பொம்மையாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது
விளாத்திகுளம், ஏப்.18-தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மையாபுரம் வாக்குச்சாவடியில் வியாழனன்று காலை 11 மணி அளவில் வாக்குப் பதிவு செய்யும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.இதில் வாக்காளர்கள் நான்கு பேர் கையில் மை தடவிய காரணத்தினால் சுமார் மூன்று மணி நேரங்களாக உள்ளே உட்கார வைக்கப்பட்டனர். பின்னர் சுமார் 2.30 மணி அளவில் புதிய இயந்திரம் கொண்டு வந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இதனால் வாக்குச் சாவடியில் உள்ள ஓட்டுகளில் மாற்றம் ஏற்படுமோ என பொதுமக்கள் சந்தேக த்தில் உள்ளனர்.
மின்னல் தாக்கி இளைஞர் பலி
திருநெல்வேலி, ஏப்.18 -நெல்லை மாவட்டம் கான்சாபுரம் குறவர்மணக்காடு பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சரவணன்(38). இவர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நெல்லை சுற்றுப்புற பகுதியில் நண்பகல் 12 மணி அளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, சரவணன் மீது மின்னல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கள்ள ஓட்டு போட்ட நபருக்கு வலை
நாகர்கோவில், ஏப்.18-கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழனன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கல்லுவிளை பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவர் ஓட்டு போடுவதற்காக பிலாங்காலையில் உள்ள 157-வது எண் வாக்குச் சாவடிக்கு சென்றார். அங்கு அவர் ஓட்டு போட சென்ற போது, அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ‘நான் இப்போதுதான் ஓட்டு போட வருகிறேன். அதற்குள் என் ஓட்டை போட்டு சென்றது யார்’ என கேட்டார். இதையடுத்து அஜினுக்கு பதிலாக வேறு யாரோ அவரது ஓட்டை இட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து கள்ள ஓட்டு போட்ட நபரை தேடி வருகின்றனர்.அடையாளம் தெரியாத நபர் வாக்களிக்க வந்த போது முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
குமரி மாவட்ட பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை
நாகர்கோவில், ஏப். 18 -நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களின் போது செய்தியாளர்கள், பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சென்று செய்தி சேகரிக்க தேர்தல் ஆணையத்திலிருந்து அடையாள அட்டை வழங்குவது வழக்கம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிலரை பத்திரிகை புகைப்படக் காரர்களுக்கு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. பல வருடங்களாக பணிபுரியும் முன்னணி பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படாததால் அதிர்ச்சியடைந்த புகைப்படக்காரர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டனர். மேலும் இரண்டு பத்திரிகை நிருபர்களுக்கு அவர்களது அடையாள அட்டையில் அவர்களது புகைப்படத்துடன், வேறு நபரின் பெயருடன், ஓட்டுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியை தொடர்பு கொண்டனர். அதற்கு அவர் மழுப்பலான பதிலை கூறியதுடன், ‘நீங்கள்தான் தவறாக பெயரை எழுதி கொடுத்திருப்பீர்கள்’ என பழியை செய்தியாளர்கள் மீது போட்டார். இதையடுத்து செய்தியாளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியான பிரசாந்த் வடநேரேவை சந்தித்து புகார் அளித்தனர். ஆனாலும் அவர்களுக்கு கடைசி வரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை. புகைப்படக்காரர்களுக்கு அடையாள அட்டை வழங்காமலும், செய்தியாளர்களின் அடையாள அட்டையில் தவறான பெயர்களை எழுதியும் தேர்தல் ஆணையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் அலட்சியமாக செயல்படுவது, தங்களுக்கு வேண்டிய நபர்களுக்காக அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளி வீட்டில் நகை, பணம், மின்சார அடுப்பு, கைபேசி கொள்ளை
நாகர்கோவில், ஏப்.18-கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கநாடார் (49). தொழிலாளியான இவர் புதன்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு தனதுமனைவியுடன் மரவேலைக்கு சென்றிருந்தார். பின்னர் இரவு அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கநாடார் ஈத்தாமொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உதவி இய்வாளர் மாரிமுத்து மற்றும் காவல்துறையினர் வீட்டினுள் சென்று பார்த்த போது, அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன.மேலும் ஒன்றரை பவுன் எடையுள்ள தங்க செயின், அரை பவுன் மோதிரம் ஆகியவையும் மற்றொரு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம், கைபேசி, சமையல் அறையில் இருந்த மின்சார அடுப்பு ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், மரபீரோ ஆகிய இடங்களில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையர்களின் 2 கைரேகை சிக்கியது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.