ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் வன உரிமைகள் சட்டம் குறித்து மிகவும் விரிவான முறையில் குறிப்பிட்டார். அதே சமயத்தில் புல்வாமா நிகழ்வின்மூலமாக ஆட்சியாளர்கள் வாக்குகளை வென்றுவிட முடியாது என்றும் மக்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாய நெருக்கடியின் பாதிப்புகள் வேரூன்றி இருக்கின்றன என்றும் அவைதான் தேர்தல் முடிவைத் தீர்மானித்திடும் என்றும் கூறியுள்ளார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:
கேள்வி: சனிக்கிழமையன்று நீங்கள் ராகுல் காந்தியை சந்தித்திருக்கிறீர்கள். கூட்டணி தொடர்பாக எழுந்த பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டன என்றும் கூறியிருக்கிறீர்கள். எனவே, அதன் முடிவுகளை ஏன் அறிவிக்கவில்லை?
ஹேமந்த் சோரன்: எங்கள் விருப்பம், இக்கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகளையும் இணைத்திட வேண்டும் என்பதாகும். இவற்றில் பல கட்சிகள் இம்மாநிலத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வருபவை. மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகளில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவை. எனவே அதுகுறித்தும் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் ‘குருஜி’ முன்னாள் முதல்வர் சிபு சோரன் முன்னிலையில் நாங்கள் வெளியிடவிருக்கும் அறிவிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதுகிறோம். எனவேதான் அடுத்த சில தினங்களில் அவரது முன்னிலையில் கூட்டணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் நீங்கள் முன்னிறுத்தக்கூடிய முக்கிய பிரச்சனைகள் என்ன?
சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக இம்மாநிலத்தில் நிலம் கையகப்படுத்தல் ஒரு பெரும் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது. பழங்குடியினர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்சமயம் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ள போதிலும் கூட, மாநிலத்தில் உள்ள 11 வன உயிரின சரணாலயங்களிலிருந்து பழங்குடியினர் வெளியேற்றப்படுவதற்குப் பெரிய அளவில் சதி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு விசித்திரமான வளர்ச்சி மாடலாகும். இது எந்தவிதத்திலும் மக்களுக்கு நன்மை பயக்கப் போவதில்லை. இத்துடன் நாட்டை மிகப் பெரிய அளவில் கவ்விப் பிடித்திருக்கிற வேலையில்லாத் திண்டாட்டத்தையும் முன்னிறுத்திப் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறோம்.
புல்வாமா தாக்குதலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிப் போக்குகளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை மழுங்கடித்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
பிரதமர் மோடியை நான் கேட்க விரும்புவது என்னவென்றால், நாட்டைப் பாதுகாத்திட ராணுவம் இருக்கும்போது, நீங்கள் ஏன் உங்கள் பொங்கிய மார்புடன் அங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? நம் எல்லைகளைப் பாதுகாத்திட நம் ராணுவத்தினரால் முடியும். ஆனால் நாட்டைப் பாதுகாத்திடும் விதத்தில் உங்கள் கொள்கைத் திட்டங்கள் என்ன? விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வேலையில்லாமல் இருக்கின்றார்கள். அந்தக் கேள்விகளுக்கு உங்களால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை, மிஸ்டர் மோடி?
பிணங்களின் மீது நடத்தப்படும் அரசியலால் வாக்குகளை வெல்ல முடியாது. நான் உங்களுக்கு 200 சதவீதம் உறுதியாகச் சொல்கிறேன்: பாஜகவினால் நாட்டையும் பாதுகாப்புடன் நடத்த முடியவில்லை, அரசையும் நடத்த முடியவில்லை. புல்வாமாவில் ஒரு பயங்கரவாதியின் தற்கொலைத் தாக்குதலால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஜவான்கள் இறந்துள்ளார்கள். நாட்டிற்குள்ளும் பசி-பஞ்சம்-பட்டினியால் விவசாயிகள் இறந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகளின் மகன்கள் ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறமையின்மை காரணமாக நாள்தோறும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் 1.25 பில்லியன் மக்கள் (125 கோடி மக்கள்) இருக்கிறார்கள். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டைக் காப்பவர்களுக்குத் தெரியும் நாட்டை எப்படிக் காக்க வேண்டும் என்று. எனவே அவர்களைத் தங்கள் கடமையைச் செய்ய விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள். யுத்தம் மட்டும் உங்கள் வேலை அல்ல. பாஜக இத்தகைய வெப்பநிலையை ஆறவிடாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. ஏனெனில் ஓர் அமைதியான நல்லிணக்கமான சூழ்நிலை நிலவினால் பாஜகவினரால் தங்கள் அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியாது. அது ஒரு வாய்ச்சவடால் கட்சி. பொதுக்கூட்டங்களில்கூட ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் “மோடி”, “மோடி” என்று கத்துவதைக் காண முடியும். ஆனால், இப்போது இவர்களின் இத்தகைய உத்திகளை மக்கள் நன்கு அறிந்துகொண்டுவிட்டார்கள்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி, பாஜக கூட்டணிக்கு உண்மையில் சவாலாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஜார்க்கண்டைப் பொறுத்தவரை நாங்கள் நிச்சயமாக பாஜகவிற்கு தற்போது நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பெரும் சவாலாக விளங்குவோம்.
- தமிழில்: ச. வீரமணி