிருஷ்ணசாமி. முதல்வர், துணை முதல்வர் இங்கு பிரச்சாரம் செய்யும்போது, கிருஷ்ணசாமியின் பெயரை உச்சரிக்காமல் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லிச் சென்றுள்ளனர்.இவையெல்லாம், தென்காசி தொகுதியில் அதிகமாக வசிக்கிற தனது ஆதரவு தளம் என்று கிருஷ்ணசாமி கருதுகிற தலித் சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் அவருக்கு ஆதரவாக இருந்து வந்த கிராமங்களில்கூட அவருக்கு எதிரான நிலையை தலித் மக்கள் எடுத்து உள்ளனர். அவர் எடுத்த தலித் விரோத - சந்தர்ப்பவாத நிலை அம்பலப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவரின் தோல்வியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஐவி.நாகராஜன்